'டிக்டாக்'குக்கு தடை அதிபர் டிரம்ப் மிரட்டல்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

வாஷிங்டன்; சீனாவைச் சேர்ந்த, 'டிக்டாக்' என்ற, மொபைல் செயலியை, அமெரிக்காவைச் சேர்ந்த, 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் வாங்குவது தொடர்பான பேச்சு நடந்து வருகின்றது.

இந்நிலையில், 'டிக்டாக்'குக்கு தடை விதிக்கப்போவதாக, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.சீனாவுடனான எல்லைப் பிரச்னையைத் தொடர்ந்து, அந்த நாட்டைச் சேர்ந்த, டிக்டாக் உட்பட, 106 செயலிகளுக்கு, இந்திய அரசு தடை விதித்தது. இதற்கு, அமெரிக்கா வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளது.

சீனாவே காரணம்

இந்த விவகாரத்தில், இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக, அமெரிக்கா கூறி உள்ளது.இந்நிலையில், சீனா - அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நடந்து வருகிறது. மேலும், 'கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம்' என, அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது.பல்வேறு விவகாரங்களில், சீனாவுக்கு எதிராக, அமெரிக்கா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.இதற்கிடையே, 'சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வர்த்தக உறவை துண்டிக்க வேண்டும். 'இந்தியா போல், சீனாவைச் சேர்ந்த செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும்' என, பல, எம்.பி.,க்கள், அமெரிக்க அதிபரை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த, டிக்டாக் செயலி உரிமையாளரான 'பைட்டான்ஸ்' நிறுவனத்துடன், அமெரிக்காவைச் சேர்ந்த, மைக்ரோசாப்ட் நிறுவனம் பேசி வருவதாக கூறப்படுகிறது.இறுதி முடிவுஇந்தியாவை பூர்வீகமாக கொண்ட சத்ய நாதெள்ளா தலைமையிலான, மைக்ரோசாப்ட் நிறுவனம், டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாடுகளை வாங்குவது தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது.பல கோடி மதிப்புள்ள ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.ஆனால், இதற்கு, டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், டிரம்ப் கூறியுள்ளதாவது:சீனாவைச் சேர்ந்த நிறுவனத்தை, அமெரிக்க நிறுவனம் கையகப்படுத்துவதை ஏற்க முடியாது. டிக்டாக் விவகாரத்தில் நிச்சயம் உறுதியான நடவடிக்கை எடுப்போம். இது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். அந்த செயலிக்கு தடை விதிக்கவும் தயாராக உள்ளோம். அவசரகால பொருளாதார அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு, எனக்கு அதிகாரம் உள்ளது. விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

சீன படை மீது பொருளாதார தடைசீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், உள்ளாட்சித் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஹாங்காங்கில், சீனாவின் கட்டுப்பாட்டுக்கு, அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இந்நிலையில், சீன ராணுவத்தின் மிகப் பெரிய துணை ராணுவ அமைப்பான, ஜின்ஜியாங்க் உற்பத்தி மற்றும் கட்டுமானப் பிரிவு மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜின்ஜியாங்க் மாகாணத்தில், உய்கர் முஸ்லிம் சிறுபான்மையினர் மீதான மனித உரிமை மீறல் நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தத் தடை விதிக்கப்படுவதாக, அமெரிக்கா கூறியுள்ளது. அதன்படி, இந்தப் படைக்கு சொந்தமாக, அமெரிக்காவில் உள்ள சொத்துக்கள் முடக்கப்படும். மேலும், இந்த படைப் பிரிவுடன், அமெரிக்க நிறுவனங்கள் எந்த ஒப்பந்தமும் செய்ய முடியாது.இது, சீனாவுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X