நியூட்டனின் மூன்றாம் விதி!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

நியூட்டனின் மூன்றாம் விதி!

Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (2)
Share
 நியூட்டனின் மூன்றாம் விதி!

டாக்டர் எஸ்.கிருஷ்ணன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கருப்பர் கூட்டம்' என்ற கும்பல், கந்த சஷ்டி கவசம் பற்றி, மோசமான கருத்துகளை வெளிப்படுத்தியது, ஹிந்துக்கள் அனைவரையும், மனதளவில் பாதித்துள்ளது. எந்த வகையிலும், அவர்களின் மிக மோசமான இழிசெயல்கள் ஏற்கதக்கதல்ல.

அந்த கும்பல் மீது, அரசு நடவடிக்கை எடுத்து வருவது, வரவேற்கத்தக்கது.கந்த சஷ்டி கவசம் என்பது, வேதத்திற்கு ஒப்பானது. அதை இழிவுபடுத்த, யாருக்கும் தகுதி கிடையாது.'ஒவ்வொரு வினைக்கும், அதற்கு இணையான எதிர்வினை உண்டு' என்ற, நியூட்டனின் மூன்றாம் விதி முற்றிலும் உண்மை.பல ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில், பிள்ளையார் சிலைகள் உடைக்கப்பட்டன. இந்த அநாகரிக செயலுக்கு பின், தமிழகத்தில், ஏராளமான பிள்ளையார் கோவில்கள் கட்டப்பட்டன.

பிள்ளையார் பற்றிய சிந்தனை இல்லாதிருந்த பலர், அவரின் பக்தர்களாயினர்.நாத்திகம் எதிர்த்த போது தான், ஆத்திகம் விருட்சமாக வளர்ந்தது.தற்போது, கந்த சஷ்டி கவசத்தை, ஒரு சில மூடர்கள் அவதுாறு செய்தனர். அவர்கள், தண்டனை அனுபவிக்கின்றனர். மறுபுறம், உலகம் முழுதும், கந்த சஷ்டி கவசம் இப்போது ஒலிக்கிறது. பல வீடுகளில் தினமும், கந்த சஷ்டி கவசம் பாடுகின்றனர். இது மூடர்களால் ஏற்பட்ட செயலுக்கு வந்த, அருமையான எதிர்ச்செயல்.

ஆகையால், மூடர்களின் அறிவற்ற செயலுக்கு, உணர்ச்சி வசப்படாதீர். உடனேயே, அதற்குத்தக்க எதிர்வினை, கடவுள் அருளால் உண்டாகும்.ஹிந்து மீது அவதுாறு பரப்புவோருக்கு, தகுந்த பதிலடி கொடுக்க, தேர்தல் காலத்தில் நேர்மையாக செயல்படுங்கள். இது தான், மூடர் கூட்டத்திற்கு அளிக்கப்போகும், மிகச் சிறந்த தீர்ப்பு.

***


கருணாநிதியின் பெயரை சூட்டாதீர்!


கோதை ஜெயராமன், நசரத்பேட்டை, திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: மறைந்த, தமிழக முதல்வர், கருணாநிதியின் பெயரில், பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும் என, புதுச்சேரி முதல்வர், நாராணயசாமி அறிவித்துள்ளார்; இது, ஏற்கவே முடியாத செயல்.கரைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர் காமராஜரின் பெயரில், குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்காமல், 'விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்பவர்' என, 'நற்சான்று' பெற்ற கருணாநிதியின் பெயரிலா கொடுப்பது?

ஏழை மக்களும் முன்னேற வேண்டும் என்பதற்காக, அவர்களின் குழந்தைகளுக்கு இலவச சத்துணவு கொடுத்து, கல்வி அளித்தாரே காமராஜர், அவரை விடவா உயர்ந்தவர், கருணாநிதி?ஒன்பது ஆண்டுகள், முதல்வராக இருந்தாலும், இறக்கும்போது, அவரிடம் இருந்தது, 150 ரூபாய் பணம் மட்டுமே... ஏழை குடும்பத்தில் பிறந்த கருணாநிதி, ரயிலில் டிக்கெட் இன்றி, சென்னை வந்து, கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை குவித்தாரே...

