டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (1)
Share
 'டவுட்' தனபாலு

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார்:உதயநிதி ஸ்டாலின் இதுவரை வெளியூர் சென்றதற்கான, இ - பாசை காட்டவில்லை. சட்டத்தை மதித்து சென்றால் நல்லது. சட்டத்தை மதிக்காமல் சென்றால் பிரச்னை தான். தவறு செய்தோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படிப்பட்ட அரசு தான், அ.தி.மு.க., அரசு!

'டவுட்' தனபாலு: உதயநிதி, 'இ - பாஸ்' பெறாமல், சாத்தான்குளம் சென்று வந்தார். அதை பெரிய அளவில் கட்சிகள் எடுத்துக் கொள்ளவில்லை; அ.தி.மு.க., மட்டும் தான் அலறியது. அதுபோல, ரஜினியின், இ -பாஸ் விவகாரத்தையும், மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால், இ - பாஸ் என்பதே, மக்களுக்கு எரிச்சலையும், கோபத்தையும் வரவழைக்கிறதோ என்ற, 'டவுட்' உள்ளது!

***

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலையின் ரத்தச்சுவடுகள் காயும் முன், தென்காசியில் மற்றொரு மரணம். தென்காசி அருகே, அணைக்கரை முத்துவை, வனத்துறையினர், சட்டை கூட அணிய விடாமல், இரவில், வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளனர். வன காவலர்களின் காவலிலேயே அவர் இறந்துள்ளார். சட்டத்தின் ஆட்சி தானா இது?

'டவுட்' தனபாலு: இது போன்ற கொடூர மரணங்களுக்கு காரணமானவர்கள் மீது, ஆட்சியாளர்கள் கடும் நடவடிக்கை எடுக்காததால் தான், இது போன்ற குற்றங்கள் தொடர்கின்றனவோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. மேலும், நீங்கள் சொல்வது போல, இது போன்ற குற்றங்கள், சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா என்ற, 'டவுட்'டையும் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது!

***

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: உலகில் எந்த ஆட்சியாளருக்கும், ஆயுதங்களுக்கும் இல்லாத சக்தி ஊடகங்களுக்கு உண்டு என்றும், ஆயுதங்களாலும், அதிகார வலிமைகளாலும் சாதிக்க முடியாத விஷயங்களை கூட ஊடகங்கள் சாதிக்கும். பா.ம.க., தமிழகத்தை ஆண்டால், அது எந்தளவுக்கு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்பதை, தமிழக மக்களுக்கு சொல்லும் கடமை ஊடகங்களுக்கு உண்டு.

'டவுட்' தனபாலு: உங்களின் இந்த வேண்டுகோளை கேட்கும் போது, ஊடகங்களின் பெருமை நன்கு புலப்படுவதுடன், அதனுள் ரகசியமாக அடங்கியுள்ள, 'அன்புமணி ராமதாசை, முதல்வராக்க வேண்டும்' என்ற கோரிக்கையும் உள்ளது, 'டவுட்' இல்லாமல் புரிகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X