பல்வேறு இடங்களில் கீரை விளைச்சல் அதிகரித்துள்ளதால், அவற்றின் வரத்து சென்னைக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் விலையை குறைக்க மனமில்லாமல், வியாபாரிகள் அவற்றை கூடுதல் விலையில் விற்று வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் கீரை பயிரிடும் விவசாயிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், அவற்றின் வரத்து நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கீரை வரத்து அதிகரித்துள்ள போதிலும், அவற்றின் விலை குறையவில்லை. சில வியாபாரிகள் விலையை குறைத்தாலும், நூதன முறையில் லாபம் அடைந்து வருகின்றனர். கீரை விவசாயிகள், ஒருகட்டுக்கு இரண்டு முதல் மூன்று ரூபாய் வரை விலை வைத்து அவற்றை விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். அவை சென்னைக்கு வந்ததும், மொத்த வியாபாரிகள் வாங்கி ஒரு ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்கின்றனர். அவற்றை வாங்கி செல்லும் சில்லறை வியாபாரிகள் ஒரு கட்டை இரண்டு முதல் நான்கு கட்டுக்கள் வரை பிரித்து, ஒரு கட்டு ஐந்து முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர்.
இது தெரியாமல் கீரைக்கட்டு ஐந்து ரூபாய்க்கு கிடைக்கிறது என நம்பி பொதுமக்கள் அவற்றை வாங்கிச்சென்று வருகின்றனர். சென்னை மக்களின் தேவையை தீர்க்கும் கீரைகள் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வருகின்றன. இவை லாரிகள், அரசு பஸ்கள் மூலம் எடுத்து வரப்படுகின்றன. முன்பு விளைச்சல் குறைந்ததால், கீரை வரத்து மார்க்கெட்டில் குறைந்தது. இதனால் சென்னையில் ஒரு கட்டு கீரை அதிகபட்சம் 15 ரூபாய்க்கும், குறைந்தபட்சம் 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கீரைக்கட்டுகள் விற்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் அவற்றின் பயன்பாட்டை குறைத்தனர். தற்போது கீரை வரத்து அதிகரித்தும், விலை குறையாத நிலை உள்ளது.
அரைக்கீரை, சிறுக்கீரை, புளித்தகீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலை கீரை, மணதக்காளி கீரை, முளைக்கீரை, அகத்திக்கீரை என கீரைகளில் எண்ணற்ற வகைகள் உள்ளன. இவை உடல் சூட்டை தணிப்பது, மலச்சிக்கல், கண்பார்வை கோளாறு, குடல் மற்றும் வாய் புண் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்கும் இயற்கை மருந்தாக அமைந்துள்ளது. அதனால் கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
கீரை சமையல் அதிகரிப்பு : சென்னையில் மார்க்கெட்கள், பிளாட்பார கடைகள், தள்ளுவண்டி கடைகள் என, எங்கு திரும்பினாலும் கீரை கட்டுக்கள் கூவி கூவி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச்சென்று கீரை குழம்பு, அவியல், கீரை கூட்டு, வடை என சமைத்து ருசித்து வருகின்றனர். பெரிய மற்றும் சிறிய ஓட்டல் உணவு வகைகளில் நுகர்வோர்களுக்கு கீரை உணவுகள் போதும், போதும் என்ற அளவிற்கு பரிமாறப்படுகிறது.
- எஸ்.அசோக்குமார் -