சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

கட்சி நடத்த முடியுமா?

Added : ஆக 01, 2020
Share
Advertisement
 கட்சி நடத்த முடியுமா?


கட்சி நடத்த முடியுமா?



'இப்படி சுயநலத்துடன் செயல்பட்டால், கட்சி எப்படி வளரும்... எப்படி மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும்' என, கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச் சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமியின் நடவடிக்கைகளை பார்த்து வேதனைப்படுகின்றனர், கட்சியின் மூத்த நிர்வாகிகள். காங்கிரஸ் - மதச் சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியில், ஒரு ஆண்டுகளுக்கு மேலாக குமாரசாமி பதவி வகித்தார். அதற்கு மேல், அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மீண்டும், எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்தது. இதற்கு பின், குமாரசாமியின் சத்தத்தையே காணோம். அரசுக்கு ஆலோசனை கூறுவது, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது என, எந்த ஒரு நடவடிக்கையும் அவர் தரப்பில் இல்லை. கட்சி நிர்வாகிகளோ, 'மக்கள் பாதிக்கப்படும்போது களத்தில் இறங்கி உதவினால் தானே, அடுத்த தேர்தலில் ஓட்டு கேட்டு போக முடியும். வீட்டுக்குள் முடங்கி கிடந்தால், ஓட்டு கேட்டு போக முடியுமா' என, புலம்புகின்றனர். குமாரசாமிக்கு நெருக்கமானவர்களோ, 'அவருக்கு உடல்நல பாதிப்புகள் உள்ளன. ஆபத்தான நேரத்தில், களத்தில் இறங்கி வேலை செய்தால், வம்பை விலை கொடுத்து வாங்கியது போலாகி விடாதா' என, வக்காலத்து வாங்குகின்றனர். 'இப்படி ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி காலத்தை ஓட்டினால், கட்சி நடத்த முடியாது' என, கோபத்தில் குமுறுகின்றனர், கட்சியினர்.


நல்லதுக்கு காலம் இல்லை!



'கொரோனாவை கட்டுப்படுத்தினாலும் விமர்சிக்கின்றனர்;கட்டுப்படுத்தாவிட்டாலும் விமர்சிக்கின்றனர். என்ன தான் செய்வது' என, புலம்புகிறார், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன். நம் நாட்டில், முதல் முதலாக கேரளா வழியாகத் தான், கொரோனா நுழைந்தது. அந்த மாநில அரசு எடுத்த சில நடவடிக்கைகளால், உடனடியாக வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. 'பரிசோதனையை குறைத்தால் பாதிப்பு குறைவாகத் தான் இருக்கும். பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுங்கள்' என, எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அவர்கள் கூறியது போலவே, பரிசோதனைகளை அதிகப்படுத்தியதும், கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. முதல்வர் பினராயி விஜயன், தினமும் காலை, மாலை நேரங்களில் செய்தியாளர்களை சந்தித்து, பாதிப்பு குறித்து விளக்கம் அளித்து வருகிறார். எதிர்க்கட்சியினரோ, 'பாதிப்பு பற்றிய அறிக்கையை வெளியிட்டால் போதாதா... எதற்கு தினமும், 'டிவி'க்களுக்கு பேட்டி அளித்து, ஒரு மணி நேரத்தை வீணடிக்கிறீர்கள். அந்த நேரத்தை, கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க உருப்படியாக பயன்படுத்தலாமே' என, போட்டு தாக்குகின்றனர். பினராயி விஜயனோ, 'என்ன செய்தாலும் குறை கூறுகின்றனரே... நல்லதுக்கு காலம் இல்லையா...' என, கண்ணீர் வடிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X