பொது செய்தி

தமிழ்நாடு

மனிதவளதுறை பெயர் மாற்றம் :கல்வியாளர்கள் வரவேற்பு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement


கோவை:

புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து கல்வியாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.புதிய தேசிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை, இனி மத்திய கல்வித்துறை என்று மாற்றப்படுகிறது. புதிய தேசிய கல்வி கொள்கையில், மழலையர்கல்வி, மழலையர் உயர்நிலை கல்வி, ஐந்தாண்டு - மூன்றாண்டு கல்வி, தேர்வு முறைகளில் மாற்றம், தன்னாட்சி அதிகாரம் உள்பட பல்வேறு விஷயங்கள் ஆராய்ந்து மாற்றப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.பெயர் மாற்றம் வரவேற்கிறோம்பிச்சாண்டி (முன்னாள் பேராசிரியர், கோவை: மனிதவள மேம்பாட்டு துறை என்பது மத்திய கல்வித்துறை என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றத்தை வரவேற்கிறோம். இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் கல்வித்துறை இன்னும் மேம்பாடு அடைய வேண்டியுள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து, கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு கலந்துரையாடல்கள்,கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில், புதிய தேசிய கல்வி கொள்கைக்கு சில எதிர்ப்புகள் இருந்தன. அந்த எதிர்ப்புகளுக்கு கல்வி கொள்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா அல்லது பழைய வகையிலேயே நீடிக்கிறதா என்பதை முழுமையாக பார்த்த பின்தான் தெரிவிக்க முடியும். கருத்து பரிமாற்றங்கள், கருத்தாய்வு முடிவுகள் புதிய கொள்கையில் இடம் பெற்றிருப்பது வரும் நாட்களில் தான் தெரியவரும்.சுதந்திரமான கற்றல் முறைபாலகுருசாமி, முன்னாள் அண்ணா பல்கலை துணை வேந்தர் மற்றும் முன்னாள் யு.பி.எஸ்.சி., உறுப்பினர்: சுதந்திரத்திற்கு பின், ஏழாவது முறையாக, புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படுகிறது. எந்த கொள்கையும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள, இக்கொள்கை முழுமையாக அமல்படுத்தினால், அடுத்த 10 ஆண்டுகளில், நாட்டின் கல்வித்தரம் உயரும். இதில், கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் என அனைத்து வகை படிப்புகளும், ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. உயர்கல்வியில், தேர்வு செய்த பாடத்தை மட்டுமல்லாமல், எந்த பாடத்தையும் படிக்கும் சுதந்திரமான கற்றல் முறை இடம்பெற்றுள்ளது. செயல்வழி கல்வி, பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறோம்.உயர்கல்விக்கு சிறந்த அடித்தளம்ஜெயபிரகாஷ் காந்தி, கல்வியாளர்: இளங்கலை படிப்புக்கான காலம், நான்கு ஆண்டுகளாக அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதோடு, முதுநிலை படிப்புகளிலும், செய்முறை பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படுவதால், தொழில்நுட்ப வழியில், மாணவர்கள் கற்க வாய்ப்பு கிடைக்கும். இணைய வழியிலான பாடம், அந்தந்த மாநில மொழிகளில் வெளியிடுவதால், அனைத்து தரப்பு மாணவர்களும் பயன்பெறுவர். இதோடு, படிப்பறிவு விகிதம் குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் உருவாக்குவதால், நாட்டின் ஒட்டுமொத்த கல்வித்தரம் மேம்படும். அனைத்து வகையில் வரவேற்கத்தக்க அறிவிப்பாக இதை கருதுகிறேன்.சிறந்த பள்ளி கட்டமைப்புபாலகிருஷ்ணன், கல்வியாளர் மற்றும் தமிழ் நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில ஆலோ சகர்: பள்ளிக்கல்வியை, 5+3+3+4 என்ற ரீதியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதோடு, பிளஸ் 2 வரை கட்டாய கல்வி முறை கொண்டு வரப்பட்டுள்ளதால், குறைந்தபட்ச கல்விக்கான நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மேலும், பள்ளிகளில் தொழிற்கல்வி அறிமுகப்படுத்தும் போது, முழுமையாக செயல்படுத்தும் வகையில், செயல்முறைகள் உருவாக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு வரை, தாய்மொழி கல்வி, கட்டாயமாக்கப்பட்டுள்ளதை பத்தாம் வகுப்பு வரை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில், பிராந்திய மொழிகளுக்கான முக்கியத்துவம் குறைய வாய்ப்புள்ளது.'கல்வி தரம் உயர உதவும்'காளிராஜ், துணைவேந்தர், பாரதியார் பல்கலை, கோவை: கல்வி கொள்கை வரைவு, மத்திய அரசு கொண்டு வர, அதை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தும். அந்தந்த மாநிலங்களில் உள்ள சூழலுக்கு ஏற்ப இந்த நடைமுறைகள் இருக்கும். தற்போது கொண்டு வரப்பட உள்ள புதிய தேசிய கல்வி கொள்கையில் பல்வேறு மாற்றங்கள் உள்ளன. இதன்படி, அடுத்த, 15 ஆண்டுகளில் பல்கலைக்கு உட்பட்ட உறுப்பு கல்லுாரிகள், அவர்களாவே தேர்வுகளை நடத்தி, பட்டம் கொடுக்கும் நிலைக்கு செல்லும்.கல்வி தரத்தை உயர்த்த இதுபோன்ற நடவடிக்கைகள் உதவும். இதனால், தரமான கல்வியை கொடுக்கும் நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும். தரமில்லாத, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இயலாத கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவது கடினமாகிவிடும். அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கொடுக்க திட்டமிடப்பட்டு, புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.ஒரே மாதிரி திட்டம் அவசியம்ராமசாமி, முன்னாள் துணைவேந்தர், கோவை வேளாண் பல்கலை: புதிய தேசிய கல்வி கொள்கையில், நான்கு ஆண்டு பட்டம் படிக்கும் மாணவன், அதை முடித்து பி.எச்டி., படிப்புக்கு செல்லலாம். வெளிநாடுகளில், 24-25 வயதில் ஒருவர் பி.எச்டி., முடித்து வேலையில் சேர்ந்து விடுகிறார். அதே நம் நாட்டில், 22 வயதில் தான் பட்டம் பெறுகின்றனர். இதுபோன்ற இடைவெளிகளை குறைத்து மாணவர்கள் ஒரே பாதையில், அனைவருக்கும் ஒரே மாதிரி அமையும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X