சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

விவஸ்தை இல்லாத குற்றச்சாட்டு!

Added : ஆக 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
விவஸ்தை இல்லாத குற்றச்சாட்டு!எஸ்.ஆர்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இந்தியா, மதச்சார்பற்ற நாடு' என, பெருமை பீற்றிக் கொண்டாலும், மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும், பெரும்பான்மை ஹிந்துக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தி, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாகவே செயல்படும் போக்கை, ஆண்டாண்டு காலமாக

விவஸ்தை இல்லாத குற்றச்சாட்டு!

எஸ்.ஆர்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இந்தியா, மதச்சார்பற்ற நாடு' என, பெருமை பீற்றிக் கொண்டாலும், மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும், பெரும்பான்மை ஹிந்துக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தி, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாகவே செயல்படும் போக்கை, ஆண்டாண்டு காலமாக கடைப்பிடித்து வருகின்றன.ஆண்டுதோறும், ரம்ஜான் பண்டிகை காலத்தில், அரசு செலவிலும், அரசியல் கட்சிகளின் செலவிலும், இப்தார் விருந்து அளிக்கப்படுகின்றன.இஸ்லாமியருக்கு, இப்தார் விருந்து அளிப்பதை, இதுவரை இந்நாட்டில் வாழும் எந்த ஹிந்துவும் எதிர்த்ததுமில்லை; விமர்சித்ததும் இல்லை. அவர்கள், சகோதரத்துவத்தை பின்பற்றுகின்றனர்.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கு, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்தது. இதையடுத்து, கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, வரும், 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நாட்டின் பிரதமர் என்ற முறையில், நரேந்திர மோடி, இவ்விழாவில் பங்கேற்க இருக்கிறார்.உத்தர பிரதேசத்தில் வாழும் இஸ்லாமியர்களே, இந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு வரவேற்பு தெரிவித்து, சாலை அமைக்க உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்கும் நிலையில், ஐதராபாதில் இருந்து, ஒரு எதிர்ப்புக் குரல் எழுந்திருக்கிறது.ஏ.ஐ.எம்.ஐ.எம்., என்ற அமைப்பின் தலைவரான, அசாதுதீன் ஓவைசி, 'பிரதமர் மோடி, ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பங்கேற்றால், அது அரசியல் சட்டத்தை மீறிய செயலாகி விடும். அரசியல் சாசனத்தின் அடிப்படை, மதச்சார்பற்ற தன்மை தான்' என, கண்டனம் தெரிவித்துள்ளார்.மத்தியில், பதவியில் இருக்கும், பா.ஜ.,வினர், எத்தகைய விவஸ்தை இல்லாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதற்கு, ஓவைசியின், இந்த குற்றச்சாட்டே சரியான உதாரணம்.மோடி, பிரதமர் பதவியேற்ற போது, 'மதச்சார்பின்மையை பாதுகாப்பேன்' என, உறுதியேற்றார்; சரி... இதே போன்ற உறுதிமொழியை, இதற்கு முன், 10 ஆண்டுகள், பிரதமர் பதவியில் அமர்ந்திருந்த, மன்மோகன் சிங்கும் எடுத்திருப்பார் அல்லவா?காங்., சார்பிலும், அரசு செலவிலும், ரம்ஜானுக்கு, இப்தார் விருந்து அளிக்கும் போது, இந்த ஓவைசி எங்கே சென்றிருந்தார்?'ஐயா... மன்மோகன் சிங், நீங்கள், இந்நாட்டின் அரசியல் சட்டத்தின் அடிப்படையான மதச்சார்பின்மையை பாதுகாப்பதாக உறுதியேற்றுள்ளீர்.'அவ்வாறு இருக்கும் போது, ஒரு மதம் சார்ந்த பண்டிகையின் பேரில் நடத்தப்படும், இப்தார் விருந்தில், நீங்கள் பங்கேற்பதும், அதை அரசு செலவில் நடத்துவதும், இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணானது; எனவே, அந்த விருந்தை தவிர்த்து விடுங்கள்' என்றல்லவா, அவர் கூறியிருக்க வேண்டும்.அப்போது, துாங்கிக் கொண்டிருந்த ஓவைசி, இப்போது தான் விழித்துக் கொண்டாரா?lll


ஓசூரை முன்னேற்றுங்கள்!பா.பாலசுப்ரமணியன், புதுச்சேரியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கோவை, விழுப்புரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில், எட்டு தொழில் நிறுவனங்கள், தங்கள் புதிய முதலீட்டுத் திட்டங்களை, 10 ஆயிரத்து, 399 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்க உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.இதற்கு முன், 17 தொழில் நிறுவனங்களுடன், 15 ஆயிரத்து, 128 கோடி ரூபாய் முதலீடு செய்ய போடப்பட்ட ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகவே, இது கருதப்படுகிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்குகிறது என்பது, மகிழ்ச்சி அளிக்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அதிகளவிலான தொழிற்சாலைகள் உள்ளதால், அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில், சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது.கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகில், ஓசூர் உள்ளது. இங்கு, தட்ப வெப்பநிலையும், பெங்களூருக்கு சமமாக உள்ளது. எனவே, அங்குள்ள சர்வதேச ஐ.டி., கம்பெனிகளை, ஓசூருக்கு இழுக்க வாய்ப்பு உள்ளது.விமான நிலையம் அமைந்தால், பெங்களூரு, சென்னை போன்று, ஓசூரும் வளர்ச்சி அடையும். இதுபற்றி, தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.


கொழுக்கட்டையும் சாப்பிடுவோம்!ஜி.புருஷோத்தமன், திருநெல்வேலியிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: இப்பகுதியில், வாசகர் ஒருவர், 'செய்வீர்களா ஸ்டாலின்?' என்ற தலைப்பில், கடிதம் எழுதியிருந்தார். அதில், விநாயகரை, தி.மு.க.,வினர் ஏற்றுக் கொள்கின்றனரா, இல்லையா என்ற ரீதியில், சந்தேகம் எழுப்பி இருந்தார்.தி.மு.க.,வைச் சேர்ந்த, ஆர்.எஸ்.பாரதி, 'நாங்கள், ஹிந்து விரோதி இல்லை; தி.மு.க.,வில், ஹிந்துக்கள் ஒரு கோடி பேர் இருக்கின்றனர்' என, தெளிவாகக் கூறியுள்ளார்.அதையும் மீறி, 'வரும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவியுங்களேன்' என, அந்த வாசகர் கேட்டுள்ளார்.தி.மு.க.,வினர், விநாயகரை ஏற்றுக் கொள்கின்றனரோ, இல்லையோ... விநாயகர், தி.மு.க.,வினரை ஏற்றுக் கொள்வார்.ஏனெனில், தி.மு.க., ஆளும் கட்சியாக இருந்தபோது, பல கோவில்களுக்கு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஓடாமலிருந்த, திருவாரூர் தேர் ஓடியது. இன்னும் பல கோவில் திருப்பணிகள் நடந்தன. அதை, யாரும் மறுக்க முடியுமா?ஒருமுறை, கருணாநிதியிடம், ஒருவர், 'ரம்ஜான் என்றால், நோன்பு கஞ்சி அருந்த செல்கிறீர். ஹிந்து பண்டிகைகளில் பங்கேற்பதில்லையே...' எனக் கேட்டார். அதற்கு கருணாநிதி, 'விநாயகர் சதுர்த்தி அன்று, நீங்களும் கொழுக்கட்டை கொடுங்கள்; நான் சாப்பிடுகிறேன்' என்றார்.தி.மு.க., என்றும், ஹிந்து விரோத போக்கை கடைப்பிடித்ததில்லை.


பிராமணர் மட்டும் ஹிந்து அல்ல!வெ.ஜெயலட்சுமி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ- மெயில்' கடிதம்: அறுபது ஆண்டுகளுக்கு முன் நடந்த, ஈரக்குலையை நடுங்க வைத்த நிகழ்ச்சி, இப்போது நினைத்தாலும் நெஞ்சு பதறும்.தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில், பட்ட பகலில், தி.க.,வினர், சாலையில் நடந்து செல்லும் பிராமணர்களை, ஓட ஓட விரட்டி, அவர்களின் குடுமியையும், பூணுாலையும் அறுத்து துன்புறுத்தினர்.இளம் பெண்கள், வெளியே வரவே மாட்டார்கள். அவரவர், தங்கள் உயிரை காப்பாற்ற, வாய் மூடி இருந்ததைத் தவிர, எதுவும் செய்ததில்லை. நாத்திக கும்பலின் அட்டகாசம் எல்லை மீறி சென்றது.'சேற்றில் கல் விட்டெரிந்தால், நம் மீது தான் படும். வினை விதைத்தவன், வினைஅறுப்பான்' என்று சொல்லியே, பிராமணர் கையை கட்டிப் போட்டனர். அவர்ளை எதிர்க்க, அப்போது துணிவில்லை என்பதும் உண்மை; இப்போது நிலைமை அப்படியில்லை என்பதும், நிதர்சனம்!கந்த சஷ்டி கவசத்திற்கு எதிராக, 'வீடியோ' பதிவிட்ட, 'கருப்பர்' கும்பலுக்கு எதிராக, ஆத்திகர்கள் அனைவரும் சீறி பாய்ந்தனர். அவர்களின் எழுச்சியால், கருப்பர் கும்பலைச் சேர்ந்தோர் மீது, சட்ட நடவடிக்கை பாய்ந்துள்ளது.கந்த சஷ்டி கவசம், ஆண்டாண்டு காலமாக, அனைவராலும் பாடப்பட்டு வந்த துதி. நாட்டில் எத்தனையோ பிரச்னை இருக்க, இது மாதிரி திசை திருப்பும் கயவர்களை, கடுமையாக தண்டிக்க வேண்டும்.நாத்திக கும்பலால், அழிந்தோர் தான் உண்டு; வாழ்ந்தோர் உண்டா? நாத்திக கும்பலின் தலைவர்கள் தான், சொத்து குவித்து, மகிழ்வாய் வாழ்கின்றனர்.ஹிந்துவிற்கு எதிராக பேசுவோருக்கு பதிலடி கொடுக்க, கடவுள் நம்பிக்கை உள்ளோர் அனைவரும், வீறு கொண்டு எழ வேண்டும். 'அச்சம் தவிர், ஆண்மை தவறேல், ரவுத்ரம் பழகு' என, பாரதி சொன்னது இதற்குத் தான்.இனியும், ஹிந்துக்கள் ஏமாறக் கூடாது. இந்த கந்த சஷ்டி கவச போராட்டம், தேர்தல் வரை எதிரொலிக்க வேண்டும்.


இனியும் ஏமாற வேண்டாம்!கி.முத்துகிருஷ்ணன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதுரையைச் சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அமுதா, தற்போது பிரதமர் அலுவலக இணைச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கிறார். முக்கியத்துவமும், கவுரவமும் மிக்க பணியில், நம் தமிழக பெண் சேர்ந்திருப்பது, பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.கடலுார், சப் - -கலெக்டராகப் பணியைத் துவக்கியவர், மாவட்ட ஆட்சியர், யுனிசெப் அதிகாரி முதல், உத்தரகண்ட் மாநிலம், முசோரியில் உள்ள, ஐ.ஏ.எஸ் அகாடமி விரிவுரையாளர் வரை, 27 ஆண்டுகளில், 18 பணி மாறுதல்களைச் சந்தித்து இருக்கிறார்.நேர்மையான அதிகாரியான இவர், நாட்டின் தலைநகர் டில்லியிலும், தன் முத்திரையைப் பதிப்பார் என்பது, நிச்சயம். இவருக்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமல்ல ஹிந்தி, சவுராஷ்டிரம் மொழிகளும் தெரியுமாம். எனவே, டில்லியில் பணியாற்றுவதில், அவருக்கு எவ்வித சிரமமும் இருக்காது.இதன் மூலம், ஒரு விஷயத்தை, தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்... நம் தாய் மொழியைத் தவிர, வேறு எந்த மொழியும் கற்றுக் கொள்ளாமல், இருக்காதீர்.அரசியல்வாதிகள், தங்கள் சுயநலனுக்காக, நம் குழந்தைகள், பிற மொழி கற்றுக் கொள்வதை தடுக்கின்றனர். ஆனால், அவர்களின் பேரன், பேத்திகள், ஹிந்தி கற்று, மத்திய அரசில் பதவிகளை அனுபவிக்கின்றனர். இதுவரை ஏமாந்தது போதும்; இனியும், ஏமாற வேண்டாம்.நம் பிள்ளைகள், பிற மாநிலங்களில் வேலைக்கு செல்லும்போது, மொழி தெரியாததால், பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். சிலர், மொழி தெரியாததால், அங்கு வேலைக்கு செல்வதில்லை.எனவே, இளைஞர்களே... தாய் மொழியைத் தவிர, கூடுதலாக ஓரிரு மொழிகளையாவது கற்றுக் கொள்ளுங்கள்; அது, உங்களின் எதிர்காலத்திற்கு நிச்சயம் பயன்படும்.


