சேலம்: ஏற்காட்டில், சில நாளாக பெய்து வரும் மழையால், ஆங்காங்கே திடீர் அருவிகள் உருவாகியுள்ளன.
கிழக்கு சரபங்காவிலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் முழுதும், நேற்று முன்தினம் இரவு, பரவலாக மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக, ஆத்தூரில், 82.6 மி.மீ., மழை பதிவானது. தம்மம்பட்டி, 60, வாழப்பாடி, 14, ஆணைமடுவு, 19, கரியகோவில், 17, பெத்தநாயக்கன்பாளையம், 26, கெங்கவல்லி, 22, வீரகனூர், 12 என, மாவட்டம் முழுதும், 376.9 மி.மீ., மழை பதிவானது. ஏற்காட்டில், சில நாளாக, பெய்து வரும் மழையால், குளுகுளு சீதோஷ்ண நிலை உள்ளது. அத்துடன், சேலத்திலிருந்து, ஏற்காடு செல்லும் பிரதான சாலையில், ஆங்காங்கே திடீர் அருவிகள் தோன்றியுள்ளன. ஊரடங்கால், சுற்றுலா பயணியருக்கு அனுமதியில்லை என்பதால், சாலைகள் மட்டுமின்றி, ஏற்காடு முழுதும் வெறிச்சோடியுள்ளது. நான்கு மாதமாக, சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படாததால், அதை நம்பியுள்ள பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை உள்கோம்பையில், மேற்கு சரபங்கா ஆறு உற்பத்தியாகிறது. அதில், கடந்த வாரம் முதல், தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. அதேபோல், ஓமலூர், சக்கரைசெட்டிப்பட்டி ஊராட்சி, குறுமிச்சங்கரடு அடிவாரப்பகுதியில், கிழக்கு சரபங்கா ஆறு உற்பத்தியாகிறது. சில நாளாக பெய்த மழையால், நேற்று முன்தினம் இரவு முதல், கிழக்கு சரபங்கா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறுமிச்சங்கரடு குட்டை நிரம்பி, அதிலிருந்து வெளியேறும் நீரை, அப்பகுதி மக்கள் பார்த்து ரசிக்கின்றனர். தற்போது, அப்பகுதியில், வாழை, மஞ்சள், ஆலைக்கரும்பு, குச்சிக்கிழங்கு ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர். ஆற்றில் தண்ணீர் வரத்தொடங்கியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறுமிச்சங்கரடில் தொடங்கும் வெள்ள நீர், சக்கரைசெட்டிப்பட்டி வழியாக, பூலா ஏரி, காமலாபுரம் சின்ன ஏரி, பெரிய ஏரிக்கு வந்து, ஓமலூரை அடைகிறது.
நீர்வரத்து அதிகரிப்பு: வாழப்பாடி, புழுதிக்குட்டையில், 67 அடி உயரமுள்ள ஆணைமடுவு அணையில், 21.95 அடி உயரம் தண்ணீர் உள்ளது. வினாடிக்கு, 11 கன அடி தண்ணீர் வருகிறது. அதேபோல், ஆத்தூர் அடுத்த, பாப்பநாயக்கன்பட்டியில், 59 அடி உயரமுள்ள கரியகோவில் அணையில், தற்போது, 3.88 அடி உயரம் தண்ணீர் உள்ளது. வினாடிக்கு, 10 கன அடி வீதம் வரும் தண்ணீர், வெள்ளாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
வியாபாரிகள் அவதி: சேலம், வ.உ.சி., மார்க்கெட்டில், சீர்மிகு நகர திட்டத்தில், நவீன வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக, அங்கிருந்த கடைகள் அகற்றப்பட்டு, கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, கடை வைத்திருந்தவர்களுக்கு, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, தற்காலிக கடை அமைக்கும் பணி நடக்கிறது. அதுவரை, கடைவீதி பிரதான சாலையில், காலை, 9:00 மணி வரை, காய்கறி கடை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முதல், தொடர்ந்து மழை பெய்ததால், அப்பகுதியில் கடை வைத்திருந்த வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர். மழையால், மக்களும் வராததால், வியாபாரம் படுமந்தமாக இருந்தது.
மின்மாற்றி சேதம்: ஆத்தூர், 27வது வார்டு, ராஜாஜி காலனியில், 200 கிலோவாட் திறனுடைய மின்மாற்றி உள்ளது. இதன்மூலம், 350 குடியிருப்புக்கு, மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, கனமழையின்போது மின்னல் தாக்கி, மின்மாற்றி சேதமடைந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் ஊழியர்கள், அந்த மின்மாற்றியை அகற்றி, நேற்று, புதிதாக அமைத்து, மின்சாரம் வினியோகித்தனர். மின் ஊழியர்கள் கூறுகையில், 'மழை பெய்தபோது, காவிரி குடிநீர் வினியோகிக்கப்பட்டது. வீடுகளில் அதிகளவில் மின்மோட்டார் பயன்படுத்தியதால், மின்திறன் அதிகரித்தும், இடி, மின்னலும் இருந்ததால் பழுதானது. இருப்பினும், புது மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ளது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE