சென்னை : 'ஏழு ஆண்டுகள் மற்றும் அதற்கு குறைவான தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபடுவோரை, உரிய விசாரணை இன்றி, இயந்திரத்தனமாக கைது செய்யக் கூடாது' என, போலீசாருக்கு, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டு உள்ளார்.
போலீஸ் அதிகாரிகளுக்கு, நேற்று முன்தினம், அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை: ஏழு ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவான தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபடுவோரை கைது செய்வது குறித்து, உச்ச நீதிமன்றம், 2014ல் தீர்ப்பு அளித்து உள்ளது. அதன்படி, எந்த நபரையும், எவ்வித முகாந்திரமும் இன்றி, கைது செய்யக் கூடாது. விசாரணை அதிகாரியாக இருப்பவர், குற்றங்களுக்கான தன்மையை தீர ஆராய்ந்து, கைது செய்வதற்கான அவசியம் ஏற்பட்டால், எழுத்து வாயிலாக பதிவு செய்த பின், கைது நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
இவற்றை முறையாக செய்யாத, விசாரணை அதிகாரிகள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் புரிந்தவர்களை, நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தும் போது, அந்த நபர்கள், எதற்காக கைது செய்யப்பட்டனர் என்ற, முழு விபரத்தையும் தெரிவிக்க வேண்டும்.
'கைது நடவடிக்கையில், உரிய விசாரணை மற்றும் நடைமுறைகளை பின்பற்றாமல், இயந்திரத் தனமாக செயல்படக் கூடாது. 'அவ்வாறு செயல்படும், விசாரணை அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை, போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்படுவோர் அனைவரும் பின்பற்ற வேண்டும். மீறினால், நீதிமன்ற நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE