தெய்வீகமான ஆறுகளை காப்போம்

Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (4) | |
Advertisement
உலகின் பெரும்பான்மையான நாகரீகம் நதிக்கரையில் தோன்றியதாக வரலாற்று அறிஞர் கூறுவர். சிந்து நதிக்கரையில் அமைந்ததால் நமது பாரதத்திற்கு சிந்து,-சிந்தியா-, இந்தியா என்று ரோம-கிரேக்கர்கள் பெயரிட்டனர். தமிழ்நாட்டின் ஜீவனே ஆறுகள் தான்.காவிரி தென்பெண்ணை பாலாறுதமிழ்கண்டதோர் வையை பொருனை நதிஎனமேவிய யாறு பலவோடத் திருமேனி செழித்த தமிழ்நாடுஎன்று பாடுவார் பாரதியார். ஆறுகள்
 தெய்வீகமான ஆறுகளை காப்போம்

உலகின் பெரும்பான்மையான நாகரீகம் நதிக்கரையில் தோன்றியதாக வரலாற்று அறிஞர் கூறுவர். சிந்து நதிக்கரையில் அமைந்ததால் நமது பாரதத்திற்கு சிந்து,-சிந்தியா-, இந்தியா என்று ரோம-கிரேக்கர்கள் பெயரிட்டனர். தமிழ்நாட்டின் ஜீவனே ஆறுகள் தான்.காவிரி தென்பெண்ணை பாலாறு


தமிழ்கண்டதோர் வையை பொருனை நதி


எனமேவிய யாறு பலவோடத்


திருமேனி செழித்த தமிழ்நாடுஎன்று பாடுவார் பாரதியார். ஆறுகள் பெயரிலேயே ஊர்கள் அமைந்திருப்பது இந்தியா முழுவதும் உண்டு. பஞ்சாப் - ஐந்து ஆறுகள் உடையது. தலைக்காவேரி - காவிரி பிறக்கும் இடம். தமிழ்நாட்டில் திருவையாறு -வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, வடவாறு, காவிரி என ஐந்து ஆறுகள் ஓடும் பகுதி. அரசலாறு (அரிசில்கரைபுத்தூர்) கெடிலம் - (அதிகை கெடிலம்), அடையாறு, குடவாயில் (குடமுருட்டி) என பெயர்கள் உள்ளன. ஆற்றங்கரையில் பெரிய நகரங்கள் உருவாகின. பண்பாட்டு சின்னங்கள் அடையாளப்படுத்தப்பட்டன.
வாழ்வாதாரம்:


இந்தியாவில் கங்கை தொடங்கி தாமிரபரணி வரை பல்வேறு நதிகள், மக்களின் வாழ்வாதாரத்தை வளம்பெற செய்து, வழிபாட்டுக்கு உரிய கோயில்களை அமைத்து, வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டன. கங்கை, நர்மதை, சரஸ்வதி, கோதாவரி, பிரம்மபுத்திரா, மஹாநதி, கிருஷ்ணா, காவிரி ஆறுகளின் கரைகளில் லட்சக்கணக்கான கோயில்கள் அமைந்துள்ளன.தமிழ்நாட்டில் வழிபாடு செய்யும் திருத்தலங்கள் ஆற்றங்கரையிலேயே உள்ளன. பொன்னி என்ற பெயரில் உள்ள காவிரி பாயும் சிதம்பரம் - பொன்னம்பலம் என்றும், தாமிரபரணி கரையில் உள்ள நெல்லை தாமிரசபை என்றும், மதுரையில் வைகை நதிக்கரையில் உள்ள ஆலவாய், வெள்ளியம்பலம் எனப்பெயர் பெற்றது.
50 ஆறுகள்:


2500 ஆண்டு பழமை உடைய சங்க இலக்கியங்களில் கூறப்பெற்ற தமிழக ஆறுகள் 7ம் நுாற்றாண்டில் வழிபாட்டிற்குரிய தீர்த்தமாக இருந்துள்ளன.காவிரி, தாமிரபரணி, பாலாறு, வைகை, நொய்யல், தென்பெண்ணை, பவானி, கொள்ளிடம், அமராவதி, மணிமுத்தாறு, செய்யாறு, குண்டாறு, வெள்ளாறு, அடையாறு, வெண்ணாறு, கூவம், பாம்பாறு, சிற்றாறு, வைப்பாறு, குடமுருட்டி, சரபங்கா ஆறு, பச்சையாறு, அரசலாறு, உப்பாறு, ராமாநந்த ஆறு, குந்தா ஆறு, கோதையாறு, கெடிலம், முல்லையாறு, கோமுகி ஆறு, முடிகொண்டான் ஆறு, செஞ்சியாறு, கமண்டல நாகநதியாறு, அர்ஜுனா ஆறு, சிறுவாணி, சரகுணி, நாட்டாறு, அகரமாறு, வஷிஷ்டாநதி, பரம்பிகுளம்ஆறு, கவுசிகாஆறு, மஞ்சளாறு, கடனாநதி, பம்பாநதிஆறு என்ற பெயர்களை கொண்டவை.
பாலாறின் தோற்றம்:


