கரூர்: ஊரடங்கு உத்தரவால், செம்மறி ஆடுகள் விற்பனை பாதித்துள்ளதாக விவசாயிகள், வியாபாரிகள் கவலையில் உள்ளனர். பக்ரீத் பண்டிகையையொட்டி, சிறப்புச் சந்தைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டத்தில், க.பரமத்தி, அரவக்குறிச்சி, கடவூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை வட்டாரங்களில், மூன்று லட்சம் செம்மறி ஆடுகள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. ஆடுகளை வளர்ப்பவர்கள், விளை நிலங்களில் விளைவிக்கப்படும் பயிர்களுக்கு ஏற்ப, மேய்ச்சலுக்காக இடப்பெயர்ச்சி செய்து பட்டி அமைத்து வளர்க்கின்றனர். ஆனால் மார்ச், 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், கிராமப்புறங்களில் சந்தைகள் நடக்கவில்லை. கோவில் திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளிலும், ஆட்டிறைச்சி அசைவ உணவு உண்டு. ஊரடங்கு உத்தரவால், அனைத்தும் தடைபட்டுள்ளது.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: ஊரடங்கால், மே இறுதி வரை இறைச்சி கடைகள் இல்லை. ஜூலையில் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டாலும், அதிகளவில் கட்டுப்பாடுகள் உள்ளன. மீண்டும் பொது முடக்கம் வந்து விடுமோ என்ற அச்சத்தில், செம்மறி ஆடுகளை மொத்தமாக வாங்கிச் செல்ல, வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாக வரும் ஆகஸ்ட், 1ல் பக்ரீத் பண்டிகைக்காக குர்பானி கொடுக்க, ஒரு ஆடு, 7,000 முதல், 10 ஆயிரம் வரை விலை கொடுத்து மொத்த வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால், ஊரடங்கு உத்தரவு, வருமான இழப்பு காரணமாக குர்பானி முறைக்கு, அதிகளவில் ஆடுகள் விற்பனையாகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும், வரும் மாதங்களில், மழை பெய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதால், செம்மறி ஆடுகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால், ஆடுகள் விற்பனை இல்லாத நேரத்தில், கூடுதல் செலவு செய்து தடுப்பூசிகள் போட வேண்டிய நிலை உள்ளது. எனவே, பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகளை விற்பனை செய்ய, சிறப்புச் சந்தைகளை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE