பொது செய்தி

தமிழ்நாடு

சபாஷ்... சொல்வோம்! வாழைத்தோப்பாக மாறியது பள்ளி வளாகம்:கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி மகுடம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
 சபாஷ்... சொல்வோம்! வாழைத்தோப்பாக மாறியது பள்ளி வளாகம்:கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி மகுடம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, அரசு பள்ளி வளாகத்தில் அழகாய் காட்சியளிக்கிறது வாழைத்தோப்பு. பள்ளியில் தோட்டக்காரர் நியமித்து வாழை பயிரிட்டுள்ளார்களா என்று நினைக்க வேண்டாம்; மாணவர், ஆசிரியர்கள் ஒத்துழைப்பால் இது சாத்தியமாகியுள்ளது.அரசுப்பள்ளிகளில், மாணவர்களிடம் கல்வியோடு விவசாயம் மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்து சிறு வயதிலேயே எண்ணத்தில் விதைக்கும் வகையில், மரக்கன்று வளர்ப்பு, காய்கறி தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்துகின்றனர்.
அதில், பொள்ளாச்சி அருகே நாயக்கன்பாளையம் அரசுப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களோடு இணைந்து, வளர்த்த வாழை மரங்கள், தற்போது தோப்பாக மாறியுள்ளது. இது, மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை, 180 மாணவர்கள் படிக்கின்றனர்; எட்டு ஆசிரியர்களும் உள்ளனர்.சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், மரக்கன்று வளர்ப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில், மாணவர்களால், 110 வாழை கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
சொட்டு நீர் பாசன குழாய் அமைத்து வாழை மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சப்படுகிறது.மாணவர்கள், ஆசிரியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது, பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் சாகுபடி செய்த வாழையை வாடாமல் பாதுகாக்கும் பணியில், வாட்டர் மேன் முத்துசாமி ஈடுபட்டுள்ளார்.இதன் விளைவாக, தற்போது பசுமையாக வளர்ந்து, பள்ளி வளாகம் வாழைத்தோப்பாக காட்சியளிக்கிறது. வாழைகள் செழிப்பாக வளர்ந்து, குலை தள்ளியுள்ளன.பள்ளி மாணவர்கள் அவ்வப்போது பள்ளி வளாகம் வந்து நன்றாக வளர்ந்துள்ள வாழை தோப்பை பார்த்து செல்கின்றனர்.
பள்ளி தலைமையாசிரியர் தண்டபாணி கூறியதாவது:சுற்றுச்சூழல் மன்றத்துக்கு வழங்கப்பட்ட தொகையை கொண்டு வாழை கன்றுகள், தேக்கு, நாவல், வேம்பு, புங்கை உள்ளிட்ட மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டுள்ளன.மாணவர்களின் ஆர்வம், ஆசிரியர்களின் ஒத்துழைப்பால், ஏழு மாதத்துக்கு முன் நடவு செய்யப்பட்ட வாழை மரக்கன்றுகள் நன்றாக வளர்ந்து தோப்பாக காட்சியளிப்பது மனதுக்கு நிறைவை தருகிறது.போதிய இடைவெளி விட்டு வளர்க்கப்பட்ட வாழைக்கன்றுகள் ஊக்கமாக வளர்ந்துள்ளன. வாட்டர் மேனும் தண்ணீர் முறையாக பாய்ச்ச உதவி செய்தார். வாரம் இரு முறை வந்து பார்த்து செல்கிறேன்.
மேலும், பள்ளி வளாகத்தில் மூலிகை செடி வளர்ப்பு உள்ளிட்டவையில் கவனம் செலுத்துகிறோம். மாணவர்களிடம் மரக்கன்று வளர்ப்பு, விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மரக்கன்று வளர்ப்பில் ஈடுபட்ட, 50 மாணவர்களுக்கு தலா, 100 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
முன்னுதாரணமான பள்ளி!தேசிய பசுமைப்படை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் கூறுகையில், ''நாயக்கன்பாளையம் அரசுப்பள்ளிக்கு சுற்றுச்சூழல் மன்றத்துக்கு, 50 மாணவர்கள், 50 மரக்கன்றுகள் திட்டத்தின் கீழ், ஐந்தாயிரம் ரூபாயில், மரக்கன்றுகள் வாங்கவும்; ஐந்தாயிரம் ரூபாயில் கருவிகளும் வாங்கி தரப்பட்டது.50 மாணவர்களுக்கு தலா, 100 ரூபாய் வீதம் மொத்தம், ஐந்தாயிரம் ரூபாய் பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்பட்டது.இது மாணவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தும். மற்ற பள்ளிகளும் இது போன்று மரம் வளர்ப்பில் கவனம் செலுத்தினால் பள்ளி வளாகங்கள் பசுமையாகவும், இயற்கை சூழலுடன் காணப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X