சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

மொழி திணிப்பு ஏதுமில்லை!

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
மொழி திணிப்பு ஏதுமில்லை!

சு.ப.மாணிக்கம், பொன்னமராவதி, புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு மனிதன், தன் தாய் மொழியை கற்பதும், அதன் சிறப்பை அறிந்து கொள்வதும், அவனுடைய அடிப்படை உரிமை.

கடந்த, 1965ல், இந்திய அரசின் ஆட்சி மொழியாக, ஹிந்தியை அறிவிக்க, மத்திய அரசு திட்டமிட்டது. அப்போது, தமிழக மக்களும், மாணவர்களும், தற்போதுள்ள திராவிட கட்சிகளும் இணைந்து, ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி, தமிழுக்கு, தனி அடையாளம் பெற்று தந்தனர் என்பது, பெருமைக்குரியது.அதன்பின், இந்திய அரசின் ஆட்சி மொழியாக ஹிந்தியும், ஆங்கிலமும், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையில், நம் நாட்டில், பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி ஹிந்தி என்பதை, ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மக்கள், உணரத் துவங்கி உள்ளனர்.ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மக்கள், மும்பை, டில்லி, புனே, சூரத் போன்ற முக்கிய நகரங்களுக்கு சென்று பணியாற்றும்போது, நடைமுறை வாழ்க்கையில், பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.

அதனால், தமிழகத்தில் உள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெற்றோர், தங்கள் குழந்தைகளை, ஹிந்தி மொழி கற்பிக்கும், தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.கல்வி மற்றும் விருப்பம் உள்ள மொழியை கற்றுக் கொள்வது, நாட்டில் உள்ள குழந்தைகளின் அடிப்படை உரிமை. இதை கருதி, மத்திய அரசு, 2019 ஜூன், 1ல், புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை வெளியிட்டது.

அதில், குழந்தைகள் தங்கள் புரிதலுக்காக, தாய்மொழி வழி கல்விக்கு முன்னுரிமையும், ஆங்கிலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும், மூன்றாவது மொழி பாடமாக, ஹிந்தி பேசுகிற மாநிலங்களில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட, தென்மாநில மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஹிந்தி பேசாத மாநிலங்களில், ஹிந்திக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது; இதில், மொழி திணிப்பு ஏதுமில்லை.

விருப்பமுள்ள மொழியை, நம் குழந்தைகள் கற்றுக் கொள்வதை தடுக்க, யாருக்கும் உரிமை இல்லை. இந்த மூன்று மொழி கல்வி திட்டம் வழியே, நம் நாட்டின் வருங்கால சமுதாயம், நல்ல நிலையை அடையும். எனவே, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை வரவேற்போம்.

***


காங்.,வரலாறு தெரியுமா?


கே.சிங்காரம், தலைவர் நகர காங்கிரஸ் கமிட்டி, வெண்ணந்துார், நாமக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'தி.மு.க.,வால் தான், தமிழகத்தில் காங்கிரஸ் உயிரோடு இருக்கிறது' என, வாசகர் ஒருவர், இப்பகுதியில் கடிதம் எழுதியிருந்தார். அவர், தமிழக அரசியல் வரலாறு சரியாக அறியாதவர் என, எண்ணத் தோன்றுகிறது.

நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்த காங்கிரஸ், தமிழகத்தில், 1967 வரை ஆட்சியில் இருந்தது. லஞ்சம், ஊழல் எதுவுமின்றி, குறைந்த வருமானத்தில், தமிழகத்தில் நிலையான நீர் பாசனத் திட்டங்களை செயல்படுத்தியது. தமிழகத்தில், காங்கிரஸ் ஆட்சி செய்த சாதனைகளை, மக்கள் மறக்க மாட்டார்கள்.

மத்திய அரசு, 1965ல், ஹிந்தியை, தமிழகத்தில் திணிப்பதாக, மாணவர்களை துாண்டிவிட்டு, அந்த நெருப்பில், தி.மு.க., குளிர் காய்ந்தது. மேலும், தி.மு.க., வினர், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 1 ரூபாய்க்கு, 3 படி அரிசி தருவோம்' என, மலிவான வாக்குறுதி அளித்து, மக்களை ஏமாற்றி, ஆட்சியில் அமர்ந்தனர்.

தி.மு.க.,வைச் சேர்ந்த அண்ணாதுரை, முதல்வராக பதவி ஏற்று, ஓர் ஆண்டிற்குள், உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அவர் மறைவிற்கு பின், தி.மு.க., ஆட்சியில் நடந்த ஊழல்களை கண்டித்து, எம்.ஜி.ஆர்., அக்கட்சியில் இருந்து பிரிந்து, அ.தி.மு.க.,வை உருவாக்கினார்.

கடந்த, 1977ல், காங்கிரஸ் - அ.தி.மு.க., கூட்டணி அமைத்து, லோக்சபா தேர்தலை சந்தித்து, 38 இடங்களில் வெற்றி பெற்றது.கூட்டணியில் ஏற்பட்ட பிளவு காரணமாக, 1980ல், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டு, லோக்சபா தேர்தலில், 38 இடங்களை பிடித்தது. பின், 1984, 1991 ஆகிய தேர்தல்களில், அ.தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி, அமோக வெற்றி பெற்றது.

மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில், மறைந்த, முன்னாள் முதல்வர், ஜெயலலிதா பேசும் போது, 'முன்னாள் பிரதமர், ராஜிவ் படுகொலையால் ஏற்பட்ட அனுதாப அலையால், நாங்கள் வெற்றி பெறவில்லை; எனக்காகத் தான், மக்கள் ஓட்டளித்தனர்' என்றார். அதில் இருந்து, அ.தி.மு.க., - காங்கிரஸ் உறவு பலவீனப்பட்டு விட்டது.கடந்த, 2004 மற்றும் 2009ல் நடந்த, லோக்சபா தேர்தல்களில், காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி அமைத்து, அதிக இடங்களை பிடித்தன.

இதை தொடர்ந்து, 2014 லோக்சபா தேர்தலின்போது, '2ஜி' ஊழல் காரணமாக, 1.75 லட்சம் கோடி ரூபாய், அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என, எதிர்க்கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்; மக்கள், அதை நம்பினர். இதனால் தான், பா.ஜ., வெற்றி பெற்றது.மத்தியில், பா.ஜ.,வும், மாநிலத்தில், அ.தி.மு.க.,வும் ஆளுங்கட்சியாக இருக்கும்போதே, கடந்த, லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி, 38 தொகுதிகளை கைப்பற்றியது.

எனவே, அரசியல் கட்சிகளின் செயல்பாட்டையும், ஆட்சியின் நிர்வாக திறனையும் கணக்கிட்டே, தேர்தலில், மக்கள் தங்கள் ஓட்டை பயன்படுத்துகின்றனர்.காங்கிரஸ் கட்சிக்கு, தொண்டர்கள் குறைவு தான். ஆனால், அரசியல் சாராத மக்கள் அனைவரும், காங்கிரஸ் மீது தனிப்பட்ட மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர்.

கடந்த, 2019ல் நடந்த லோக்சபா பொதுத் தேர்தலில், பிரதமர், மோடிக்கு எதிராகவும்; காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல், பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காகவும், தமிழக மக்கள் அளித்த ஓட்டுகளால் தான், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.எனவே, 130 ஆண்டு வரலாறு உடைய காங்கிரஸ் கட்சிக்கு, தி.மு.க., உயிர் கொடுக்கிறது என்பது போன்ற, தவறான எண்ணத்தை கைவிடுவது நல்லது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X