டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூலை 29, 2020 | கருத்துகள் (6)
Share
 'டவுட்' தனபாலு

தி.மு.க., - எம்.பி., கனிமொழி: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை பெரும்பான்மை ஹிந்துக்களுக்காக, கருணாநிதி கொண்டு வந்தார். அனைத்து ஹிந்துக்களின் பாதுகாவலன் என்று கூறும், பா.ஜ., பெரும்பான்மை ஹிந்துக்களின் விருப்பத்தை நிறைவேற்ற குரல் கொடுக்குமா?

'டவுட்' தனபாலு: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என, கருணாநிதி சட்டம் கொண்டு வந்தது, ஹிந்துக்களின் விருப்பத்தின் காரணமா அல்லது ஹிந்து மத வழிபாடு, பாரம்பரியம், தொன்மையை அழிக்க வேண்டும் என்பதற்காகவா என்ற, 'டவுட்'டை, இந்த அறிக்கை மூலம், இத்தனை ஆண்டுகள் கழித்து கிளப்பி விட்டீர்களே!

***

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: மருத்துவக் கல்வியில், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு, 27 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அகில இந்திய தொகுப்பு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு, உடனே இட ஒதுக்கீடு வழங்க, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

'டவுட்' தனபாலு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த உடனேயே, சூட்டோடு சூடாக, பிரதமருக்கு கடிதம் எழுதி, விரைவில் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளீர்கள். ஒரு நாள் தாமதித்தாலும், தி.மு.க., அல்லது அ.தி.மு.க., கடிதம் எழுதி விடும் என்ற எண்ணத்தில் தானே, இந்த அவசரமோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. ஏனெனில், கோர்ட், மூன்று மாதம் அவகாசம் வழங்கியுள்ளதே!

***

காங்., முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம்: நான்கு மணி நேரத்தில், முழு ஊரடங்கு அறிவித்தது- சரியான முடிவா; ரயில்கள் இன்றி, பேருந்துகள் இன்றி, பல லட்சம் மக்கள், நடந்தே சென்றனரே... அது சரியான முடிவின் விளைவா; பல கோடி குறு, சிறு, நடுத்தர தொழில்கள் இன்னும் மூடியே கிடக்கின்றனவே; அது சரியான முடிவுகளின் பயனா; ஊரடங்கை தளர்த்திய பிறகும் கோடிக்கணக்கானோர் இன்னும் வேலையில்லாமல் இருக்கின்றனரே;- இது சரியான முடிவுகளின் பயனா?

'டவுட்' தனபாலு: நீங்கள் பல, 'டவுட்'டுகளை கிளப்பியுள்ளது போல, நடுநிலையாளர்களுக்கும் பல டவுட்டுகள் ஏற்படுகின்றன. காங்., முன்னணி தலைவர் ராகுல், சிறுபிள்ளைத்தனமாக அவ்வப்போது அறிக்கை விடுவது, அவரின் அறியாமையை காட்டுகிறதா; ராஜஸ்தானில், சச்சின் பைலட் போர்க்கொடி துாக்கியுள்ளது, காங்., கொள்கையாலா; நடந்து சென்ற தொழிலாளர்களுக்கு, காங்., என்ன செய்தது என்பன போன்ற பல, 'டவுட்'களும் எழுகின்றனவே; பதில் இருக்கிறதா?

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X