பெரம்பலூர்: "பெரம்பலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், 56 கோடியே 64 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது' என, மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை யூனியன் அலுவலகத்தில், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் சம்மந்தப்பட்ட பதிவேடுகள் மற்றும் அலுவலக பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் அலுவலக வளாகத்தை பார்வையிட்ட கலெக்டர், அலுவலகத்தை தூய்மையாகவும், சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் அலுவலக வளாகத்துக்குள் மரக்கன்றுகள் நட்டு வைக்க அறிவுரை கூறினார். பின்னர் வெண்பாவூர் அம்மன் கோவில் ஏரியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், 24 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் பணி மற்றும் அடையாள அட்டையினை பார்வையிட்டு, குறிப்பிட்ட காலத்தில் ஊதியம் கிடைக்கிறதா? என வேலை பார்த்தவர்களை கேட்டறிந்தார். ஆய்வுக்கு பின் நிருபர்களிடம் கலெக்டர் தரேஸ் அகமது கூறியதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 பஞ்சாயத்துகளில் உள்ள 314 கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2011-201ம் ஆண்டுக்கு 56 கோடியே 64 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 739 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 618 குடும்பங்களில் உள்ள, ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 465 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்துள்ள அனைத்து பயனாளிகளுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 443 நபர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 17 ஆயிரத்து 22 நபர்களுக்கு வங்கிக்கணக்கு துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வுகளின்போது, திட்ட இயக்குநர் லோகேஸ்வரி, பி.ஆர்.ஓ., கண்ணதாசன், வேப்பந்தட்டை பி.டி.ஓ., ஆறுமுகம் உட்பட பலர் உடனிருந்தனர்.