கிருஷ்ணகிரி: பட்டா நிலத்தில் உள்ளதாக கூறி, குடிநீர் குழாய் உடைக்கப்பட்டதால், நான்கு மாதங்களாக குடிநீரின்றி, கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கவுண்டனூர் பஞ்., சாணிப்பட்டியில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு, அக்கிராமத்தின் அருகே அரை கி.மீ., தொலைவிலுள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து எப்போதும் வற்றாமல், தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த, ஓய்வுபெற்ற தமிழாசிரியர் சம்பத், 63, என்பவர், விவசாயம் செய்ய ஆழ்துளை கிணறு அமைத்தார். ஆனால், அதில் தண்ணீர் கிடைக்கவில்லை. இனால், அவரது வீட்டின் அருகிலுள்ள, ஆழ்துளை கிணற்றிலிருந்து, 32 ஆண்டுகளாக தண்ணீர் செல்வதை நினைத்து வருத்தம் அடைந்தவர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் குழாயை உடைத்து சேதப்படுத்தினார். இதனால், கடந்த நான்கு மாதங்களாக குடிநீர் இன்றி, கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அருகேயுள்ள விவசாய நிலங்களுக்கு சென்று, தண்ணீர் பிடித்து வருகின்றனர். இதுபற்றி பஞ்., தலைவர் ஜெகதீசன், மத்தூர் பி.டி.ஓ., மற்றும் கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து, மத்தூர் பி.டி.ஓ., வெங்கட்ராமகணேசிடம் கேட்ட போது, ''ஆழ்துளை கிணறு சம்பத்தின், பட்டா நிலத்தில் உள்ளது. தன் பட்டா நிலம் எனக்கூறி அவர் பைப் லைனை உடைத்துள்ளார். கொரோனா காரணமாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE