டிஸ்சார்ஜ் ஆனவர் 2 நாளில் பலி 10 மணி நேரம் காத்திருந்த உடல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டிஸ்சார்ஜ்' ஆனவர் 2 நாளில் பலி 10 மணி நேரம் காத்திருந்த உடல்

Added : ஜூலை 30, 2020
Share

கடலுார் : 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட கொரோனா நோயாளி, இரண்டு நாட்களில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தார். அவரது உடலை எடுத்துச் செல்ல, ௧௦ மணி நேரம் தாமதமானது.

கடலுார் மாவட்டம், கோண்டூர் ஊராட்சி, ஜோதி நகரைச் சேர்ந்த, 63 வயது முதியவர், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 20ம் தேதி கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில், கொரோனா உறுதியானது. தனி வார்டில் சிகிச்சையளித்தனர். 24ம் தேதி, அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.'வென்டிலேட்டர்' வசதி இல்லாததால், விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, அவருக்கு மூன்று நாட்கள் சிகிச்சையளித்து, 27ம் தேதி, 'உடல் நிலை சீராகி விட்டது.

வீட்டிற்கு சென்று, 15 நாள் தனிமையில் இருந்தால் குணமாகிவிடும்' எனக் கூறி, 'டிஸ்சார்ஜ்' செய்து அனுப்பினர். ஆனால், நேற்று அதிகாலை, ௩:00 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இது குறித்து, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். கொரோனா பாதிப்பால் இறந்தவரின் உடலை, 'பேக்கிங்' செய்ய, சிதம்பரம், விழுப்புரத்தில் இருந்து ஊழியர்கள் வர வேண்டி இருந்ததால், தாமதமானது. 10 மணி நேரத்திற்கு பின், நேற்று மதியம், 1:00 மணியளவில், சுகாதாரத் துறையினர் வந்து, உடலை 'பேக்கிங்' செய்தனர்.

கம்மியம்பேட்டை இடுகாட்டில், முதியவர் உடல் தகனம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அப் பகுதி முழுதும் கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தப்படுத்தினர். 8 மணி நேரம் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், நேற்று காலை இறந்த கொரோனா நோயாளியின் உடலை, நோயாளிகள் நடந்து செல்லும் பாதையில், தள்ளுவண்டியில் வைத்துவிட்டு சென்றனர்.மாலை, 4:00 மணி வரை, உடல் அங்கேயே இருந்தது.இது குறித்து, நிர்வாகத்திடம் சுட்டிக்காட்டிய பிறகே அப்புறப்படுத்தினர்.
மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், 'கொரோனா பாதிப்பில் இறப்பவர்களின் உடலை பெற, உறவினர்கள் முன்வருவதில்லை. 'அவர்களை வரவழைத்து, உடலை அடக்கம் செய்யும் தொண்டு நிறுவனத்தினரிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுகிறது' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X