பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.4,300 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்ட பணிகளை துவக்காத வாரியம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சென்னை : 'மின் பயன்பாட்டை துல்லியமாக கணக்கெடுக்க, 4,300 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டம் செயல்படுத்தப்படும்' என, முதல்வர் அறிவித்து, நான்கு மாதங்கள் ஆகியும், அதற்கான பணிகளை, மின் வாரியம் துவக்காமல் உள்ளது.

தமிழக மின் வாரியம், வீடு மற்றும் கடைகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, 'ஸ்டேடிக்' மீட்டர் பொருத்துகிறது. மின் ஊழியர்கள் நேரில் சென்று, மீட்டரில் பதிவாகிஉள்ள மின் பயன்பாட்டை கணக்கெடுத்து, கட்டணத்தை நுகர்வோரிடம் தெரிவிக்கின்றனர்.சிலர், நுகர்வோரிடம், 'ஆதாயம்' பெறுவதற்காக, அதிக மின் பயன்பாட்டை, குறைத்து கணக்கெடுப்பது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதால், வாரியத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, பல மாநிலங்களில், ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுகின்றன.

அந்த மீட்டரில் தொலைதொடர்பு வசதி ஏற்படுத்தப்பட்டு, அலுவலக சர்வருடன் இணைக்கப் படும். இதனால், மின் பயன்பாடு கணக்கு எடுக்கும் தேதி வந்ததும், தானாகவே கணக்கெடுத்து, எஸ்.எம்.எஸ்., வாயிலாக நுகர்வோருக்கு தெரிவிக்கப்படும்.'ஸ்மார்ட் மீட்டர் திட்டம், சென்னையில், 42 லட்சம் நுகர்வோருக்கு, 4,300 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்; பிற மாவட்டங்களில் படிப்படியாக செயல்படுத்தப்படும்' என, சட்டசபையில், முதல்வர் இ.பி.எஸ்., 110 விதியின் கீழ், மார்ச், 19ல் அறிவித்தார்.

அவர் அறிவித்து, நான்கு மாதங்களாகியும், இதுவரை, திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை, மின் வாரியம் துவக்காமல் உள்ளது.இது குறித்து, மின் ஊழியர்கள் கூறியதாவது: ஊரடங்கால், குறித்த காலத்தில் கணக்கு எடுக்காததால் தான், அதிக மின் கட்டணம் வந்ததாக நுகர்வோர் தகராறு செய்கின்றனர். 'ஸ்மார்ட் மீட்டர்' இருந்திருந்தால், அந்த பிரச்னை வந்திருக்காது. இனியும் தாமதிக்காமல், அத்திட்டத்தை, விரைவில் செயல்படுத்த வேண்டும். அதில், மாதந்தோறும் பயன்பாட்டை கணக்கு எடுக்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:'ஸ்மார்ட் மீட்டர்' தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பது சிரமமான பணி; அதில், வேகம் காட்ட முடியாது.சோதனை ரீதியாக, சென்னை, தி.நகரில், 1.41 லட்சம் இணைப்புகளில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணி நடக்கிறது.அதன் செயல்பாட்டை பொறுத்து, மற்ற பகுதிகளில், அத்திட்டம் விரிவாக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X