அறிவு ,ஒற்றுமையை புதிய கல்விக் கொள்கை தரும்| Dinamalar

அறிவு ,ஒற்றுமையை புதிய கல்விக் கொள்கை தரும்

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (8)
Share
புதுடில்லி :''புதிய கல்விக் கொள்கை, மாணவர்களின் அறிவை வளர்ப்பதாகவும், தேச ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்,'' என்று, பிரதமர் மோடி கூறினார். உயர்கல்விக்கு செல்வோர் எண்ணிக்கைகுறைந்தது, 50 சதவீதம் அதிகரிக்கும். வேலை தேடுவோரை உருவாக்காமல், வேலை அளிப்பவர்களைஉருவாக்கும் என்றும், மோடி உறுதி அளித்தார். நாட்டில், 34 ஆண்டுகளுக்கு பின், தேசிய கல்விக் கொள்கையில்,
ஒற்றுமையை புதிய கல்விக் கொள்கை தரும்

புதுடில்லி :''புதிய கல்விக் கொள்கை, மாணவர்களின் அறிவை வளர்ப்பதாகவும், தேச ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்,'' என்று, பிரதமர் மோடி கூறினார்.
உயர்கல்விக்கு செல்வோர் எண்ணிக்கைகுறைந்தது, 50 சதவீதம் அதிகரிக்கும். வேலை தேடுவோரை உருவாக்காமல், வேலை அளிப்பவர்களைஉருவாக்கும் என்றும், மோடி உறுதி அளித்தார். நாட்டில், 34 ஆண்டுகளுக்கு பின், தேசிய கல்விக் கொள்கையில், மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, தேசிய கல்விக் கொள்கை குறித்து, 'டிவி' சேனல்கள் வழியாக, நாட்டு மக்களிடம், பிரதமர் மோடி, நேற்று மாலை பேசினார். அவர் கூறியதாவது:நாட்டில், மாணவர்களுக்கான கல்வியை தரமாக வழங்குவதில், அதிக கவனம் செலுத்தி வருகிறோம். நம் கல்வி முறையை, மிகவும் முன்னேற்றமாகவும், நவீனமாகவும் மாற்றுவதே, எங்கள் நோக்கம். இந்த, 21ம் நுாற்றாண்டு, அறிவின் சகாப்தமாக உள்ளது. கற்றல், ஆராய்ச்சி, புதுமை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதற்கான நேரம் இது.சமீபத்தில் அறிவிக்கப்பட்ட, 'தேசிய கல்விக் கொள்கை - 2020' நம் நாட்டு இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் விருப்பங்கள், எண்ணங்களை மனதில் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கை, மாணவர்களின் நலனுக்கு ஏற்ப, கல்வி முறையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐந்து ஆண்டுகளாக, அனைத்து துறையை சேர்ந்தவர்களுடனும் கலந்துரையாடிய பின், இது தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை, மாணவர்களை கல்வி சுமையிலிருந்து மட்டுமின்றி, பொதி மூட்டை போல், புத்தக பையை சுமந்து செல்வதிலிருந்தும் விடுவிக்கும். தற்போதைய கல்வி முறையில் உள்ளது போல், வெறும் மனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை. பாடத்தின் அறிவு மட்டும், மனிதனை உருவாக்கி விடாது. நம் மாணவர்கள் எதைப் படித்தனரோ, அது, வேலைக்கு உதவவில்லை. புதிய கல்விக் கொள்கை, மாணவர்களின் வாழ்கைக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது, மாணவர்களை, விமர்சன சிந்தனைக்கு மாற்றும்.தேசிய கல்விக் கொள்கையில், மாணவர்களுக்கேற்ற மாற்றங்களுக்கு பெரியளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான வழி, சிறிய பாதையாக இல்லாமல், பல நுழைவு வாயில்களை கொண்டதாக இருக்கும். ஆரம்ப கல்வியில் இருந்தே மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. வரும், 2035வது ஆண்டில், உயர் கல்வியில் சேருவோர் எண்ணிக்கையை, 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்பதும், நம் நோக்கம். நாட்டில் மொழிப்பாடம் என்பது உணர்வுபூர்வமானது. அதனால், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

கல்விக் கொள்கையில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் காரணமாக, இந்தியாவின் மொழிகள், மேலும் மேம்படும். இது, இந்திய மாணவர்களின் அறிவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, நம் நாட்டின் ஒற்றுமையையும் அதிகரிக்கும். தாய்மொழியில் படிப்பதன் மூலம், புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்களால் உருவாக்க முடியும். வளர்ந்த நாடுகள், தாய்மொழியில் கற்றுத்தான் முன்னேற்றம் கண்டுள்ளன. வேலை தேடுவோரை உருவாக்காமல், வேலையை உருவாக்குவோரை, புதிய கல்விக் கொள்கை உருவாக்கும்.பாடத்திட்டத்தில், பல்வேறு தொகுதிகளிலிருந்து, பாடங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்திய பின், அறிவியல், வர்த்தகம், மனிதநேயம் அல்லது தொழில் போன்ற எந்தவொரு தொகுதியிலிருந்தும், தங்களுக்கு ஏற்ற பாடங்களை, மாணவர்கள் தேர்வு செய்ய முடியும். இந்த கல்விக் கொள்கை, மக்கள் மற்றும் எதிர்காலத்தை மையமாகக் கொண்டது.கற்றல், கேள்வி கேட்பது, தீர்வு ஆகிய மூன்று விஷயங்களையும், மாணவர்கள் ஒரு போதும் நிறுத்தக் கூடாது. கற்கும் போது, மாணவர்கள் அறிவை பெறுகின்றனர்.

கேள்வி கேட்கும் போது, ஒரு செயலைத் தாண்டி, சிந்தனை செய்து, அதற்கான வழியையும் கண்டுபிடிக்கின்றனர். புதிய கல்விக் கொள்கை வாயிலாக, கல்விசார் துறையில் இருந்த சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது, தனிமனித திட்டம் அல்ல; ஒட்டுமொத்த இந்தியாவுக்கான திட்டம். அம்பேத்கர் கூறியபடி, கல்வி அனைவருக்கும் கிடைப்பதை, புதிய கல்விக் கொள்கை உறுதி செய்துள்ளது. இவ்வாறு, பிரதமர் மோடி கூறினார்.


சாதனை மாணவர்களுக்குஉற்சாகம் அளித்த மோடி

மாணவர்களிடம் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் மனநிலையையும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் இணைந்து, நான்கு ஆண்டுகளாக, 'ஆன்லைன் ஹேக்கலத்தான்' போட்டிகளை நடத்தி வருகின்றன. இந்த ஆண்டுக்கான போட்டிகளின் இறுதி சுற்று, நேற்று நடந்தது. இதில், 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். இறுதிச் சுற்றில் பங்கேற்றவர்களுடன், பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று மாலை பேசினார். தமிழகத்தில், கோவையைச் சேர்ந்த, மாணவ - மாணவியரும் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர். கோவையைச் சேர்ந்த மாணவியிடம், தமிழில், 'வணக்கம்' எனக்கூறி, தன் உரையை மோடி துவக்கினார்.

போலீசாருக்கு உதவும் வகையில், கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரியைச் சேர்ந்த மாணவர், கருவி ஒன்றை தயாரித்துள்ளார்; அவருடனும் மோடி கலந்துரையாடினர். தொடர்ந்து, அவர்களிடம் பிரதமர் பேசியதாவது: இளைஞர்கள் சவால்களை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை கேட்க, ஆர்வமாக உள்ளேன். மழை பொழிவை அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் குறித்து, கோவை மாணவி தெரிவித்தது, விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மாணவர்கள், 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர். சவாலான காலகட்டத்தை, மாணவர்கள் வெற்றிகரமாக கடந்து வருவர்.நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும், அனைவருக்குமான சுகாதார வசதியை ஏற்படுத்துவதே, அரசின் இலக்கு. 'ஆயுஷ்மான் பாரத்' திட்டம், கிராமங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கிராமங்களில் உள்ள மருத்துவமனைகளை, உலகத் தரத்திற்கு உயர்த்துவதே, நம் இலக்கு. சுகாதாரத் துறையில் உள்ள சவால்களுக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X