டில்லியில் காற்று மாசு 70% குறைந்தது! தக்க வைக்க ஐ.நா., கோரிக்கை| Nitrogen dioxide levels in Delhi fell by more than 70% during lockdown: UN | Dinamalar

பொது செய்தி

இந்தியா

டில்லியில் காற்று மாசு 70% குறைந்தது! தக்க வைக்க ஐ.நா., கோரிக்கை

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (3)
Share
நியூயார்க் : 'கொரோனா பரவலை தடுக்க பிறப்பித்த ஊரடங்கால், டில்லியில், காற்றில் உள்ள மாசு வாயுவான, நைட்ரஜன் டையாக்சைடு, 70 சதவீதம் குறைந்துள்ளது; இதை தக்க வைக்கும் கொள்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என, ஐ.நா., வலியுறுத்தியுள்ளது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியோ குட்டரெஸ், சர்வதேச நகரங்களில் கொரோனா குறித்த கொள்கை அறிவிக்கையை
Delhi, Air Pollution, UN, Nitrogen dioxide. NO2 levels, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, டில்லி, காற்று மாசு,ஐநா, கோரிக்கை

நியூயார்க் : 'கொரோனா பரவலை தடுக்க பிறப்பித்த ஊரடங்கால், டில்லியில், காற்றில் உள்ள மாசு வாயுவான, நைட்ரஜன் டையாக்சைடு, 70 சதவீதம் குறைந்துள்ளது; இதை தக்க வைக்கும் கொள்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என, ஐ.நா., வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியோ குட்டரெஸ், சர்வதேச நகரங்களில் கொரோனா குறித்த கொள்கை அறிவிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: நகர்புறங்களைச் சேர்ந்தோர் தான், கொரோனா வைரசால், 90 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக மாசுக் காற்றுப் பகுதிகளில் தான், கொரோனா இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.

நெரிசல் மிகுந்த பகுதிகளில் அதிகமானோர் வசிப்பதும், அவர்கள் மற்றவர்களுடன் அதிக தொடர்பு கொண்டிருப்பதும் தான், கொரோனா வேகமாக பரவ காரணம். கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறக்கப்பட்டதால், பல நாடுகளின் பொருளாதாரம் முடங்கியது. அதேசமயம், சுற்றுச்சூழல் மாசு, கரியமில வாயு வெளியேற்றம் ஆகியவை வெகுவாக குறைந்துள்ளது.

டில்லியில், காற்றில் உள்ள நைட்ரஜன் ஆக்சைடு அளவு, 70 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. இது, சீனாவின் நகர்புறங்களில், 40 சதவீதம்; பெல்ஜியம், ஜெர்மனியில், தலா, 20 சதவீதம் ; அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில், 19-40 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க விரைவாக செயல்பட்டது போல, நகர்புறங்களின் தட்பவெப்பம், சுற்றுச் சூழல் பிரச்னைகளுக்கும் நாம் விரைந்து தீர்வு காண வேண்டும். தற்போது, ஊரடங்கால், சுற்றுச்சூழலில் மாசு குறைந்துள்ளது. இது தற்காலிகமானது.ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டால், மீண்டும் காற்று மாசு அதிகரிக்கும்.

அவ்வாறின்றி, தற்போதைய சூழலை சாதகமாக பயன்படுத்தி, காற்றின் மாசுபாட்டை குறைக்க தேவையான கொள்கைகளை, உலக நாடுகள் உருவாக்கி, விரைந்து செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், ஊரடங்கால் கிடைத்த பயனை நாம் இழக்க வேண்டியிருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.


ஐ.நா., குழுவில் இந்தியர் நியமனம்


ஐ.நா., உருவாக்கியுள்ள, சுற்றுச்சூழல் ஆலோசனை குழுவில், இந்தியாவைச் சேர்ந்த, தட்பவெப்ப ஆய்வாளர், அர்ச்சனா சோரங் நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை, டாடா சமூக அறிவியல் மைய முன்னாள் மாணவர் தலைவரான அர்ச்சனா சோரங், சுற்றுச் சூழல் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

இவர் உட்பட, ஆறு இளம் வல்லுனர்கள் அடங்கிய சுற்றுச் சூழல் ஆலோசனை குழு, மாசு பரவலை குறைத்து, சுற்றுச் சூழலை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை, ஐ.நா.,வுக்கு வழங்கும்.


சீக்கியர்கள் மீது தாக்குதல்


ஆப்கானிஸ்தானில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, ஆப்கனில் உள்ள, ஐ.நா., உதவிக் குழு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தாண்டு, ஜன.,- ஜூன் வரையிலான ஆறு மாதங்களில், சீக்கியர் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த, 3,400 பேர், பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளனர். இதில், 1,282 பேர் உயிரிழந்துள்ளனர்; 2,176 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு, இதே காலத்துடன் ஒப்பிடும்போது, தாக்குதல், 13 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X