தமிழக காவல் துறையில், பல்வேறு பதவிகளில், 36 ஆண்டுகளாக பணி புரிந்த நான், துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் போலீசார் நடத்திய கொடுமையை வன்மையாக கண்டிக்கிறேன்.சி.பி.ஐ., இதுபற்றி புலனாய்வு செய்து கொண்டு இருப்பதாலும், மதுரை உயர் நீதிமன்றம், இந்த குற்றம் குறித்து விசாரித்து, தீர்ப்பை வழங்க இருப்பதாலும், இதுபற்றி மேலும் கருத்து கூறுவது, முறையாகாது என்று கருதுகிறேன்.
ஆயினும், இந்த சாத்தான்குளம் சம்பவம், தமிழக காவல் துறையினர் காலம் காலமாக பின்பற்றி வந்த நீதி, நேர்மை, தர்ம நெறிக்கு, ஒரு மோசமான விதிவிலக்கு என்று தான் சொல்ல வேண்டும்.தமிழக போலீசார், காலம், காலமாக, தர்மத்திற்கு கட்டுப்பட்டு, நேர்மையாக பணியாற்றுவது பற்றி அறியாத சிலர், 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களிலும், ஒரு சில பத்திரிக்கைகளிலும், தமிழக போலீசாரை, தரக்குறைவான முறையில் விமர்சிப்பது, 36 ஆண்டுகள், தமிழக போலீசில் பணியாற்றிய என் போன்றோருக்கு வேதனை அளிக்கிறது.
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின், காவல் கண்காணிப்பாளராக, 1975 - 77 பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில், சில தகவல்களை கூற விரும்புகிறேன். நெல்லை மாவட்ட மக்கள், தெய்வ நம்பிக்கை மிக்கவர்கள். அவர்கள் போலவே, அங்குள்ள காவல் துறையினரும், நியாயமாகவும், நேர்மையாகவும் பணியாற்ற விரும்புபவர்கள்.ஆனால், அந்த மாவட்டத்திற்கே உள்ள சாபக்கேடு, ஜாதி உணர்வு தான். அதற்கு அப்பாற்பட்டு, தகுதி அடிப்படையில் நடுநிலையுடன் பணிபுரிந்தால், அம்மாவட்ட மக்களும், போலீசாரும், மிகுந்த விசுவாசத்துடன் பணிபுரிவர் என்பதை நான் உறுதியாக கூற முடியும்.அந்த வகையில், அந்த மாவட்டத்தில், என்னுடைய இரண்டாண்டு பணியை மறக்கவே முடியாது. அந்த மாவட்ட மக்களும், போலீசாரும், என் மீது தனிப்பட்ட முறையிலும், எஸ்.பி., என்ற வகையிலும், அபரிமிதமான அன்பை பொழிந்தனர்.துரதிர்ஷ்டவசமாக, இந்த சாத்தான்குளம் சம்பவம், ஒரு சாபக்கேடாக அமைந்து விட்டது.
இந்த குற்றத்திற்கு, ஜாதி உணர்வுகள் வெறித்தனமாக தாண்டவம் ஆடியதோ அல்லது அங்கு பணிபுரிந்த மேல் அதிகாரிகள் மெத்தன போக்குடன் இருந்தனரா என்பது தெரியவில்லை. முனைவர் பட்டம்அந்த சம்பவத்தை மிகைப்படுத்தி, உண்மைக்கு புறம்பாக சில கருத்துகளை கூறியோருக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். தமிழக போலீசை சேர்ந்த பெரும்பாலானோர் பட்டதாரிகள். பலர் பொறியியல் பட்டத்தாரிகள். நிறைய அதிகாரிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள்.தமிழக காவல் துறையில் உள்ள பெரும்பாலானோர், நல்ல குடும்ப பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள்; அவர்கள், சாதாரணமானவர்கள் அல்ல. இதுபோன்ற பல பின்னணி மற்றும் திறமைகள் இருப்பதால் தான், ஆண்டுதோறும் நடக்கும், போலீசாருக்கு இடையேயான விஞ்ஞான ரீதியிலான போட்டிகளில், தமிழக போலீசார், பல பதக்கங்களை குவித்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் தான், நம் தமிழக போலீசை, 'இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாண்டு யார்டு போலீசாருக்கு நிகரானவர்கள்' என்று, நல்ல உள்ளம் படைத்தோர் பாராட்டுகின்றனர்.
