மதுரை: பிச்சை எடுத்த பணத்தில், மூன்று மாதங்களில், 70 ஆயிரம் ரூபாயை, கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவரை, பலரும் பாராட்டினர்.
துாத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன், 65. இவர், திருமணம் முடிந்த சில மாதங்களில், குடும்பத்தை பிரிந்து, மும்பை சென்றார். அங்கு வேலை கிடைக்காததால், பிச்சை எடுக்க துவங்கினார். ஊருக்கு திரும்பியவரை குடும்பத்தினர் சேர்க்கவில்லை. பிச்சை எடுத்து வந்தவர், செலவு போக மீதி பணத்தை, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல மாநிலங்களிலுள்ள பள்ளிகளுக்கு, மேஜை, நாற்காலிகள் வாங்க வழங்கினார். மும்பையில், 20 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கியுள்ளார்.
இவர், மே முதல் பிச்சை எடுத்து சேமித்த பணம் தலா, 10 ஆயிரம் ரூபாய் வீதம் ஆறு முறை, மதுரை கலெக்டரிடம், கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். நேற்று ஏழாவது முறையாக, 10 ஆயிரம் ரூபாயை, கலெக்டர் வினய்யிடம் வழங்கினார். அவரை பலரும் பாராட்டினர்.
பூல்பாண்டியன் கூறுகையில், ''இதுபோன்று சேரும் நிதியை, சரியான நபர்களுக்கு அரசு கொண்டு போய் சேர்க்க வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE