பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி வெள்ளி அம்மன் தரிசனம் - 2

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
ஆடி வெள்ளி அம்மன் தரிசனம் - 2

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில் தான் பிரபலம். தமிழகத்தில் பல இடங்களில் கருமாரி அம்மன் கோவில் இருந்தாலும், அதற்கெல்லாம் தலைமையிடமாக திகழ்வது, சென்னை அருகிலுள்ள திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில் தான்.

அம்மன் பற்றி பாடும் பாடல்களில் பெரும்பாலானவை, இந்த கருமாரி அம்மனை பற்றி தான் பாடப்பட்டிருக்கும். அதே போல் அம்மன் கோவில் திருவிழாக்கள் என்றால், இந்த கருமாரி அம்மனின் படம் தான் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும்.மிகவும் பழமையான இத்தலத்தில், மூலஸ்தான அம்மன் சுயம்பு வடிவில் காட்சி தருகிறாள்.

இவள் சாந்த சொரூபத்துடன், பராசக்தி அம்சத்தில் தங்க விமானத்தின் கீழ் இருக்கிறாள். அம்பிகை தானாக தோன்றியதால் இவளுக்கு, 'கருவில் இல்லாத கருமாரி' என்ற பெயரும் உண்டு. இவளுக்கு பின்புறம் அம்பாள் சிலை ஒன்றுள்ளது. இந்த அம்பிகை அக்னி ஜுவாலையுடன், கைகளில் கத்தி, கபாலம், டமருகம், சூலம் ஏந்தி அமர்ந்திருக்கிறாள்.

இக்கோவிலில் வேலாயுத தீர்த்தமும், தலவிருட்சமாக கருவேல மரமும் அமைந்துள்ளது. தினமும் மாலை பிரதோஷ வேளையில், அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த குங்குமத்தை பிரசாதமாக பெறுவதற்கு தனி பக்தர்கள் கூட்டமே உண்டு.

இக்கோவிலில் மரத்தால் செய்யப்பட்ட சிலை வடிவில் கருமாரியம்மனுக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளை, 'மரச்சிலை அம்மன்' என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.இவளிடம் வேண்டிக் கொண்டால் வீட்டிற்கும், குடும்பத்திற்கும் பாதுகாப்பாக இருப்பாள் என்பது நம்பிக்கை. எனவே, இவளிடம் வேண்டி அருகிலுள்ள உண்டியலில் பூட்டு வைத்து வழிபடும் வித்தியாசமான வழக்கம் இருக்கிறது.

பிரகாரத்தில் உற்சவ அம்பாள் ஊஞ்சலில் காட்சி தருகிறாள். கோவில் முகப்பில் அரச மரத்தின் அடியில் விநாயகர் இருக்கிறார். பால பிரத்யங்கிராவுக்கு தனி சன்னதி இருக்கிறது. நவக்கிரகம், வள்ளி, தெய்வானையுடன் முருகன், சீனிவாசர், பத்மாவதி, ஆஞ்சநேயர் சன்னதிகளும் உள்ளன.

வைகாசி விசாகத்தன்று சீனிவாசர் கருட சேவை சாதிக்கிறார். தட்சிணாமூர்த்தி, அங்காள பரமேஸ்வரி, உச்சிஷ்ட கணபதி, காயத்ரி, மகாலட்சுமி, ராஜராஜேஸ்வரி, சாவித்திரி, துர்க்கை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். கோவிலுக்கு வெளியே புற்று சன்னதி உள்ளது. அம்மன் சன்னதி எதிரில் கொடிமரம் உள்ளது. பெரும்பாலான அம்மன் தலங்களில் திருவிழாவின்போது, காப்புக்கட்டித்தான் விழா நடத்துவர்.

இங்கு, விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது.பொதுவாக ஐப்பசி பவுர்ணமியில் சிவனுக்கு தான் அன்னாபிஷேகம் நடக்கும். சிவனில் பாதி அம்மன் என்பதால், இங்குள்ள கருமாரியம்மனுக்கு ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடப்பது சிறப்பு.ஆடி மாதத்தில் இங்கு நடக்கும் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோவில்களில் திருவிழா அதிகபட்சம், 15 நாட்கள் நடக்கும்.

அரிதாக சில அம்பாள் கோவில்களில், 48 நாட்கள் வரையில் விழா நடத்துவர். ஆனால், இக்கோவிலில் ஆடி முதல் வாரத்தில் துவங்கும் விழா புரட்டாசி மாதம் வரையில் மொத்தம், 12 வாரங்கள் நடக்கிறது. மாசி மகத்தன்று அம்பாள் வங்காள விரிகுடா கடலுக்குச் சென்று தீர்த்த நீராடுகிறாள்.பசு சாணத்தில் செய்த சாம்பலையே இக்கோவிலில் பிரசாதமாக தருவது சிறப்பு. நாள்பட்ட தீராத வியாதி உடையவர்கள் இங்கு தரப்படும் திருச்சாம்பலை தீர்த்தத்துடன் அருந்தினால், விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை. மேலும் திருமணத்தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும் இங்கு வேண்டிக் கொள்கின்றனர்.

வேண்டும் பக்தர்களுக்கு கருணை உள்ளத்துடன் அருளும் அன்னைக்கு, பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன், பாலபிஷேகம் செய்தும், அக்னி சட்டி எடுத்தும், அங்க பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.ஆடியில் ஒரு முறையாவது திருவேற்காடு சென்று, அம்மனின் அருள் பெறுவோம்.

முகவரி: தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு, சென்னை -600 077.

போன்: 044- - 2680 0430, 2680 0487

சென்னை கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லி செல்லும் வழியில், 12 கி.மீ., துாரத்தில் திருவேற்காடு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X