வாஷிங்டன் :''சீன அதிபராக, ஷீ ஜிங்பிங் பொறுப்பேற்ற பின் தான், அந்தநாடு முரட்டுத்தனமாக நடந்து கொள்ளத் துவங்கியது,'' என, ஐ.நா.,வுக்கான அமெரிக்காவின் முன்னாள் துாதரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹாலே, காட்டமாக தெரிவித்து உள்ளார்.
அவர் தனியார், 'டிவி'க்கு அளித்த பேட்டி:ஜிங்பிங் அதிபராவதற்கு முன், சீன அதிகாரிகள் மிகவும் அமைதியான முறையில், திரைமறைவில் தான், ஐ.நா.,வில் பதவிகளை பிடிக்க முயற்சிப்பர். ஜிங்பிங் தன்னை ஒரு மன்னர் போல காட்டிக் கொள்ளத் துவங்கிய பின், அந்நாட்டு அதிகாரிகளிடம், முரட்டுத்தனம் அதிகரித்து விட்டது. ஐ.நா.,வில், ஆள்காட்டி விரலை சுட்டிக் காட்டி பதவிகளை பிடிக்கவும், தலைமை பொறுப்புக்கு வரவும், தங்களுக்கு ஓட்டு போடுமாறு, உறுப்பு நாடுகளை மிரட்டவும் ஆரம்பித்து விட்டனர்.

இது, நீண்ட நாள் நிலைக்காது. மக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தினால், புரட்சி வெடிக்கும் என்பது வரலாறு. ஹாங்காங், தைவான், தென் சீன கடல், தற்போது இந்தியா என, அனைத்து நாடுகளையும், சீனா சீண்டி வருகிறது.ஆனால், அமெரிக்காவை சீனாவால் ஒன்றும் செய்ய முடியாது. ஹூஸ்டனில் இருந்த சீன துாதரகம், அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை முதல், கொரோனா தடுப்பூசி ஆய்வு வரை அனைத்து தகவல்களையும் உளவு பார்த்தது. அதனால், துாதரகத்தை டிரம்ப் மூடியது சரியான முடிவு தான். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE