கோவை:மின்வசதி, இணையதள வசதி மட்டுமல்லாமல், எந்த அடிப்படை வசதிகளும் இன்றி, பல கிலோ மீட்டர் துாரம் பயணித்து, பள்ளிக்கு வரும் மலைகிராம குழந்தைகளுக்கு, தற்போதைய இக்கட்டான சூழலில், கல்வி எட்டாக்கனியாகி மாறியுள்ளது. மாற்று ஏற்பாடு செய்ய, கல்வித்துறை முன்வர வேண்டும்.
கோவை மாவட்டத்தில், வால்பாறை, ஆனைமலை, காரமடை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி, ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன. இக்குழந்தைகள் கல்வி பெற, மலைப்பகுதிகளிலே பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதிகளில், பள்ளி துவங்கும் நேரம், முடிவடையும் நேரத்திற்கு, அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது தவிர, ஆட்டோ, வேன் வசதி ஏற்படுத்தியும், குழந்தைகள் பள்ளிக்கு வரவழைக்கப்படுகின்றனர்.முதல் தலைமுறை குழந்தைகள்பரளிக்காடு பகுதியில், நெல்லிமரத்துார், பூச்சமரத்துார், சுறுக்கி, தோண்டை உள்ளிட்ட பகுதிகளில், பரிசலில் பயணித்து, மறுகரைக்கு வந்து, பஸ் ஏறி மாணவர்கள் பள்ளிக்கு செல்வதே வழக்கம். இப்பகுதி குழந்தைகள், வெள்ளியங்காடு, பவர்ஹவுஸ் அரசுப்பள்ளிகளில் படிக்கின்றனர்.இவர்களில் 99 சதவீதம் பேர், முதல் தலைமுறையாக பள்ளி செல்பவர்கள். கொரோனா தொற்று பரவிவரும் இச்சூழலில், பள்ளிகள் திறக்கப்படாததால், படிக்க முடியாமல், ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் இன்றி, இக்குழந்தைகள் தவிக்கின்றனர்.மின்சார வசதி கிடையாது!குறிப்பாக, ஆழியாறு பகுதிக்குட்பட்ட எல்லப்ப நகர், அன்பு நகர் பகுதியில் உள்ள பழங்குடியின மக்களின் வீடுகளில், மின்சார வசதி இல்லை. இணையதள வசதியும் இல்லாததால், கல்வி தொலைக்காட்சி வழியாக நடத்தப்படும் வகுப்புகளும், இக்குழந்தைகளுக்கு எட்டாக்கனியாக மாறி விட்டது.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக, கல்வி தொலைக்காட்சி உதவியுடன், அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், பாடம் நடத்தப்படுவதாக, கூறும் பள்ளிக்கல்வித்துறை, மலைகிராம குழந்தைகளின் நலனுக்கு என்ன செய்ய போகிறது என, கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.கல்வியாளர் சங்கமம் ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் கூறியதாவது:ஒரு வகுப்பறை சூழலை, ஆன்லைன் கல்வியால் பூர்த்தி செய்ய முடியாது. நகர்ப்புற, கிராமப்புற பெற்றோர், பெரும்பாலும் பள்ளிப்படிப்பை முடித்தவர்களாக இருப்பதால், குழந்தைகளை வழி நடத்த முடியும்.மலைகிராம குழந்தைகளுக்கு, இதுபோன்ற வாய்ப்புகள் இல்லாததால், ஆசிரியர்களையோ, தன்னார்வலர்களையோ கொண்டு வகுப்பை கையாளலாம்.
பல மலை கிராமங்களில், சொற்ப குழந்தைகளே இருப்பதால், பொது இடத்தில், உரிய சமூக இடைவெளி பின்பற்றி, அடிப்படை கல்வி அளிக்க, அரசு ஏற்பாடு செய்யலாம்.வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள், குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமாவது, ஆசிரியர்களை வகுப்பு எடுக்க அறிவுறுத்தலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.மலைகிராமங்களில் உள்ள குழந்தைகள், அங்குள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- உஷாமாவட்ட முதன்மை கல்வி அலுவலர்பல மலை கிராமங்களில், சொற்ப குழந்தைகளே இருப்பதால், பொது இடத்தில், உரிய சமூக இடைவெளி பின்பற்றி, அடிப்படை கல்வி அளிக்க, அரசு ஏற்பாடு செய்யலாம். வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள், குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமாவது, ஆசிரியர்களை வகுப்பு எடுக்க அறிவுறுத்தலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE