தஞ்சாவூர் : தஞ்சை அருகே, விபத்தில் காயம் அடைந்தவரிடம் இருந்த, 4 லட்சம் ரூபாயை, பத்திரமாக குடும்பத்தாரிடம் ஒப்படைத்த, ஆம்புலன்ஸ் ஊழியர்களை, பலரும் பாராட்டினர்.
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர், 37; வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜன்ட் தொழில் செய்து வருகிறார்.நேற்று காலை, தஞ்சாவூருக்கு பைக்கில் சென்றபோது, பாப்பாநாட்டில், சாலையோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த உளுந்து மூட்டை மீது மோதி, காயமடைந்தார். அங்கிருந்தவர்கள், '108' ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஒரத்தநாட்டில் இருந்து ஆம்புலன்சில் வந்த, டிரைவர் கர்ணன், 30, டெக்னீஷியன் தவகுமார், 32, இருவரும் அலெக்சாண்டருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். விபத்தில் சிக்கிய அவரது பைக்கை சாலையோரம் நிறுத்தினர். பைக்கில், 4.20 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. பணத்தையும், பைக் சாவியையும் பத்திரப்படுத்தி, அலெக்சாண்டரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொடர்ந்து, அலெக்சாண்டரின் தந்தைக்கு தகவல் தெரிவித்து, அவரிடம் பணத்தையும், சாவியையும் ஒப்படைத்தனர். நேர்மையாகயும், மனிதாபிமானத்துடனும் நடந்து கொண்ட ஊழியர்களுக்கு, அலெக்சாண்டர் குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் நன்றி தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE