உறுப்பினர் சேர்க்கைக்கு கெடு அ.தி.மு.க., தலைமை அறிவிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

உறுப்பினர் சேர்க்கைக்கு கெடு அ.தி.மு.க., தலைமை அறிவிப்பு

Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (2)
Share

சென்னை : 'அ.தி.மு.க.,வில், உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றவர்கள், அவற்றை பூர்த்தி செய்து, வரும், 10ம் தேதிக்குள், கட்சி தலைமை அலுவலகத்தில் வழங்க வேண்டும்' என, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு:அ.தி.மு.க., விதிமுறைகளின்படி, உறுப்பினர் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்த்தலுக்கான நிறைவு பணிகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன. பதிவை புதுப்பிக்காதவர்கள் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை, கட்சியில் சேர்ப்பதற்காக, மாவட்ட செயலர்கள், கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து, உறுப்பினர் விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றனர்.அவற்றை பூர்த்தி செய்து, உரிய கட்டண தொகையுடன், வரும், 10ம் தேதி கட்சி தலைமை அலுவலகத்தில் சேர்க்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும், இந்த அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது. எனவே, மாவட்ட செயலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பினர் சேர்ப்பு பணியில், மும்முரமாக ஈடுபட்டு, உரிய காலத்திற்குள், இப்பணியை செய்து முடிக்க வேண்டும் .உறுப்பினர் உரிமை சீட்டுகளை பெற்றுள்ள, கட்சி உறுப்பினர்கள் மட்டுமே, நடக்க உள்ள கட்சி தேர்தலில் போட்டியிடவும், ஓட்டளிக்கவும் தகுதி உடையவர்கள்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர். செப்டம்பரில் தேர்தல்?அ.தி.மு.க., தலைமை, அடுத்த மாதம் உட்கட்சி தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.,வில் உட்கட்சி தேர்தல் நடந்து, பல ஆண்டுகளாகிறது.

ஜெ., மறைவுக்கு பின், கட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.கட்சி தேர்தல் நடத்துவதற்காக, 2018ல் உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணி துவக்கப்பட்டது. அப்பணி முழுமையாக நிறைவடையவில்லை. தற்போது, கட்சி அமைப்பு ரீதியாக, பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன. எனவே, உட்கட்சி தேர்தலை நடத்த, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X