புதுடில்லி: ராணுவ ஒப்பந்த ஊழல் வழக்கில், சமதா கட்சியின் முன்னாள் தலைவர், ஜெயா ஜெட்லி உட்பட மூவருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
மத்தியில், 2000ம் ஆண்டில், வாஜ்பாய் தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சியில், ராணுவ அமைச்சராக, சமதா கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்தார். அந்த சமயத்தில், 'டெஹல்கா' என்ற செய்தி இணையதளம், 'ஆப்பரேஷன் வெஸ்ட் எண்டு' என்ற தலைப்பில், லஞ்சம் பெறுவதை ரகசிய கேமராவில் பதிவு செய்யும், 'ஸ்டிங் ஆப்பரேஷன்' ஒன்றை நடத்தியது.
சி,பி.ஐ., விசாரணை

இதில், உடல் பிரதி எடுக்கும் கருவிகளை, ராணுவத்திற்காகக் கொள்முதல் செய்வது தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தில், 'ஆர்டர்'களை பெற, சமதா கட்சியின் அப்போதையை தலைவர் ஜெயா ஜெட்லியிடம், மேத்யூ சாமுவேல் என்பவர், 2 லட்சம் ரூபாய் லஞ்சமாக வழங்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த சம்பவம், பெரும் பரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சமதா கட்சி தலைவர் பதவியிலிருந்து, ஜெயா ஜெட்லி விலகினார். இந்த ஊழல் பற்றி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஜெயா ஜெட்லி, சமதா கட்சியைச் சேர்ந்த கோபால் பச்சர்வால் மற்றும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.பி.முர்கை ஆகியோர் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக, 2006ம் ஆண்டில், ஜெயா ஜெட்லி உட்பட மூவர் மீதும், டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த, 2012ல், மூவர் மீதும், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.இந்த வழக்கு விசாரணை, நீதிபதி விரேந்திர பட் முன்னிலையில் நடந்தது. இரு தரப்பு வாதங்கள் முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

தீர்ப்பு
இந்நிலையில், நீதிபதி விரேந்திர பட், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன் விபரம்: ராணுவ ஒப்பந்தம் தொடர்பாக, 'வெஸ்ட் எண்டு இன்டர்நேஷனல்' என்ற கற்பனை நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய, மேத்யூ சாமுவேலிடமிருந்து, 2 லட்சம் ரூபாய் பெற்றதை, ஜெயா ஜெட்லி ஒப்புக் கொண்டுள்ளார். ஊழல் நடந்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜெயா ஜெட்லி, கோபால் பச்சேர்வால், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் எஸ்.பி. முர்கை ஆகியோருக்கு தலா, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா, 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. மூவரும் இன்று மாலைக்குள், நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து, ஜெயா ஜெட்லி, டில்லி உயர் நீதிமன்றத்தில், மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, பி.பி.மல்கோத்ரா மூலம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சுரேஷ் குமார் கைட், ஜெயா ஜெட்லிக்கு, சி.பி.ஐ., நீதிமன்றம் விதித்த தண்டனைக்கு தடை விதித்தார்.ஜெயா ஜெட்லியின் மேல் முறையீடு மனு தொடர்பாக விளக்கம் கேட்டு, சி.பி.ஐ.,க்கு, 'நோட்டீஸ்' அனுப்பவும் உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE