சென்னை : கல்வி நலன் காக்கிற முயற்சியில், தேசிய அளவில், மற்ற கட்சிகளுடன் இணைந்து, சட்டப் போராட்டங்களையும் தொடருவோம்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க., தொண்டர்களுக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:இந்தியாவில், எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்படாத, 'எமர்ஜென்சி' நிலை என்பது போல, கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் வகையில், காஷ்மீர் முதல் தமிழகம் வரை கைது நடவடிக்கைகள், தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்ட பாய்ச்சல்கள், சிறை வைப்பு என்பது தொடர்கிறது.
எமர்ஜென்சி கொடுமையை, நெஞ்சம் நிமிர்த்தி எதிர்கொண்ட தி.மு.க.,வை, இத்தகைய பூச்சாண்டித்தனங்களால், எவராலும் எதுவும் செய்து விட முடியாது. எம் தமிழ் மக்களையும் திசை திருப்பி விட முடியாது.புதிய கல்வி கொள்கைக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய ஆட்சியாளர்கள், வாய்மூடி கிடக்கின்றனர்.
தமிழகத்தின் கல்வி நலன் காக்கிற முயற்சியை, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மேற்கொள்வோம். மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காத, பிற மாநில முதல்வர்கள், அகில இந்திய அரசியல் கட்சி தலைவர்களுடன் தொடர்பு கொள்வோம்.அவர்களுடன் இணைந்து, மாணவர்களின் எதிர்கால நலன் காக்கும் ஒருங்கிணைப்பு முயற்சிகளையும், அதற்கான சட்டப் போராட்டங்களையும் தொடர்ந்து மேற்கொள்வோம்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
'சமூக நீதி பாதுகாவலர்'
ஈரோடு,: ஸ்டாலினை 'சமூக நீதி பாதுகாவலர்', என்ற அடைமொழியோடு அழைக்க, ஈரோடு தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஈரோடு தெற்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார்.கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு நாள் வரும், ௭ம் தேதி வருகிறது. மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வார்டுகளில், அவரது படம் வைத்து, மரியாதை செலுத்த வேண்டும்.மருத்துவர் படிப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை, கட்சி தலைவர் ஸ்டாலின் பெற்று தந்துள்ளார்.
எனவே, ஸ்டாலினை இனி, 'சமூக நீதி பாதுகாவலர்' என்ற அடைமொழியோடு அழைக்க வேண்டும்.மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, சமஸ்கிருத மொழியை புகுத்தவே என தெரிய வருகிறது. எனவே இதை தி.மு.க., கடுமையாக எதிர்க்கிறது.அரசுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் போது சுற்றுச்சூழல், வனத்துறை அனுமதி மற்றும் மக்களின் கருத்து கேட்க வேண்டும் என்பதை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE