சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

நம்புங்கள்... ஸ்டாலினுக்கு நடிக்க தெரியாது!

Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 நம்புங்கள்... ஸ்டாலினுக்கு நடிக்க தெரியாது!

என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நான், ஹிந்து மத விரோதி என, சில விஷமிகள் தவறாக பிரசாரம் செய்கின்றனர். திருவாரூர் கோவில் தேரோட்டம் முதல், மயிலாப்பூர் கோவில் தெப்பக்குளம் துார் வாருதல் வரை, ஹிந்து கோவில்களுக்கு ஏகப்பட்ட காரியங்கள், தி.மு.க., தலைமையிலான ஆட்சி செய்துள்ளது' என, அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

அவர், மேலும் சில விஷயங்களை சொல்ல மறந்து விட்டார்...ஸ்டாலின் மனைவி போகாத கோவில்கள் இல்லை; வணங்காத தெய்வங்கள் இல்லை... அவரின் தெய்வ பக்தியைப் பார்த்து, காஞ்சி அத்தி வரதரே அகம் மகிழ்ந்து போனார்.மங்களத்தின் அடையாளமாக, எப்போதும் மஞ்சள் துண்டு அணிவதை கருணாநிதி பெருமையாக நினைத்தார்.

இவரது குடும்பத்தின், தெய்வப் பக்தியைக் கேள்விப்பட்டு, புட்டபர்த்தி சாய்பாபாவே, இவரது இல்லத்திற்கு வந்து ஆசிர்வதித்தாரே... இவர்களை பார்த்தா, 'ஹிந்து மத விரோதி' எனக் கூறுகிறீர்!கண்ணனை, 'உள்ளம் கவர்ந்த கள்வன்' என, பக்தர்கள் புகழ்வது இல்லையா... அந்த அர்த்தத்தில் தான், ஹிந்துக்களை திருடர்கள் என, செல்லமாக புகழ்ந்தார், கருணாநிதி; இது தவறா?

கருணாநிதியின் தந்தை முத்துவேலர், கோவிலில் நாதஸ்வரம் வாசித்து, இறைவனை மகிழ்வித்தாரே... அவரது குடும்ப உறுப்பினர்களையா, 'நாத்திகவாதிகள்' என புரளி கிளப்புகிறீர்!கருணாநிதி, எங்கேனும் பிள்ளையார் சிலையை உடைத்தாரா, ஹிந்து கடவுள்களை அவமதித்தாரா... ஈ.வெ.ரா.,வின் தொண்டர்கள், அந்த இழிசெயல்களைச் செய்த போது, கருணாநிதி மனம் கலங்கி, அழுது கண்ணீர் வடித்தாரே... அது அந்த, 'இன்ஜினியர்' ராமனுக்கு மட்டுமே தெரியும்!மொத்தத்தில், சிவாஜி கணேசன் போல, ஸ்டாலினுக்கும் நடிக்கத் தெரியாது என்பதையும் நம்புங்கள்!

***


தங்கம் கடத்தலை தடுக்கணும்!ஈ.எஸ்.சந்திரசேகரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு பக்கம், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து, வரலாறு காணாத உச்சத்தை தொட்டு, நடுத்தர மக்கள் அதை நெருங்க முடியாத அளவிற்கு உள்ளது. மறுபக்கம், ஆண்டிற்கு, 2 லட்சம் கிலோ தங்கம் கடத்தப்படுவதாக வரும் செய்தி, நம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. தங்க கடத்தல் விவகாரம், கேரள அரசிற்கு குந்தகத்தை ஏற்படுத்தி விட்டது.கேரளாவை மையமாகக் கொண்டு, யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் பெயரில், தங்கம் கடத்தப்பட்டுள்ளது, தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. இது, கேரள அரசின் வயிற்றில் புளியைக் கரைக்கும் என்பதில், எவ்விதமான சந்தேகமும் இல்லை.

'இ- - காமர்ஸ்' எனப்படும், 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்கள் மூலமாகவும், தங்கம் கடத்தப்படுவது, மேலும் அதிர்ச்சி அளிக்கும் தகவல்.தங்கம் கடத்துவதற்கு, இந்தியா மிக வசதியாக இருப்பதாக, கடத்தல் மன்னர்கள் சொல்லியிருப்பது, நம் நாட்டிற்கே தலைகுனிவு.

எவ்விதமான தடங்கலும் இல்லாமல், இவர்களால் எப்படி தங்கத்தை கடத்த முடிந்தது என்று ஆராய்ந்தால், அரசு அதிகாரிகள் விலை போய் இருப்பது, தெரிய வரும். வேலியே பயிரை மேய்ந்த கதையாகத் தான், இந்த தங்கம் கடத்தல் விவகாரமும் நடந்துள்ளது.

எத்தனை ஆன்டுகளாக, எத்தனை டன் தங்கம் கடத்தப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை. இது தொடர்பான விசாரணையில், எந்தெந்த பெரிய புள்ளிகள் சிக்கப் போகின்றனரோ?இத்தருணத்தில், தங்கம் கடத்தல் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், உரிய பாதுகாப்பு அளிக்க, கேரள முதல்வர் உத்தரவிட வேண்டும்.

அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் விசாரணை வளையத்திற்குள் வந்தால், அதற்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.தங்கம் கடத்தலால், நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துவிடும். இதை தடுக்க வேண்டிய கடமை, மத்திய - மாநில அரசுகளுக்கு உண்டு.

***


எதுவும் நடக்கலாம்!


மகிழ்நன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலா, அடுத்த ஆண்டு விடுதலை பெறப் போகிறார் என்ற செய்தியை கேட்டவுடன், தமிழக அமைச்சர்களுக்கு, பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது.

ஒரு அமைச்சர், 'சசிகலாவுக்கு, இங்கு இடம் இல்லை. நேற்றும், இன்றும், நாளையும் அதே நிலைப்பாடு தான்' என்கிறார். இன்னொருவர், 'சசிகலாவிடம், அ.தி.மு.க.,வை ஒப்படைப்பது பற்றி, கட்சித் தலைமை முடிவு செய்யும்' என்கிறார். அமைச்சர்கள், இப்போதே தடுமாற ஆரம்பித்து விட்டனர். ஆளாளுக்கு, ஒரு கருத்துகளை பேசி வருகின்றனர். ஆளுங்கட்சி, எம்.எல்.ஏ.,க்களின் மனதில் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை.

அ.தி.மு.க., தலைமையிலான ஆட்சி முடியும் தருவாயில், சிறையிலிருந்து சசிகலா வெளியே வருவதால், நடப்பு ஆட்சிக்கு எந்த பிரச்னையும் இருக்காது.வரும் பொதுத் தேர்தலில் தான், அ.தி.மு.க., பெரும் சவாலை சந்திக்கும். கட்சியின் வட்ட, மாவட்ட செயலர்களுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் பேரம் பேசப்பட்டால், அவர்கள் அணி மாற மாட்டார்கள் என்பதற்கு, எந்த உத்தரவாதமும் இல்லை.

ஏனெனில், அரசியல்வாதிகளுக்கு, பணம் தான் குறிக்கோள்; மக்கள் நலனும், கட்சியின் கட்டுப்பாடும் முக்கியமல்ல. யார் எக்கேடு கெட்டால் என்ன... வங்கி கணக்கில், பணம் வந்து சேர்ந்ததா என்பது தான், முக்கியம்!திராவிட கட்சிகளின் பிடியில், தமிழக ஆட்சி சிக்கியதில் இருந்து பணமும், அதிகாரமும் தான் முக்கியத்துவம் பெற்று விட்டது.

அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா பொறுப்பேற்றால், அது அக்கட்சியின் தலைவிதி. ஆனால் அவரை, ஆட்சியில் அமர வைப்பது என்பது, தமிழர்களின் கைகளில் தான் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, அதுவும் நடக்கலாம்; ஏனெனில், நம் வரலாறு அப்படி!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
03-ஆக-202023:28:42 IST Report Abuse
madhavan rajan கடத்தல் தங்கம் வருவது நின்றுவிடும் என்ற அச்சத்தில் தங்கம் விலை இப்படி எகிறுகிறது என்று நினைக்கிறேன்.
Rate this:
Cancel
Raghavan - chennai,இந்தியா
28-ஜூலை-202009:19:39 IST Report Abuse
Raghavan சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் 6 வருடங்களுக்கு தேர்தலில் நிற்க முடியாது. கட்சியின் பின்னால் இருந்து ஆட்சியை நடத்தலாம்.
Rate this:
Cancel
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
28-ஜூலை-202007:46:16 IST Report Abuse
Subbanarasu Divakaran தமிழ் நாடு என்ன. நாடு முழுவதும் லஞ்சம் கொலை கூட்டல் போராளிகளை தேர்ந்து எடுப்பது நிற்க வேண்டும். நல்ல மனிதர்கள் வேண்டும் காசு வீசுவார்கள் அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X