பள்ளியை திறக்க அவசரப்படாதீர்!எஸ்.ஜனமேஜயன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'குழந்தைகளை, கொரோனா வைரஸ் தாக்கினாலும் பரவாயில்லை; பள்ளியை, உடனே திறக்க வேண்டும்' என, தனியார் பள்ளி நிர்வாகிகளும், சில பணக்கார பெற்றோரும், அரசுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.'ஆன்லைன்' பாடங்கள் நடந்தாலும், நேரடியாக ஆசிரியர் கண்காணிப்பில், சக மாணவர்களுடன் இணைந்து, பள்ளிச்சூழலில் கல்வி கற்பது தான் சிறந்தது என்பது, அவர்கள் வாதம்; அது, உண்மை தான். நல்ல பழக்கவழக்கங்கள், ஒழுக்கம் போன்ற பல விஷயங்களுக்கு, நேரடி கல்வி முறையே சிறந்தது.ஆனால், பள்ளிகளை திறக்கும் சூழல், இன்று கிடையாது. கொரோனா நோய் தொற்று, அதிகரித்தபடியே இருக்கிறது. தமிழகத்தின் குக்கிராமங்களிலும், வைரஸ் பரவி உள்ளது.வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையோடு திறக்கப்படும், பல நிறுவனங்களில், ஊழியர்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்நிலையில், குழந்தைகளை பள்ளிக்கு எப்படி அனுப்புவது? அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படாது என்பதற்கு, என்ன உத்தரவாதம்?மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, ஊரடங்கில் பல தளர்வுகளை, அரசு அறிவித்துள்ளதே தவிர, கொரோனா பரவாது என்ற நம்பிக்கையில் இல்லை!'ஆன்லைன்' கல்வி தான், நிரந்தரமாக இருக்கப் போகிறது என, யாரும் சொல்லவில்லை. நிலைமை, கொஞ்சம் சீராகும் வரை, பள்ளிகளை திறக்க வேண்டாம்; 'ஆன்லைன்' போதனைகளே தொடரட்டும் என்பதே, பலரது கோரிக்கை.குழந்தைகளை வீட்டில் பார்த்துக் கொள்ள விரும்பாத பெற்றோரும், நிதி சார்ந்த காரணங்களுக்காக, தனியார் பள்ளி நிர்வாகிகளும் தான், பள்ளிக்கூடத்தை விரைந்து திறக்க வலியுறுத்துகின்றனர்.'ஆன்லைன்' வகுப்பு மூலம், சில நன்மைகள் நடந்து வருகின்றன. தன் பிள்ளை, என்ன படிக்கிறது என்பதை, அருகில் இருந்து, பெற்றோரால் கவனிக்க முடிகிறது.மேலும், பாடம் தொடர்பான, 'வீடியோ' பதிவுகள், சொற்பொழிவு துணுக்கு, அழகான ஓவியம் என, புதிய, ஆர்வத்தைத் துாண்டும் யுக்திகளில், ஆசிரியர்கள் கலக்குகின்றனர்.கொரோனா முற்றிலும் ஒழிந்த பின், பள்ளிகள் திறக்கட்டும்; அதுவரை, 'ஆன்லைன்' கல்வியே தொடரட்டும்.lll

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
02-ஆக-202006:16:40 IST Report Abuse
D.Ambujavalli ‘ஹிந்து எதிர்ப்பாளர் இல்லை’ என்னும் ஸ்டாலின், ஸ்ரீரங்கம் கோயிலில் குங்குமப் பிரசாதத்தை நெற்றியிலிருந்து அழித்து, ‘புரட்சியாளர்’ இமேஜை நிலை நிறுத்தினார் இஃப்த்தாருக்கு மட்டும் குல்லா அணிந்து உட்காருவார் ஹிந்துக்கள் எப்படியும் வோட்டுப் போட்டுவிடுவார்கள் மைனாரிட்டிகளைத்தான் அனுசரித்துப் போகவேண்டும் என்ற எண்ணம்தான் காரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X