அதற்காகவா, அவரது பெயர் சூட்டப்படுகிறது?விருதுநகர் பேருந்து நிலையத்தில், அடிதடியில் ஈடுபட்ட, தன் தங்கையின் மகனை, சிறையில் அடைத்தவர், காமராஜர். கருணாநிதியின் உறவினர்கள் வகித்த பதவிகளும், அடாவடி செயல்களும், மக்கள் அறியாததா!நம் பிள்ளைகள், ஹிந்தி கற்றுக்கொள்வதைத் தடுத்தவர், கருணாநிதி; ஆனால், தன் பிள்ளை, பேரப் பிள்ளைகளை மட்டும், ஹிந்தி படிக்க வைத்து, மத்திய அமைச்சராக்கியவர், அவர்.

முதல்வர் பதவி வகித்தபோதே, இளைய தலைமுறைக்கு வழிவிட வேண்டும் என, பதவியை துறந்தவர், காமராஜர். தள்ளாத வயதிலும், முதல்வர் மற்றும் கட்சித் தலைவர் பதவியையும் விட்டுக்கொடுக்காதவர், கருணாநிதி.பள்ளி குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு, காமராஜர் பெயர் மட்டுமே சூட்ட வேண்டும். அவர் மட்டுமே, அதற்கு தகுதியானவர்!

***


வீட்டில் சத்துபானம் தயாரிக்கலாம்!


சு.வினோதினி, எம்.புதுார், சிவகங்கை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கோவையில், 7 வயது சிறுவனின் தாய், கடையில், சத்துபானம் வாங்கியுள்ளார். அதை, சிறுவனுக்கு கொடுத்த பின் தான், சத்துபானத்தில், இறந்த பல்லி கிடந்தது, தெரிய வந்துள்ளது. இது குறித்து, இப்பகுதியில், வாசகி ஒருவர் எழுதியிருந்தது, மிக சரி.

இன்றைய பெற்றோர், தங்கள் குழந்தைகள் எது கேட்டாலும், உடனே அதை வாங்கி கொடுத்து விடுகின்றனர். குழந்தை அழாமல் இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, பாக்கெட் உணவு, சாக்லெட் என, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களையும், வாங்கி கொடுக்கின்றனர்.அடம்பிடிப்பதும், அழுவதும் குழந்தையின் குணம். அதற்கு நல்லது, கெட்டது தெரியாது. பெற்றோர் தான், அடம்பிடிக்கும் குழந்தையை சமாதானம் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.

பாக்கெட் உணவுகள், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது, அனைவருக்கும் தெரியும். அப்படியிருந்தும் அதை ஏன், குழந்தைக்கு வாங்கி கொடுக்க வேண்டும்?குழந்தைக்கு அனைத்து சத்துக்களும் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தான், பாக்கெட் சத்துபானங்களை வாங்கிக் கொடுக்கின்றனர். ஆனால், நம் பிள்ளைகளுக்கு, நாமே, தரமான சத்துபானங்களை தயாரிக்க முடியுமே... ஏன் செய்வதில்லை?

நம் வாழ்க்கையை, நாமே பரபரப்பாக மாற்றிக் கொள்கிறோம். அதனால், 'நேரம் இல்லை' என்ற போலியான காரணத்தை, முன்வைக்கிறோம்.நம் குழந்தைக்காகத் தானே, நாம் வாழ்கிறோம். அவர்களின் உடல் நலத்திற்கான, சத்துபானங்களை, நாமே வீட்டில் தயாரிக்கலாமே. இதனால் சுத்தமான, தரமான சத்துபானங்கள், நம் குழந்தைக்கு கிடைக்குமே.

கேழ்வரகு, கம்பு, சோளம், கோதுமை, பொட்டுக்கடலை, கவுனி அரிசி, அவல், குதிரைவாலி அரிசி, வேர்க்கடலை போன்றவற்றுடன், ஏலக்காய், பாதாம் பருப்பு, முந்திரி சிறிதளவு சேர்த்து, நன்றாக வறுத்து, அரைத்து, அதை சலித்த பின், உபயோகப்படுத்தலாம்.சுவைக்கு, வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இதை, பால் அல்லது வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சுவையாக இருக்கும்; அதே நேரத்தில் ஆரோக்கியத்துக்கும் உகந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X