சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

அவதூறுக்கு பெயர் பகுத்தறிவா?

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (47)
Share
Advertisement
நல்லவர்கள், தங்களின் மனதில் புதைந்து கிடக்கும் நல்ல கருத்துகளையும், தகவல்களையும், பிறர் அறிய செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் பேசுகின்றனர். ஆனால், அறிவிலிகள் எதையாவது பேச வேண்டும் என்பதற்காக பேசி, தங்கள் அறிவின்மையை வெளிப்படுத்துகின்றனர்.நல்லவர்கள், தங்களின் நல்ல திறமையை காட்டி, சமுதாயத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி, நல்ல புகழை பெறுகின்றனர். தீயவர்கள், தங்களின்
ஹிந்து, இறை வழிபாடு, அவதூறு, பகுத்தறிவா

நல்லவர்கள், தங்களின் மனதில் புதைந்து கிடக்கும் நல்ல கருத்துகளையும், தகவல்களையும், பிறர் அறிய செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் பேசுகின்றனர். ஆனால், அறிவிலிகள் எதையாவது பேச வேண்டும் என்பதற்காக பேசி, தங்கள் அறிவின்மையை வெளிப்படுத்துகின்றனர்.

நல்லவர்கள், தங்களின் நல்ல திறமையை காட்டி, சமுதாயத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி, நல்ல புகழை பெறுகின்றனர். தீயவர்கள், தங்களின் மனதில் மண்டி கிடக்கும், வக்கிர எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து, கெட்ட பெயரை பெற்று, சீரழிகின்றனர். கண்ணுக்குத் தெரியாத, நம் சுவாசத்தின் முக்கியத்துவம், மூச்சுத் திணறல் ஏற்படும் போது தான் புலனாகிறது. நமக்கே புலப்படாத பல விஷயங்கள் நிகழும் போது தான், நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி, நம்மை இயக்கி கொண்டிருக்கிறது என்று நமக்கு தெரிய வருகிறது.

நமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கிறது; அது நம் செயல்பாடுகளை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. நம் தீய நடவடிக்கைகளுக்கான தண்டனையை, அது நிச்சயம், ஒரு நாள் கொடுக்கும் என்ற இறைநம்பிக்கை காரணமாகத் தான், இந்த சமுதாயத்தில் குற்றங்கள் கட்டுக்குள் இருக்கின்றன. காவல் துறை மீதும், நீதிமன்றங்களின் மீதும் உள்ள பயத்தை விட, சக்தி வாய்ந்தது, கடவுள் மீதான பயம். அதற்கு அஞ்சாதவர்களை தான், மனசாட்சியில்லாதவர்கள் என்று குறிப்பிடுகிறோம்.

எந்த மதமும், இறை வழிபாட்டை எதிர்க்கவில்லை. ஹிந்து மதத்தில் உள்ள நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரியம் மிக்க மரபுகள் அனைத்தும் அறிவியல், மனித உடல் கூறு மற்றும் மனநலம் சார்ந்தவை.மக்களின் நம்பிக்கைஎது எப்படியோ, ஒருவரின் இறை நம்பிக்கை, அடுத்தவரை எந்த வகையிலும் பாதிப்பதில்லை. எனவே, அவர்களை ஏன், தேவையில்லாமல் சீண்டிப் பார்க்க வேண்டும்.

கடவுள் பெயரை சொல்லி, தவறு செய்வோரை, தட்டி கேட்கக்கூடாது என, ஆன்மிகவாதிகள் என்றாவது போராடுகின்றனரா; மக்களின் நம்பிக்கையை காசாக்கும் கயவர்கள், எல்லா மதங்களிலும் தான் இருக்கின்றனர். மதத்தை தவறாக பயன்படுத்தி, தவறு செய்வோருக்கு மதம் பொறுப்பாக முடியாது. எந்த மதமும், தவறு செய்வதை போதிக்கவில்லை. போதிக்கிறது என்று யாரேனும் சொன்னால், அது தவறான புரிதல் காரணமாகத் தான் இருக்கும்.

'கோவிலில் உள்ள விக்ரகங்களை வழிபடுவது மூடநம்பிக்கை' என்று சிலர் சொல்கின்றனர். ஆனால், அவர்கள் மதிக்கும் தலைவரின் உயிரற்ற சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்கின்றனர்; கை கூப்பி வணங்குகின்றனர். இவை எல்லாம், மூட நம்பிக்கை தானே!


சீர்திருத்த சிந்தனையா?

அந்த தலைவரின் பிறந்த நாளன்றும், நினைவு நாள் அன்றும், அவரின் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று, மாலை அணிவித்து, வணங்குவதும் மூடநம்பிக்கை தானே!அந்த சிலையை யாரோ ஒரு அறிவிலி அவமானப்படுத்தி விட்டால், அந்த தலைவரின் புகழுக்கே களங்கம் வந்து விட்டது; அவர் ஏற்படுத்திய இயக்கத்தையே அவமானப் படுத்திவிட்டதாக எண்ணி கொதித்தெழுகின்றனரே... அது, மூட நம்பிக்கையாக அவர்களுக்கு தோன்றவில்லையா?

பக்தி, பயம், மரியாதை அனைத்தும், உள்ளத்தின் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. அதை வெளிப்படுத்துவதற்கு உருவமும், வழிபாட்டுத் தலமும் தேவைப்படுகிறது. அதை ஏற்படுத்தி, நாத்திகவாதிகள் வழிபடுவது போல், ஆத்திகவாதிகளும் வழிபட்டு கொண்டிருக்கின்றனர். அதில் என்ன தவறு? எப்படியாவது பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கத்தில், பாரம்பரியமிக்க, சக்தி வாய்ந்த, பக்தி ரசம் சொட்டும், கந்தர் சஷ்டி கவசம் பாடலை கொச்சைப்படுத்தி, கோடிக்கணக்கான ஆன்மிகவாதிகளின் மனதில் நெருப்பை கொட்டும் வக்கிர எண்ணத்திற்கு பெயர், சீர்திருத்த சிந்தனையா?

அந்த நபரை, யாரும், கந்தர் சஷ்டி கவசத்திற்கு பதவுரை எழுதி கேட்கவில்லை; யாரும் அந்த பாட்டிற்கு, விளக்கம் கேட்டு, அவர்கள் முன் போய் நிற்கவில்லை. விளங்காதவர்களுக்கு அல்லவா, விளக்கம் வேண்டும். நல்லவர்கள், நல்லதை நல்லதாகவே சிந்திப்பர். இவர்கள் அந்தப் பாடலை, சிந்தித்த விதத்திலேயே, இவர்களின் சிந்தனையின் போக்கு புலப்பட்டு விட்டது.தேவையற்ற ஒரு செயலை செய்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்திருக்கின்றனர். இதற்கு அடிப்படை காரணம், அவர்களுக்கு இந்த சமுதாயத்தின் மீதுள்ள அக்கறை அல்ல; பிரபலபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசை.

தாம் சார்ந்துள்ள இயக்கத்தின் தலைவர்களை திருப்திப்படுத்துவதற்கும், சந்தோஷப்படுத்துவதற்கும், எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அடுத்தவரை காயப்படுத்தி, அதை செய்ய முயற்சிப்பது, நியாயத்துக்கு புறம்பான முயற்சி; கண்டனத்துக்கு உரியது; சட்டத்துக்கு எதிரானது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு, 153ன் படி, இரு பிரிவினர் இடையே பகையை ஏற்படுத்தி, ஆத்திரமூட்டி, கலவரம் ஏற்படும் வகையில் பேசுவது, ஒரு தகவலை வெளியிடுவது அல்லது ஒரு செயலை செய்வது, ஜாமினில் விட முடியாத குற்றம். அதற்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு.


தலைமைக்கு தலைவலி:

ஒரு கட்சிக்கு அல்லது ஒரு இயக்கத்துக்கு, தலைவனாக இருப்பவர்களுக்கு, இரண்டு முக்கிய பொறுப்புகள் இருக்கின்றன. ஒன்று, முன்னால் முந்தி செல்பவனை இழுத்துப் பிடிக்க வேண்டும். மற்றொன்று, பின்னால் சிரமத்துடன் தொடர்பவனை உடன் அழைத்துச் செல்ல வேண்டும். கவனிக்காமல் விட்டால், முன்னால் போனவன் தனிக்கட்சி ஆரம்பித்து, தலைவனாகி விடுவான். பின் தங்கியவனை, அடுத்த கட்சிக்காரன் கொத்தி போய் விடுவான்.

இக்கால கட்சித் தலைவர்கள் பலர், தங்கள் கட்சியில் அடுத்த மட்டத்தில் இருப்பவர்களையும், தொண்டர்களையும், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரியவில்லை. அதனால், அவர்கள் ஏதாவது ஒன்றை செய்து அல்லது சொல்லி, தலைமைக்கு தலைவலியை உண்டாக்கி விடுகின்றனர்.


இடக்கர் அடக்கல்:

சில நேரங்களில், தங்கள் தலைவர்களுக்கு உடன்பாடில்லாத செயலை கூட செய்து, சிக்கலில் மாட்ட வைத்து, தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். பல சந்தர்ப்பங்களில், தன் தொண்டன் செய்தது தவறு என்று தெரிந்தாலும், தன் கட்சியினரைத் திருப்திபடுத்த, அவருக்கு ஆதரவளிக்க வேண்டியகட்டாயத்துக்கு தலைவர்கள் தள்ளப்படுகின்றனர்.தமிழில், 'இடக்கர் அடக்கல்' என்று ஒரு இலக்கண விதி இருக்கிறது. சில வார்த்தைகளை நாகரிகம் கருதி, பொது வெளியில் நேரடியாக சொல்லாமல், மறைமுகமாக குறிப்பிடுவது தான், இடக்கர் அடக்கல்.

உதாரணமாக, 'மல, ஜலம் கழித்து வந்தேன்' என்பதை, 'வாய்க்கால் பக்கம் போயிருந்தேன்' என்றும், 'இறந்து விட்டார்' என்பதை, 'இறைவனடி சேர்ந்தார்' என்று குறிப்பிடுவதையும் சொல்லலாம். அப்படிப்பட்ட சொற்களால் எழுதப்பட்ட, கந்தர் சஷ்டி கவசம் பக்திப் பாடல், எப்படி ஆபாசமாக எழுதப்பட்டிருக்கும்... அந்த கூட்டத்தின் சிந்தனை மரத்துப் போய் விட்டதா அல்லது வேண்டுமென்றே மறக்கடிக்கப்பட்டதா...

யோகாசனம் செய்து முடிக்கும் போது, சவாசனம் என்றொரு ஆசனம் செய்வர். அதாவது, சவம் போல, கைகள், கால்களை அசைக்காமல், தரையில் படுத்தபடி, அந்த ஆசனத்தை செய்வர். அதில், உடலின் ஒவ்வொரு பாகங்களையும் மனதில் நினைத்தபடி, அவை நன்றாக இருக்க வேண்டும்; சிறப்பாக வேலை பார்க்க வேண்டும் என, மனதுக்குள் சொல்வர். இவ்வாறு சொல்வதால், செய்வதால், அந்த உடல் உறுப்புகள் சீராக இயங்கும் என்ற நம்பிக்கை, யோகாசனம் செய்பவர்களுக்கு உள்ளது.

அதுபோல, ஒரு மனிதனின் வாழ்வில் நிகழும் துன்பங்களுக்கு காரணமான, வழிமுறைகள், சக்திகள், இடங்கள், சூழ்நிலைகள், உடலுறுப்புகள், நோய்கள், நேரம் போன்றவற்றை குறிப்பிட்டு, பாடப்பட்டது தான் கந்தர் சஷ்டி கவசம். அந்த இடர்களில் இருந்து தன்னைக் காக்க வேண்டும் என, தன் இஷ்ட தெய்வமான முருகனை பிரார்த்திப்பது தான், கந்தர் சஷ்டி கவசம். இன்று, நேற்றல்ல. பல ஆண்டுகளாக, முருகன் கோவில்களிலும், முருகனை வழிபடுவோரும், தாரக மந்திரமாக பாடும் மந்திரம் அது. அதை ஆபாசமாக பார்ப்போர், குருட்டு சிந்தனையாளர்களே.

இறை வழிபாடு தொடர்பான அந்த பாடலில், ஆபாசத்திற்கு எள்ளளவும் இடமில்லை. அந்தப் பாடலை ஒரு முறை பாடினால், மனதில் தெம்பும், உற்சாகமும் பிறக்கும்.பாடுபவர் அல்லது கேட்பவரின் மனதில் நம்பிக்கையையும், தெம்பையும் ஊட்டும் கந்தர் சஷ்டி கவசத்தில், கீழ்த்தரமான எண்ணங்களுக்கு இடமில்லை.பெண்கள் இருக்கின்றனர்... அந்தப் பெண், ஒருவருக்கு சகோதரி. மற்றொருவருக்கு தாய். இன்னொருவருக்கு மகளாகவோ, பேத்தியாகவோ இருப்பார். ஆனால், காமுகன் கண்களுக்கு மட்டுமே, அவர் இச்சைக்குரிய பொருளாக தோன்றுவார்.


புகழை விரும்புவதில் தவறில்லை:

இது, பார்ப்பவரின் எண்ணத்தில் உள்ள களங்கமே தவிர, அந்த பெண்ணிடம் உள்ள தவறில்லை. புகழை விரும்புவதில் தவறில்லை; அது, மனித இயல்பு. பிரபலமடைய ஆசைப்படுவதில் தவறில்லை; அது, தனி நபர் விருப்பம். ஆனால், அதற்கு தேர்ந்தெடுக்கும் வழிமுறை, அறிவு சார்ந்ததாகவும், நல்லவர்கள் மனதை காயப்படுத்தாததாகவும் இருக்க வேண்டும். அறிவை சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான விதத்தில் பயன்படுத்துவது தான் பகுத்தறிவு!

- மா.கருணாநிதி,
காவல் துறை கண்காணிப்பாளர்-, ஓய்வு

தொடர்புக்கு:
மொபைல்: 9840488111
இ -- மெயில்: spkaruna@gmail.com

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Krishnan - chennai,இந்தியா
31-ஜூலை-202014:15:04 IST Report Abuse
G.Krishnan நல்ல சிந்தனை, இதை படித்தவது மூடர் கூட்டம் திருந்தவேண்டும் . . . . . . .இல்லையேல் சட்டப்படி தண்டனைக்குடுத்தாவது திருத்த வேண்டும் .. . .வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
31-ஜூலை-202014:07:01 IST Report Abuse
Sridhar இவர்கள் எதோ இன்று நேற்று இம்மாதிரியாக பேசியதை போல் எல்லோரும் பொங்குகிறார்களே? இதே போலத்தானே கடந்த என்பது வருசமாக பேசிவருகிறார்கள்? அவர்களுக்கு கடுமையான எதிர்ப்பை அப்போது தெரிவிக்காமல் நாம் தானே அவர்களை வளர்த்து விட்டோம்?
Rate this:
Cancel
SIVA G india - chennai,இந்தியா
30-ஜூலை-202023:27:08 IST Report Abuse
SIVA G  india பலர் மனதில் தோன்றியதை அருமையா வெளிபடுத்திய கட்டுரை.பாரபட்ச பகுத்தரிவை இந்துகளுக்கு எதிராக வளர்த்த இவர்கள் தண்டிக்கபடும் காலமே உண்மையான தீபாவளி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X