சென்னை : தங்கம் இனி நமக்கு காட்சிப் பொருளாக இருக்கும் நிலைமை உருவாகியுள்ளது. சவரன் விலை நேற்று, 41 ஆயிரம் ரூபாயை தாண்டியது. கிராம் விலை, 5,150 ரூபாயாக உயர்ந்துள்ளது. இப்போதைக்கு விலை குறைவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படவில்லை.
தமிழகத்தில், நடப்பாண்டில் ஏழு மாதங்களில் மட்டும், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 11 ஆயிரத்து, 320 ரூபாய் அதிகரித்துள்ளது. சர்வதேச தங்க சந்தையின் நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் தினமும், தங்கம், வெள்ளி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தமிழகத்தில், நடப்பாண்டு ஜனவரி, 1ல், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 3,735 ரூபாய்க்கும்; சவரன், 29 ஆயிரத்து, 880 ரூபாய்க்கும் விற்பனையாகின. கிராம் வெள்ளி, 50.30 ரூபாயாக இருந்தது.
உயர்வு
அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர், வைரஸ் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், உள்நாட்டில், மார்ச் முதல், தங்கம், வெள்ளி விலை, வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், நேற்று முன்தினம், கிராம் தங்கம், 5,093 ரூபாய்க்கும்; சவரன், 40 ஆயிரத்து, 744 ரூபாய்க்கும் விற்பனையாகின. கிராம் வெள்ளி, 70.20 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று ஒரே நாளில், தங்கம் கிராமுக்கு, 57 ரூபாய் உயர்ந்து, 5,150 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 456 ரூபாய் அதிகரித்து, 41 ஆயிரத்து, 200 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 90 காசுகள் உயர்ந்து, 71.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஜூலை, 1ல், தங்கம் சவரன் விலை, 37 ஆயிரத்து, 472 ரூபாயாக இருந்தது. அம்மாதத்தில் மட்டும், சவரனுக்கு, 3,728 ரூபாய் உயர்ந்துள்ளது.
நடப்பாண்டில், ஏழு மாதங்களில் தங்கம் விலை கிராமுக்கு, 1,415 ரூபாயும்; சவரனுக்கு, 11 ஆயிரத்து, 320 ரூபாயும் அதிகரித்துள்ளது; வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு, 20.80 ரூபாய் உயர்ந்துள்ளது.
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: தங்கத்தின் விலை ஏற்றம், அதில் முதலீடு செய்தால் கிடைக்கும் லாபம், புதிய முதலீட்டாளர் களை ஈர்த்துள்ளது. இதனால், ஏற்கனவே முதலீடு செய்பவர்கள் மட்டும் அல்லாமல், புதிய முதலீட்டாளர்களும், அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.
முதலீடு
சர்வதேச அளவில், பல நாடுகளில் உள்ள வங்கிகளில், வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் மிகவும் சரிவடைந்துள்ள நிலையில், பலரும், வைப்பு நிதியில் உள்ள தங்களின் பணத்தை திரும்ப பெற்று, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக, சர்வ தேச சந்தையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நேற்று மட்டும், 31 கிராம் எடை உடைய, 1 'அவுன்ஸ்' தங்கம் விலை, 45 டாலர் உயர்ந்து, 1,975 டாலராக, அதாவது, 1 லட்சத்து, 48 ஆயிரத்து, 125 ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது போன்ற காரணங்களால், உள்நாட்டில், தங்கம் விலை அதிகரித்து வருகிறது. பலரும் வெள்ளியிலும் அதிக முதலீடு செய்வதால், அதன் விலையும் உயர்ந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE