பெண் அதிகாரி அதிரடியால் இன்ஸ்பெக்டர்கள் கலக்கம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

பெண் அதிகாரி அதிரடியால் இன்ஸ்பெக்டர்கள் கலக்கம்!

Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (2)
Share
 பெண் அதிகாரி அதிரடியால் இன்ஸ்பெக்டர்கள் கலக்கம்!

''பதவி ஏத்துக்கறதுக்கு முன்னாடி, மூத்த நிர்வாகிகளிடம் வாழ்த்து வாங்கியிருக்கார் ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.''யாரு, என்ன பதவியை ஏத்துக்கிட்டா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''த.மா.கா., தலைவர் வாசன், அ.தி.மு.க., தயவுல, ராஜ்யசபா, எம்.பி., ஆகிட்டாரோல்லியோ... சமீபத்துல அவர், டில்லிக்கு போய் பதவி ஏத்துண்டார் ஓய்...''அதுக்கு முன்னாடி, தன் கட்சியின் மூத்த தலைவர்களான, ஞானதேசிகன், கோவை தங்கம், என்.எஸ்.வி. சித்தன் மாதிரி முக்கிய பிரமுகர்களை போன்ல கூப்பிட்டு, ஆசி வாங்கியிருக்கார்... இதுல, அவாளுக்கு ரொம்பவே மகிழ்ச்சியாம்...

''வாசன் கட்சி நிர்வாகிகள் பலரும், அவர் பதவி ஏத்துண்டதை கொண்டாடற விதமா, ஆதரவற்றோர் இல்லங்கள்ல உணவு, இனிப்புகள் வழங்கியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''மதுரை, பா.ஜ.,வினர் ரொம்பவே உற்சாகத்துல இருக்காவ வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''அதுக்கான காரணத்தையும், நீங்களே சொல்லிடுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''பா.ஜ.,வுல, சமீபத்துல மாநில நிர்வாகிகள் நியமனம் நடந்துச்சே... சினிமா பிரபலங்கள் உட்பட பலருக்கும், பதவிகளை வாரி வாரி வழங்குனாங்கல்லா...''அந்த வகையில, மதுரை நகர், புறநகர் மாவட்டத்துலயும், காலியா இருந்த பல பதவிகளுக்கும், நிர்வாகிகளை நியமிச்சிட்டாவ வே...

''கட்சியை அமைப்பு ரீதியா பலப்படுத்த, 100க்கும் மேற்பட்டவங்களுக்கு பதவிகளை அள்ளி குடுத்திருக்காவ...''அதே நேரம், இந்தப் பதவிகளை, யாரும் எந்த முணுமுணுப்பும் காட்டாம ஏத்துக்கிட்டதுல, மதுரை மூத்த நிர்வாகிகள், பரம திருப்தியில இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''பெண் போலீஸ் அதிகாரியால, எல்லாரும் வெலவெலத்து போயிருக்காங்க...'' என, புதிய தகவலை பேச ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''தர்மபுரி மாவட்டம், அரூர் சப் - டிவிஷன்ல, 10 போலீஸ் ஸ்டேஷன்கள் இருக்குங்க... இந்தப் பகுதிகள்ல, கஞ்சா, லாட்டரி, சட்டவிரோத மது விற்பனை எல்லாம், சூப்பரா நடந்துட்டு இருந்துச்சுங்க...''மாமூல் கரெக்டா போயிட்டு இருந்ததால, போலீசாரும் கண்டுக்கலைங்க...

இந்த நிலையில, விருதுநகர்ல, பயிற்சி டி.எஸ்.பி.,யா பணியை முடிச்ச தமிழ்மணின்னு ஒரு பெண்ணை, ஒரு மாசத்துக்கு முன்னாடி, அரூர், டி.எஸ்.பி.,யா நியமிச்சாங்க...''இவங்க, சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு தெரியாம, போலீசாரை அனுப்பி கஞ்சா, மது விற்பனை செய்றவங்களை அதிரடியா கைது பண்ணிடுறாங்க...

திடீர் திடீர்னு ஸ்டேஷன்கள்ல அதிரடி ஆய்வுகளை நடத்தி, இன்ஸ்பெக்டர்களை அலற விடுறாங்க...''ஒரு பக்கம் வருமானமும் கட்டாகி, மறுபக்கம், எப்ப டி.எஸ்.பி., வருவாங்களோங்கிற கலக்கத்துல, இன்ஸ்பெக்டர்கள் எல்லாம் துாக்கம் இல்லாம தவிக்கிறாங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.

''நம்ம ஆட்களுக்கு தான், நல்லா வேலை செய்றவங்களை பிடிக்காதுல்லா...'' என சிரித்தபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X