ராஜஸ்தான் காங்கிரசுக்கு எதிராக மாயாவதி கொந்தளிப்பு! எம்.எல்.ஏ.,க்களை திருடியதாக பாய்ச்சல்| Mayawati to move SC against BSP-Congress merger in Rajasthan | Dinamalar

ராஜஸ்தான் காங்கிரசுக்கு எதிராக மாயாவதி கொந்தளிப்பு! எம்.எல்.ஏ.,க்களை திருடியதாக பாய்ச்சல்

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (23)
Share
ராஜஸ்தான், காங்கிரஸ், மாயாவதி, கொந்தளிப்பு, Mayawati, Supreme court, SC, BSP, Congress, merger, Rajasthan

''ராஜஸ்தானில், எங்கள் கட்சி, எம்.எல்.ஏ.,க்களை திருடிவிட்டு, எங்களையே குற்றம் சொல்வதா... காங்கிரசை சும்மா விட மாட்டேன். சுப்ரீம் கோர்ட் வரை செல்வதற்கும் தயாராக உள்ளேன்,'' என, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கொந்தளித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி, சில தினங்களுக்கு முன், 'ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கலைத்துவிட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண் டும்' என, கூறியிருந்தார்.


குற்றம்


இதில் கடுப்பான காங்கிரஸ் மேலிடம், 'பா,.ஜ.,வின் கைப்பாவையாக மாயாவதி செயல்படுகிறார். வழக்குகளை காரணம் காட்டி மிரட்டுவதால், பா.ஜ.,வுக்கு அவர் துணை போகிறார்' என, குற்றம்சாட்டியது. இதற்கு பதிலடியாக, நேற்று நிருபர்களிடம், மாயாவதி கூறியதாவது:ராஜஸ்தானில் தேர்தல் முடிவுகள் வெளியானதும், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆறு எம்.எல்.ஏ.,க்களும், காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பர் என, அறிவித்தேன்.

அந்த நன்றி கூட இல்லாமல், எங்கள் கட்சியை சிதைக்கும் நோக்கில், தவறான உள்நோக்கத்துடன் ஆறு பேரையும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாக, முதல்வர் அசோக் கெலாட், காங்கிரசில், இணைத்தார். இதையேதான், முந்தைய ஆட்சியின்போதும், அவர் செய்தார். அப்போதே, நான் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்திருக்க முடியும்.

ஆனால், காங்கிரசுக்கும், முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், சரியான பாடம் புகட்ட, தகுந்த நேரத்திற்காக காத்துஇருந்தேன்.அதற்கான நேரம், இப்போது வந்துவிட்டது. கோர்ட்டிற்கு போகப்போகிறேன். என் கட்சி எம்.எல்.ஏ.,க்களை திருடிய காங்கிரசை, இனியும் சும்மாவிட மாட்டேன். முடிந்தால், சுப்ரீம் கோர்ட் வரையில், செல்லவும் தயாராக உள்ளேன்.


உத்தரவு


சட்டசபை கூடி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தால், எங்கள் கட்சியிலிருந்து சென்ற ஆறு பேரும் அரசுக்கு எதிராகத்தான், ஓட்டுப்போட வேண்டும். இதற்கான, கொறடா உத்தரவும் போடப்பட்டு உள்ளது.அதற்கு மாறாக, அவர்கள் நடந்தால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கப்படுவர். காரணம், காங்கிரசுக்கு ஆதரவளித்தால், அது, நியாயமற்றது மட்டுமல்ல, மக்களின் தீர்ப்புக்கு விரோதமானதும் கூட.இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து காங்கிரசில் இணைந்த ஆறு எம்.எல்.ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்ய முடியாது' என, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பா.ஜ., - எம்.எல்.ஏ., மதன் திலாவார், புதிதாக, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே இவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, கூடுதல் விபரங்களுடன் புதிய மனுவை அவர் தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா கூறுகையில், ''காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஓட்டளிக்கும்படி, பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,க்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள கொறடா உத்தரவு, ஜனநாயகத்தை படுகொலை செய்யும் முயற்சி. ''பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.


சட்டசபையை கூட்டுங்கள்:அமைச்சரவை வலியுறுத்தல்


ராஜஸ்தான் மாநில அமைச்சரவை கூட்டம், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது. இதில், சட்டசபையை கூட்டத்தை கூட்டுவதற்கு, கவர்னர் கல்ராஜ் மிஷ்ரா விதித்த நிபந்தனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சிங் கூறியதாவது: துணை முதல்வராக இருந்த எங்கள் கட்சியின் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரும் தனி அணியாக செயல்படுகின்றனர். பா.ஜ., வின் உத்தரவின்படி, காங்., ஆட்சியை கவிழ்க்க, அவர்கள் சதி செய்கின்றனர். இதனால், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, நாங்கள் விரும்புகிறோம்.

கவர்னர் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்து, நாங்கள் அளித்த பரிந்துரைகளை திருப்பி அனுப்புகிறார். கவர்னருடன் மோதல் போக்கை பின்பற்ற விரும்பவில்லை. வரும், 31லிருந்து சட்டசபை கூட்டத் தொடரை துவக்க வேண்டுமென கவர்னருக்கு, அமைச்சரவை சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை; இதை கவர்னர் ஏற்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையே, சட்டசைபையை கூட்டுவது தொடர்பாக புதிய அறிக்கையை, கவர்னருக்கு, மாநில அரசு அனுப்பி வைத்துள்ளது.


அரசுக்கு 'நோட்டீஸ்'


ராஜஸ்தானின் சஞ்சீவனி கடன் கூட்டுறவு சங்கத்தில் நடந்த, 884 கோடி ரூபாய் முறைகேடு குறித்த வழக்கில், மத்திய ஜல சக்தி துறை அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான கஜேந்திர சிங் ஷெகாவதுக்கு தொடர்புள்ளதாக கூறப்பட்டது.

இது குறித்து விசாரணை நடத்தும்படி, ராஜஸ்தான் போலீசாருக்கு, ஜெய்ப்பூர் நகர நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, ராஜஸ்தான் அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X