ஜெய்சால்மர் : ''காங்., ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய அதிருப்தியாளர்களை, கட்சி மேலிடம் மன்னித்தால், நானும் மன்னிக்க தயார்,'' என, ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் கூறியுள்ளார்.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, துணை முதல்வராக இருந்த காங்கிரசின் சச்சின் பைலட், தன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேருடன் இணைந்து, கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிஉள்ளார்.இதையடுத்து, கெலாட் அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக, பா.ஜ.,வினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், வரும், 4ல் சட்டசபை கூடவிருக்கிறது. இதற்கிடையே, காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், ஜெய்சால்மரில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ.,க்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய பின், அசோக் கெலாட் கூறியதாவது:அதிருப்தியாளர்களை உதவாக்கரை என, ஏற்கனவே நான் விமர்சித்தது உண்மை தான். அதிருப்தியாளர்கள் விஷயத்தில் கட்சி மேலிடம் என்ன நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு கட்டுப்படுவேன். அவர்களை கட்சி மேலிடம் மன்னித்தால், நானும் மன்னிக்க தயார். யாருடனும் விரோத போக்கை பின்பற்ற விரும்பவில்லை. ஜனநாயகத்தில், கொள்கை, திட்டங்களுக்குத் தான் முன்னுரிமை அளிக்க வேண்டுமே தவிர, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கவிழ்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது.
காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு, பா.ஜ., குதிரை பேரம் நடத்துகிறது. ராஜஸ்தானில் நடக்கும் ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு, பிரதமர் மோடி, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE