பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் சமச்சீர் கல்வி புத்தகம் இருப்பு நிலைகுறித்து, மாநில மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழக அரசால், அரசுப்பள்ளிகளில் பயிலும் ஆறாம்வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரையிலான மாணவர்களுக்கு வழங்குவதற்காக, பெரம்பலூர் மாவட்டத்தில் 42 ஆயிரத்து 288 செட் சமச்சீர் கல்விக்கான இலவச பாடநூல் புத்தகம் சி.இ.ஓ., அலுவலகத்துக்கு வந்துள்ளது. இந்த புத்தக அட்டைகளில் முன்னாள் முதல்வர் கருணாநி படம் மற்றும் செம்மொழி "லோகோ' ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்த புத்தகங்களில் சுமார் 40 ஆயிரம் புத்தகம் செட் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தின் காரணமாக சமச்சீர் கல்வியை நிறுத்திவிட்டு, பழைய பாடபுத்தகம் முறை நடைமுறைப்படுத்தப்படும் என அ.தி.மு.க., அரசு அறிவித்தது. ஆனால், சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த கோரி கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. சமச்சீர் கல்வி புத்தகத்தில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் மற்றும் செம்மொழி "லோகோ' ஆகியவற்றின் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கும் பணி தற்போது சி.இ.ஓ., அலுவலகம் மற்றும் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாநில மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது சி.இ.ஓ., ராஜன், டி.இ.ஓ., சீத்தாராமன், ஏ.இ.ஓ., வசந்தா ஆகியோர் உடனிருந்தனர்.