நெருக்கடி: ஜே.ஜே.எம்., திட்டத்தை செயல்படுத்த...கிராமப்புற ஊராட்சி செயலர்கள் தவிப்பு| Dinamalar

தமிழ்நாடு

நெருக்கடி: ஜே.ஜே.எம்., திட்டத்தை செயல்படுத்த...கிராமப்புற ஊராட்சி செயலர்கள் தவிப்பு

Added : ஜூலை 29, 2020
Share

கிராமப்புறங்களில் ஜே.ஜே.எம்., திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் வற்புறுத்துவதால், பொதுமக்களிடம் வைப்புத் தொகை 1,000 ரூபாய் வசூல் செய்ய முடியாமல் ஊராட்சி செயலர்கள் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதற்காக ஊரில் உள்ள அனைத்து தெருக்களிலும் பைப் லைன் மற்றும் பல்வேறு இடங்களில் மினி டேங்க்குகள் அமைக்கப்பட்டுள்ளன.ஆனால், பொதுமக்கள் சிலர் முறையற்ற முறையில் பைப் லைனில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் பிடிக்கின்றனர். இதனால் தெருவின் கடைசி பகுதிக்கும், மேடான பகுதிகளுக்கும் தண்ணீர் செல்வதில்லை. குறிப்பாக கோடை காலங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.இதை சரிசெய்யும் விதமாக கிராமப்புற மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக 'ஜல் ஜீவன் மிஷன்' (ஜே.ஜே.எம்.,) திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது, கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான முறையில் நேரடியாக குடிநீர் விநியோகம் செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக தமிழகத்திற்கு 373 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.இந்த திட்டம் அமல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள தெருக்கள் மற்றும் வீடுகளின் எண்ணிக்கையை ஊராட்சி செயலர்கள் பி.டி.ஓ., விடம் சமர்ப்பிக்க வேண்டும். தொடர்ந்து மேற்பார்வையாளர் அந்த கிராமத்திற்கு சென்று தெருக்களை அளவீடு செய்து பைப் லைன் அமைப்பதற்காக தேவைப்படும் செலவின தொகையை சமர்பிப்பார்.இதற்காக அந்த கிராமத்தில் வசிக்கும் அனைத்து வீட்டின் உரிமையாளர்களும் 1,000 ரூபாயை வைப்புத் தொகையாக ஊராட்சி செயலர்களிடம் தர வேண்டும்

.தற்போது கிராமப் புறங்களில் ஜே.ஜே.எம்., திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த கோரி ஊராட்சி செயலர்களை அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இது தொடர்பாக ஊராட்சி செயலர்கள் வசூல் செய்ய சென்றால், 'கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டு, நிவாரண நிதி கிடைக்குமா என எதிர்பார்க்கும் எங்களிடம் 1,000 ரூபாய் கேட்கின்றீர்களே. ஏற்கனவே தண்ணீர் வந்து கொண்டு தானே இருக்கிறது' எனக் கூறி பொதுமக்கள் வைப்பு தொகையை தர மறுக்கின்றனர். இதனால் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் மத்தியில் ஊராட்சி செயலர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்
.நமது நிருபர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X