மைசூர் அருகே நந்தி மலையில் பாலாறு தோற்றமெடுக்கிறது. கோலார் தங்கச் சுரங்கத்துக்கு பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. பின்பு காஞ்சிபுரம் தாலுகாவில் புகுந்து, செங்கல்பட்டு தாலுகாவில் உள்ள சதுரங்கப்பட்டணத்திற்கு அருகே கடலில் கலக்கின்றது. இதன் துணை ஆறுகளுள் சிறந்தவை செய்யாறு, வேகவதி என்பன. செய்யாறு வேலுார் மாவட்டத்தில் தோற்றமெடுக்கிறது. வேகவதி ஆறு காஞ்சிபுரம் தாலுகாவில் தோன்றுகிறது. இவை இரண்டும் வாலாஜாபாத் என்னும் ஊருக்கருகில் பாலாற்றில் கலக்கின்றன.இங்ஙனம் மூன்று ஆறுகள் ஒன்று சேரும் இடம் திருமுக்கூடல் எனப் பெயர் பெற்றுள்ளது. திருமயிலாப்பூர், திருவொற்றியூர், திருஇடைச்சுரம், திருஅச்சிறுபாக்கம், திருப்பாலைத்துறை, திருவேற்காடு, திருஆலங்காடு, முதலியன தொண்டைநாட்டுச் சிவத்தலங்களாகும். திருப்பதி, திருஎவ்வுளுர் (திருவள்ளுர்), காஞ்சி, முதலியன சிறந்த வைணவப் பதிகளாகும். இவையெல்லாம் நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற சிறப்புடையவை.
பழநி மலைத்தொடரில்...


தொண்டை நாட்டு ஆறுகளில் தண்ணீர்ப் பெருக்கெடுத்து வரும்போது, அந்நீரைத் தேக்கி வைத்து, வேண்டும் போது வயல்களுக்குப் பாய்ச்சுவதற்காகப் பெரிய ஏரிகள் பல்லவ மன்னர்களால் அமைக்கப்பட்டன. மகேந்திர தடாகம், சித்திரமேக தடாகம், பரமேசுவர தடாகம், வைரமேகன் தடாகம், வாலி ஏரி, மாரிப்பிடுகு ஏரி, கனகவல்லி தடாகம் எனப் பல ஏரிகளின் பெயர்கள் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.பழநி மலைத்தொடரில் பன்றியாறு (வராக நதி), மஞ்சளாறு, பாம்பாறு, அய்யம்பாளையம் ஆறு என்பன தோன்றித் தெற்கு நோக்கிப் பாய்கின்றன. இவற்றுள் பன்றியாறு, பெரியகுளம் நகர் வழியாய் பாய்ந்து பாம்பாற்றில் கலக்கிறது. பன்றியாறு கலக்கப்பெற்ற பாம்பாறு தென்கிழக்காகப் பாய்கிறது. மஞ்சளாறு வத்தலக்குண்டு வழியாகத் தெற்கு நோக்கிப் பாய்ந்து, அய்யம்பாளையம் ஆற்றில் கலந்து விடுகிறது.
வைகை ஆறு:


வருஷ நாடு - ஆண்டிப்பட்டி மலைத்தொடரே வைகையின் பிறப்பிடம். இதன் பள்ளத்தாக்கிலேயே பல சிற்றாறுகள் வைகையில் வந்து கலக்கின்றன. வைகை அவற்றை ஏற்றுக்கொண்டு வடக்கு நோக்கிப் பாய்கின்றது. வெள்ளம் வரும்பொழுது வைகை நீர் பல கால்வாய்கள் வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது. இக்கால்வாய்கள் வழியே செல்லும் நீர் ஏரிகளை நிரப்பி விடுகின்றது. வயல்களை வளப்படுத்துகிறது.ஆற்றில் வாய்க்கால்களை வெட்டுவித்தும் ஊற்றுக்களைத் தோற்றுவித்தும் ஆற்று நீரை மக்கள் பயன்படுத்துகின்றனர். குழந்தை வேண்டும் பொழுது பாலை வழங்கும் தாய்போல, மக்கள் வேண்டும்பொழுது நன்னீரை வழங்கும் நிலையில் வைகையாறு இருப்பது மகிழ்வுக்குரியது. வைகையாறு பற்றிய விவரங்களைப் பரிபாடல், சிலப்பதிகாரம், திருவிளையாடற்புராணத்தில் விரிவாகக் காணலாம். வைகைக் கரையில் உள்ள திருப்பூவணம் என்னும் சிவத்தலம் பற்றிய நுால்களிலும் காணலாம்.
காவிரியின் தோற்றம்:


புலவர் பலரால் புகழப்பட்டதும் வற்றாத வளம் கொழிப்பதும் ஆகிய காவிரியாறு சையமலை (பிருமகிரி) என்னும் குன்றிலிருந்து தோன்றுகின்றது. இது குடகு நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குன்று.குடகு நாட்டு மக்கள் காவிரி தோன்றும் இடத்தில் முப்பது அடி சதுரமான குளம் ஒன்று அமைத்துள்ளனர். அக்குளத்தில் எப்பொழுதும் இரண்டரை அடி ஆழமே நீர் நிறைந்திருக்கும். இதற்குத் தலைக்காவிரி என்பது பெயர். இது இங்கிருந்து புறப்பட்டு 875 கி.மீ. பயணம் செய்து கடலில் கலக்கிறது.திருஞானசம்பந்தர், தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்களுக்கு சென்று பண் சுமந்த பாடல்களால் தமிழை, சமயத்தை வளர்த்தார். காளஹத்திக்கு சென்று அங்கிருந்து கேதாரம் போன்ற தலங்களை நினைந்து பாடுகிறார். இதே போல் 9ம் நுாற்றாண்டில் வந்த சுந்தரர், திருக்கேதாரத்தை பற்றி பாடுகிறார்.வளம் பொருந்திய தமிழக ஆறுகள் தெய்வத்தன்மையோடு இருந்திருப்பதை சமய இலக்கியங்கள் செப்பியுள்ளன. தமிழ் எழுத்தாளர்களின் நாவலில், கதைகளில், நம்முடைய ஆறுகள் பாத்திரமாகவே உள்ளன. தெய்வீகமயமான, பெருமை வாய்ந்த தமிழ்நாட்டு ஆறுகள், குளங்கள், நீர்நிலைகளை நாம் ஒன்று சேர்ந்து பாதுகாப்போம்.- முனைவர் தி.சுரேஷ்சிவன்


செம்மொழி இசைத்தமிழ் அறிஞர்


மதுரை. 94439 30540

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (4)

மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
30-ஜூலை-202015:10:34 IST Report Abuse
மலரின் மகள் நதிகள் மறைத்து அபார்ட்மெண்ட் உருவாக்கியதற்கு காரணம் பில்டர்ஸ்களா அல்லது அனுமதியளித்த அதிகாரிகளோ? சில லட்சத்திற்கு ஆசைப்பட்டு பாரம்பரியத்தையும் பரம்பரையையும் சிதைத்தவர்கள் அந்த கயவர்கள்.
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
30-ஜூலை-202011:30:41 IST Report Abuse
Rameeparithi ஆறுகள் எல்லாம் வரலாறு என்று புத்தகத்தில் படிக்கும் நிலை வருங்கால சந்ததியருக்கு வரக்கூடாது
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
30-ஜூலை-202008:14:35 IST Report Abuse
Lion Drsekar மிக அருமையான கருத்து, பாராட்டுக்கள், புனித கூவத்தை இப்படி ஆக்கிய பெருமை நம் குறுநில மன்னர்களுக்கே போய்சேரும், இதே நிலைக்கு ஆறுகளையும் ஆக்குவதில் முழுக்கவனம் செலுத்துகின்றன, காரணம், புனிதம் என்று ஒன்று இருப்பதால், காவிரி கொள்ளிடம் அருகில் சென்று பார்த்தல் தெரியும் கோழி மற்றும் ஆடு வெட்டி எல்லா பயன்படுத்த முடியாத கழிவுகளை அதுவும் அணைக்கு அருகிலேயே தினம் தினம் மலை போல் கொட்டுகிறார்கள், இதுவரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை, காரணம், கலவரம் வரும் என்று எண்ணி, இந்த நிலையில் "தெய்வீகமான ஆறுகளை காப்போம்" என்ற செய்தி ஆறுதல் அளிக்கிறது, ஆனால் எந்த அளவுக்கு இயல்பு வாழ்வில் இருக்கும் என்பது சற்று வருத்தம் அளிக்கிறது, அரிய கருத்துக்கள் அனைத்துமே எட்டு சுரைக்காயாகி விட்டது, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X