பொது செய்தி

இந்தியா

பக்ரீத் ஸ்பெஷல்

Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
பக்ரீத் ஸ்பெஷல்

மக்காவின் அரபா பெருவெளி. கி.பி., 632 மார்ச் திங்கள் 9ம் நாள். மனித வெள்ளத்தின் இடைமே இறை துாதர் முகமது நபி (சல்) தன் வரலாற்று சிறப்புமிக்க இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்.

இஸ்லாமிய வரலாற்றில் சங்கை மிக்க நான்கு மாதங்களில் துல்ஹஜ் மாதத்தின் ஒன்பதாம் நாள் அரபா நாளாக புனிதமிக்க நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம் ஹாஜிகள் அரபா பெருவெளியில் ஒன்று கூடுகின்றனர். ஆண்டு முழுக்க வெறும் பொட்டல் வெளியாக காட்சி தரும் அரபா பெருவெளி, அன்று மட்டும் மக்களால் நிரம்பி வழியும். அதுபோன்ற ஒரு தருணத்தில் தான் இறை துாதர், இந்த உலகிற்கு முக்கிய செய்தி வழங்கினார். ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு இறுதி துாதர், ஹஜ் செய்ய புறப்பட்ட போது, அவர்களோடு ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து கொண்டனர். பக்கத்து நாடுகளில் இருந்தும் மக்கள் திரண்டனர்.

எவ்வளவு மாற்றம்:
வாழவே கூடாது என, விரட்டியடிக்கப்பட்ட பூமியில், பெருமானார் நிற்கின்றனர். அதுவும் லட்சத்திற்கும் மேற்பட்ட சீடர்களோடு. ஒரு 23 ஆண்டுகளில் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டு விட்டது... பெருமானாரை எதிர்ப்பதற்கு ஒரே அணியில் திரண்டிருந்த மக்கள், இன்றைக்கு அவர்களது கண்ணசைவிற்காக காத்துக் கிடந்தனர். பெருமானார் உயரமான பகுதியில் ஏறி நின்றார். மக்களின் கண்களும், காதுகளும் கூர்மையாயின. ஊசி விழுந்தாலும் கேட்கும்படியான அமைதி நிலவியது.

பெருமானார் கருணை வழியும் கண்களால், மக்கள் வெள்ளத்தை நிதானமாக பார்த்தார். பின் பேசத் துவங்கினார்...'மக்களே நன்றாக கேளுங்கள்... நான் அடுத்த ஆண்டு உயிரோடு இருப்பேனா என, எனக்குத் தெரியாது. எனவே, கவனத்துடன் கேட்டுக் கொள்ளுங்கள். இந்த நாளும் (அரபா தினம்), இந்த மாதமும் (துல்ஹஜ் மாதம்), இந்த நகரமும் (மக்கா) புனிதமானது.

'இது போலவே மனிதனின் உயிர், உடைமை, கண்ணியம் புனிதமானது. இதற்கு யாராவது களங்கம் ஏற்படுத்தினால் இறைவனிடம் நீங்கள் பதில் சொல்ல வேண்டும். 'மக்களே... ஒருவர் குற்றம் செய்தால் தண்டனை அவருக்கே-! அவரது குடும்பத்தினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்காக, பிள்ளை, தம் தந்தைக்காக பழி வாங்கப்படுதல் கூடாது. மக்கள் அறியாமை காலத்தில் நிகழ்ந்த கொலைகளுக்குப் பழி வாங்குதல், இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது. முதலில், என் குடும்பத்தில் ரபீஆ இப்னுல் ஹாரிசின் கொலைக்கு பழி வாங்குவதை நான் விட்டு விட்டேன்.

'மக்களே... வட்டி இன்று முதல் தடை செய்யப்படுகிறது. கடன் பெற்றவர்கள் அசல் மட்டும் செலுத்தினால் போதும். முதலில், என் பெரிய தந்தை அப்பாஸ் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய வட்டித் தொகையை, நான் தள்ளுபடி செய்கிறேன்.

இரண்டு சொத்துக்கள்:
'பெண்கள் விஷயத்தில் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள். உங்கள் மனைவி மீது உங்களுக்கு உரிமை உள்ளது போல், உங்கள் மீதும் அவர்களுக்கு உரிமை உள்ளது. அல்லாஹ்வின் பெயரால் நீங்கள் அவர்களை மனைவியாகப் பெற்று இருக்கிறீர்கள். நீங்கள் விரும்பாதவர்களை, உங்கள் வீட்டுக்குள் உங்கள் மனைவி அனுமதித்தல் ஆகாது. இது அவர்களின் கடமை.மீறினால் படுக்கையை விட்டு, சிறிது காலம் விலக்கி வையுங்கள் அல்லது காயம் ஏற்படாதவாறு லேசாக அடியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உணவு வகைகளை அன்புடனும், கருணையுடனும் வழங்கி வாருங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களின் நன்மைகளை பேணி வாருங்கள்.

'நீங்க ஒருவருக்கு ஒருவர் சகோதரர்கள். உங்களில் ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாக தந்தால் ஒழிய, அதை எடுப்பது ஹராம் (விலக்கப்பட்டது) பிறருக்கு அநியாயம் செய்வதிலிருந்து, கவனமாக விலகிக் கொள்ளுங்கள். இரண்டு சொத்துக்களை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். ஒன்று இறைவேதம் (குர்ஆன்) இன்னொன்று என் நடைமுறை (ஹதீஸ்)'எனக்குப்பின் எந்த நபியும் இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப் போவதில்லை. உங்களைப் படைத்து காக்கும் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை நிறைவு செய்யுங்கள். உங்கள் தலைவர்களுக்குப் கட்டுப்படுங்கள்.

இதைச் செய்து வரும் போது, உங்களுக்கான சொர்க்கத்தில் நுழைவீர்கள். நீங்கள் இறைவனைச் சந்திப்பீர்கள். அவன், உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். எனக்குப் பிறகு உங்களுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து, வழிகேடர்கள் ஆக மாறி விட வேண்டாம். 'உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே! இறையச்சம் கொண்ட மனிதரைத் தவிர, அரபி அல்லாதவரை விட அரபி உயர்ந்தவர் அல்ல. வெள்ளையர் கறுப்பரை விட சிறந்தவர் அல்ல. அனைவரும் ஆதமின் பிள்ளைகளே! நிறத்திமிர், ஜாதித்திமிர், குலத்திமிர் அனைத்தையும் என் காலில் போட்டு நசுக்கி விட்டேன்...

'இவ்வாறு தன் சொற்பொழிவை முடித்த இறைதுாதர் மக்களை நோக்கி, 'நான் இறைவனது கட்டளைகளை உங்களுக்கு அறிவித்து விட்டேனா... என்னைப் பற்றி இறைவனிடம் என்ன கூறுவீர்கள்...' என கேட்டார்.

உபதேசம்:
'நிச்சயமாக இறைவன் தங்களுக்கு வழங்கிய தத்துவத்தை முழுமையாக நிறைவேற்றி விட்டீர்கள் என்று, நாங்கள் சாட்சியம் கூறுவோம்...' என்றனர். இதைக் கேட்ட இறைதுாதர் வானை நோக்கி, 'அல்லாஹும்மஷ்ஹது நீயே இதற்கு சாட்சி...' என, மூன்று முறை கூறினார்.மனித சமுதாயத்திற்கு தேவையான, முழுமையான ஒரு வழிகாட்டலை இந்த பிரசங்கத்தின் மூலம் இறைதுாதர் வழங்கினார். குறிப்பாக, மொழி வெறி, நிறவெறி குறித்த வழிகாட்டல். அரபிகள் மற்ற மக்களை அஜமிகள் - 'பேசத் தெரியாத ஊமைகள்' என, அழைத்து வந்தனர்.

அது போல, நிறங்களின் அடிப்படையிலும், அநாகரிகமாக நடந்து வந்தனர். இந்த நிலையில் தான், அவர்களது உபதேசம் முக்கியத்துவம் பெறுகிறது.அவர்களது அறிவுரையின் பயனாக, இஸ்லாமிய சமூகத்திற்குள் மொழியால், நிறத்தால், இனத்தால், ஏற்றத்தாழ்வு இல்லை. சில பிரிவுகள் உண்டு. அவை பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளத் தானே தவிர, பிளவுபட்டு நிற்பதற்காக அல்ல.சமூகக் கொடுமையான வட்டி ஒழிக்கப்பட்டு, ஏழைகள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்கும், பெண்கள் கண்ணியமாக நடத்தப்படுவதற்கும் நபியின் உபதேசம் உதவியது.

சுருங்கச் சொன்னால் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மக்களை முன்னோடி சமுதாயமாக உருவாக்கியது. ஈடு இணையற்ற கலாசார மாந்தர்களாக அவர்களை முன்னிறுத்தியது. 'ஹஜ்ஜத்துல் வதா' என்றால் 'விடைபெறும் ஹஜ்' என்று பொருள். இறுதி துாதர் உலகை விட்டு விடை பெறுவதற்கு முன்னோடியாக, இந்த உரையை நிகழ்த்தி சென்றாலும், அவர் உருவாக்கிய மாண்புகள், ஒரு போதும் நம்மிடமிருந்து விடைபெறாது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhiyan - Chennai,இந்தியா
02-ஆக-202003:06:12 IST Report Abuse
Indhiyan "பெண்களை காயம் ஏற்படாதவாறு லேசாக அடியுங்கள்." என்று இறை துாதர் முகமது நபி சொன்னார். இதெல்லாம் கறுப்பர் அல்லது அவர்களை சேர்ந்த கூட்டத்து கண்களுக்கு தெரியாதே
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
02-ஆக-202000:29:56 IST Report Abuse
மலரின் மகள் காயம் ஏற்படாதவாறு லேசாக அடியுங்கள். என்று உரைநிகழ்த்தியதாக எழுதப்பட்டிருக்கிறது. இது சரிதானா விளக்குவீர்களா யாராவது. மனையாளை அடிப்பது பாவமல்லவா? அதுவும் எந்த காரணத்திற்காக? கணவன் விரும்பாதவரை வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது என்ற நியதியை பின்பற்றவில்லை என்பதற்காக என்றும் எழுதி இருக்கிறது. பெண்களுக்கு என்று எந்த விருப்பு வெறுப்பும் சுதந்திரமும் கூடாதா? நபிகளுக்கு முன்னர் தோன்றிய இறைத்தூதர் கிறிஸ்து அன்பை தானே போதித்தார், மனைவியை அடிக்க சொல்லவில்லை. மறுகன்னத்தை காண்பிக்க சொன்னார் ஆண்களை அல்லவா? சில நியதிகள் மாற்றப்படவேண்டும். பெண்ணுக்கு ஆணைப்போன்ற சுதந்திரம் வேண்டும். ஆண்வர்க்கம் மாறவேண்டும் மதத்தின் பெயரால் கட்டுப்படுத்த கூடாது. வலியது அன்பை பேணவேண்டும். ஆமென்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஆக-202000:05:17 IST Report Abuse
தல புராணம் மட்டன் பிரியாணி டே ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X