எங்களுக்கு எப்போது விடிவுகாலம்? பகுதிநேர ஆசிரியர்கள் தவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எங்களுக்கு எப்போது விடிவுகாலம்? பகுதிநேர ஆசிரியர்கள் தவிப்பு

Added : ஜூலை 30, 2020
Share

திருப்பூர்:தமிழகத்தில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் தொடர்ந்து இழுபறியாவதால், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.பள்ளி கல்வித்துறையில் உடற்கல்வி, இசை, ஓவியம் மற்றும் கலைத்தொழில் உள்ளிட்ட பாடங்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு முதல் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களாக, 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு மூன்று மணிநேரம் வீதம், வாரத்தில் மூன்று நாட்களும், மாதம், 12 நாட்கள் மட்டுமே பணி நாட்களாகும்.அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா, மாதம், 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயித்தார். தற்போது, 7 ஆயிரத்து, 700 ரூபாயாக சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஜூன் முதல் ஏப்., மாதம் வரை 11 மாதங்கள் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. மே மாத சம்பளம் வழங்கப்படுவதில்லை.பகுதிநேர ஆசிரியர்கள் கூறியதாவது:தற்போது கொரோனா காலத்தில் பள்ளிகள் யாவும் இயங்கவில்லை. பல போராட்டத்துக்கு பின்னரே ஜூன் மாதம் ஊதியம் கைக்கு வந்தது. தற்போது, ஜூலை மாதம் நிறைவடையும் தருவாயில், இந்த மாதம் சம்பளம் வழங்குவது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு இதுவரை எந்தவொரு தகவலும் வரவில்லை.கொரோனா நோய் தொற்றால், வாழ்வாதாரமின்றி தவிக்கும் எங்களுக்கு ஜூலை மாதம் ஊதியம் முழுமையாக வழங்க வேண்டும். 2017ல் உறுதியளித்தபடி, பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X