கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சாத்தான்குளம் வழக்கில் அறிக்கை: ஐகோர்ட் உத்தரவு

Added : ஜூலை 29, 2020
Share
Advertisement

மதுரை : சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கு குறித்து, இரண்டு வாரங்களில், சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், 60; மகன் பெனிக்ஸ், 31, போலீஸ் தாக்குதலில் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு, தானாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரிக்கிறது. நேற்று, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு, காணொலியில் விசாரித்தது.10 பேர் கைது தமிழக அரசுத் தரப்பில், 'சம்பவம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 10 பேரை கைது செய்தனர்.

முக்கிய விசாரணை முடிந்து விட்டது. ஜூலை, 10 முதல், சி.பி.ஐ., விசாரிக்கிறது' எனக் கூறி, விசாரணை குறித்து, சி.பி.சி.ஐ.டி., தரப்பில் சீலிட்ட உறையில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சி.பி.ஐ., தரப்பில், 'சி.பி.ஐ., தனிப்படையில் உள்ள எட்டு பேரில், ஏழு பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது. மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். விசாரணை நிலை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தேவை' என, தெரிவிக்கப் பட்டது.2 வாரங்கள்ஜெயராஜ் மனைவி தரப்பில், 'இவ்வழக்கில் என்னையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும்.

சி.பி.ஐ., விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்' என, வலியுறுத்தப் பட்டது. நீதிபதிகள், 'விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, சி.பி.ஐ., தரப்பில், இரண்டு வாரங்களில், சீலிட்ட உறையில், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர். கூடுதல் எஸ்.பி., விளக்கம்தந்தை, மகன் கொலை தொடர்பாக, சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடத்த, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் சென்றார்.அங்கிருந்த, கூடுதல், எஸ்.பி.,குமார், டி.எஸ்.பி., பிரதாபன், போலீஸ்காரர் மகாராஜன் ஆகியோர், மாஜிஸ்திரேட்டை மரியாதை குறைவாக நடத்தியதாக, சர்ச்சை எழுந்தது.

உயர் நீதிமன்றக் கிளை, தானாக முன்வந்து குமார், பிரதாபன், மகாராஜனுக்கு எதிராக அவமதிப்பு வழக்கை விசாரித்தது. ஜூன், 30ல் மூவரும் ஆஜராகினர்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு நேற்று விசாரித்தது. கூடுதல் எஸ்.பி., குமார், டி.எஸ்.பி., பிரதாபன் தரப்பு பதில் மனு:ஜெயராஜ், பெனிக்ஸ் விவகாரத்தில் எங்களுக்கு தொடர்பில்லை. மாஜிஸ்திரேட் வந்தபோது வணக்கம் செலுத்தினோம். ஸ்டேஷனில், 10 நிமிடம்தான் இருந்தோம்.வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்ட பின், மாஜிஸ்திரேட் எங்களை வெளியில் செல்ல அறிவுறுத்தினார்.

பின், வழக்கமான பணிக்கு சென்று விட்டோம். மாஜிஸ்திரேட் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடக்கவில்லை. அவமதிப்பு வழக்கை கைவிட வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.மகாராஜன் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, ஒத்தி வைத்தனர். மற்றொரு வழக்கில் விசாரணை தீவிரம்துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே, வெங்கடேஸ்வரபுரத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன், 28. ஒரு கொலை வழக்கு தொடர்பாக, மே 23ல், இவரை சாத்தான்குளம் போலீசார் அழைத்துச் சென்று, தாக்கினர்.
இதில், உடல்நிலை பாதிக்கப்பட்டு, துாத்துக்குடி அரசு மருத்துவமனையில், ஜூன், 13ல் மகேந்திரன் இறந்தார். அவரது தாய் வடிவு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.டி.எஸ்.பி., அனில்குமார் மற்றும் போலீசார், வடிவு, அவரது மகள் சந்தனமாரி ஆகியோரிடம் விசாரித்துள்ளனர். நேற்று, மகேந்திரனின் மைத்துனர்கள் ராஜா, கண்ணன், நண்பர்கள் மணி, மாடசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X