கிடப்பில் ஜாம் தொழிற்சாலை: உடுமலை விவசாயிகள் விரக்தி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிடப்பில் 'ஜாம்' தொழிற்சாலை: உடுமலை விவசாயிகள் விரக்தி

Added : ஜூலை 30, 2020
Share

உடுமலை:விலை வீழ்ச்சி காலங்களில், தக்காளியை ரோட்டோரத்தில், கொட்டும் அவலத்தை தடுக்க, 'ஜாம்' தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதால், விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.உடுமலை தினசரி சந்தை மற்றும் மொத்த வியாபாரிகள் மூலம் விவசாயிகளிடமிருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது.இந்நிலையில், வீரிய ரக விதைகள், நுண்ணீர் பாசனம் உட்பட காரணங்களால், தக்காளி விளைச்சல், ஏக்கருக்கு 10 டன் வரை உயர்ந்துள்ளது.இதனால், சீசன் சமயங்களில், வரத்து பல மடங்கு உயர்ந்து விலை சரிகிறது. பாதிக்கப்படும் விவசாயிகள், போக்குவரத்திற்கு செலவிட்டு, தக்காளியை உடுமலைக்கு கொண்டு வராமல், ரோட்டோரத்தில் வீசி விடுகின்றனர்.கடந்த சில வாரங்களாக தக்காளிக்கு நிலையான விலை இல்லாததால், தக்காளியை செடிகளிலிருந்து அறுவடை செய்யாமல், அப்படியே விட்டு வருகின்றனர்.உடுமலை தினசரி சந்தையில், தக்காளிக்கு தேவை குறைந்துள்ளதால், வியாபாரிகள் ஏலம் எடுக்க ஆர்வம் காட்டுவதில்லை.விவசாயிகள் கூறியதாவது: விலை வீழ்ச்சி காலங்களில், சிறியளவிலான தக்காளி பழங்களை வியாபாரிகள் கொள்முதல் செய்வதில்லை. எனவே, அவ்வகை பழங்களை ரோட்டில் வீச வேண்டிய நிலை ஏற்படுகிறது. பல ஆயிரம் ஏக்கரில், பயிரிடப்படும் சாகுபடியை பாதுகாக்க, அரசு, தக்காளியிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் 'ஜாம்' தொழிற்சாலையை உடுமலை பகுதியில், துவக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X