ஆயினும், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அதிகாரிகளை கொண்ட தமிழக போலீசில்,ஓரிரு கறுப்பு ஆடுகளும் இருக்கத் தான் செய்கின்றனர். அவர்களை, களை எடுக்கும் பணி அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது.அநாகரிகமாக பேசுவது, முரட்டுத்தனமாக நடந்து கொள்வது, மனிதாபிமானம் இல்லாமல் செயல்படுவது, தாக்குதல் நடத்துவது, தவறான பிரிவுகளில் வழக்கு தொடர்வது போன்றவை, கடந்த கால நிகழ்வுகளாக இருக்கட்டும்.மனித சமுதாயமே மாறிக் கொண்டிருக்கிறது. உலகில் ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வுகள், அடுத்த நொடியில், மற்றொரு மூலைக்கு சென்று விடுகிறது. வளர்ந்த நாடுகளின் போலீசார், எவ்வளவு நாகரிகமாக நடந்து கொள்கின்றனரோ அவர்களை விட நாம், மிகவும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில், நம் நாட்டிற்கு என, பாரம்பரியம், பண்பாடு, சிறப்பான கலாசாரம் உள்ளது. அதை கெடுக்கும் வகையில், போலீசாரின் செயல்பாடு இருக்கக் கூடாது.தமிழக போலீசார், தர்மநெறி மற்றும் தமிழர் பண்பாட்டு அடிப்படையில், பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர் என்பதை உறுதிபடுத்த, சில சம்பவங்களை குறிப்பிடுகிறேன்.கடந்த, 1970ல், சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில், வட மாநிலங்களை சேர்ந்த, குற்ற பின்னணி உள்ள ஒரு கூட்டம், அங்குள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை கொள்ளை அடித்தது. அந்த கூட்டத்தை கண்டுபிடித்து, அவர்கள் கொள்ளையடித்த நகைகளை திரும்பப் பெற, அன்றைய சென்னை மாநகர போலீசின் குற்றவியல் துணை ஆணையர், பழனியப்பன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.அவரின் சீரிய நடவடிக்கையால், அந்த கூட்டம் பிடிபட்டது; கொள்ளைஅடித்த நகைகள் திரும்ப பெறப்பட்டன. நான் அந்த காலகட்டத்தில், சென்னை மாநகர காவல் துறையில், சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றினேன்.
அந்த வழக்கு விசாரணையின் போது, பழனியப்பனும் அவரின் குழுவினரும் எவ்வாறு தர்மநெறி தவறாமல், நாகரிகமாக குற்றவாளிகளை விசாரித்தனர் என்பது பற்றி, எனக்கு நன்றாகவே தெரியும்.போலீஸ் அதிகாரி பழனியப்பன், ஒரு பெரிய, பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர். அதன் அடிபடையில் தான், குற்றவாளிகளை அவர் பண்பு மற்றும் தார்மிக அடிப்படையில் விசாரித்தார் என்று சொல்ல வேண்டும்அதுபோல, ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின், எஸ்.பி.,யாக நான் இருந்த போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்டாப் பற்றியும், அவரின் திறமையை பற்றியும் சொல்லாமல் இருக்க முடியாது. அவரின் புலனாய்வு திறமையை என்னவென்று சொல்வது என, நான் பலமுறை திகைத்து இருக்கிறேன்.நான் அங்கு, எஸ்.பி.,ஆக பதவி ஏற்பதற்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, நெல்லை மாவட்டத்தில், 15 இடங்களிலும், பக்கத்து மாவட்டங்களில், 25 இடங்களிலும் ஒரு பெரிய கொள்ளை கும்பல், தங்கள் கைவரிசையை காட்டியது.
தனிப்படைக்கு பொறுப்பு
திடீரென வீடுகளுக்குள் நுழையும் அந்த கும்பல், பொருட்களை சூறையாடி, விலை உயர்ந்த நகைகளை கொள்ளை அடித்தது. போலீசுக்கு மிகவும் தலைவலியாக இருந்த அந்த கும்பலை பிடிக்க, அல்டாப் தலைமையிலான தனிப்படைக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.குற்றவாளி என சந்தேகிக்கப்பட்ட ஒருவரின் வீட்டில், வெள்ளி காசு இருந்ததை அடிப்படையாக வைத்து, அந்த கொள்ளை கும்பலின், ஆறு பேரையும், இன்ஸ்பெக்டர் அல்டாப் கண்டுப்பிடித்தார்.
நீதிமன்ற உத்தரவுபடி அவர்களை போலீஸ் காவலில் எடுத்து,விசாரித்த விதமே, மற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது.அந்த குற்றவாளிகளை, இன்ஸ்பெக்டர் அல்டாப் துன்புறுத்தவில்லை. அதற்கு மாறாக, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, சினிமா தியேட்டர்களுக்கு அழைத்துச் சென்று, படம் பார்க்க வைத்தார். அந்த குற்றாவாளிகளின் மதத்திற்கு ஏற்ப, கோவில், மசூதி அல்லது தேவாலயங்களுக்கு அவர்களை அழைத்து சென்று, கொஞ்சம் கொஞ்சமாக உண்மையை வரவழைத்தார்.அவரின் அணுகுமுறையால், 40 கொள்ளை குற்றங்களும் முடிவுக்கு வந்தன; கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன. திருடப்பட்ட நகைளை மீட்கும் போது, திருட்டு நகைளை வாங்கிய நகை வியாபாரிகளிடம் இருந்தும் மீட்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது, அதை தடுக்க, அந்த வியாபாரிகள், குற்ற புலனாய்வுத்துறை ஆய்வாளர்களின் மீது புகார் கூறுவது, காலம் காலமாக நடந்து வரும் வழக்கம்.
அதுபோலவே, இன்ஸ்பெக்டர் அல்டாப் மீதும், நகை வியாபாரிகள் குற்றம்சாட்டினர். அவரிடம் விசாரிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு வந்தது. விசாரணைக்கு வந்த அல்டாப், கையோடு, இஸ்லாமியர்களின் புனித குரான் நுாலையும் எடுத்து வந்தார். அந்த நுால் மீது கை வைத்து, சத்தியம் செய்து, அந்த புகார்களை மறுத்தார்.அவரின் உறுதியை நம்பி, அவர் மீதான புகார்களை தள்ளுபடி செய்தேன். அவர் போன்ற ஆய்வாளர்களை இப்போது காண்பது அரிது.பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னத்தை கொலை செய்வதற்கு ஒரு பயங்கரவாத கும்பல், அவரை கண்காணித்து கொண்டு வந்தது. ஏனெனில், ரோஜா, மும்பை போன்ற படங்களில், ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமை பற்றி அவர் வலியுறுத்தி இருந்தார்.இதனால், சில பயங்கரவாத அமைப்புகள், மணிரத்னத்துக்கு எதிராக செயல்பட தொடங்கின.
அவ்வாறாக, 1995ல், அவர் தன் வீட்டில் காலை வேளையில், வாசல் முகப்பில் உட்கார்ந்து இருந்த போது, அவரை கொல்லும் நோக்கத்தில், வெடிகுண்டுகள் வீசப்பட்டன.எனினும், அதிர்ஷ்டவசமாக அவருக்கு பெரிய அளவில் காயம் ஏற்பட வில்லை. எனினும், வீட்டின் வாசல் முகப்பு, வெடிகுண்டின் தாக்கத்தால் சிதறியது.இந்த குற்றத்தில் தொடர்புடைய, வங்கதேசத்தை சேர்ந்த இமாம் அலி என்ற பயங்கரவாதியை பிடித்தோம். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரும், அவரின் கும்பலில் உள்ள பிறரும் எப்படி செயல்படுகின்றனர் என்பதை, அவரிடம் இருந்தே வெளி கொண்டு வந்தோம். புலனாய்வில் அது ஒரு மைல் கல்.இவ்வாறாக, தமிழக போலீசார் நிகழ்ச்சிய பல சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட, பல போலீசார், போலீஸ் அதிகாரிகள் தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். அவர்களின் தீரத்தையும், வீரத்தையும் சொல்லியே ஆக வேண்டும். காட்டுமிராண்டிதனம்கடந்த, 1965ல், ஹிந்தி மொழிக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, வன்முறையில் ஈடுபட்ட கும்பல், திருச்செங்கோடு காவல் நிலையத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர்கள், வெங்கடேசன் மற்றும் ராமசாமியை தீ வைத்து கொளுத்தியது.
அவர்கள் இறந்து விட்டனரா என்பதை உறுதி செய்ய, மிகவும் காட்டுமிராண்டிதனமாக அந்த கும்பல் நடந்து கொண்டது.அந்த போலீஸ் அதிகாரிகளின் உடல்கள் மீது, இரட்டை மாட்டு வண்டியை ஓட்டி, இறந்ததை உறுதி செய்தது.அதுபோல, அப்போது, மேட்டுர் டி.எஸ்.பி.,யாக இருந்த அண்ணாசாமி என்பவரின் சீருடையை கழற்றி, அம்மணமாக அவரை ஓட விட்டு துரத்தியது. அவர் காவிரி ஆற்றில் விழுந்து, மூச்சு திணறி இறந்து விட்டார்.அப்படித் தான், சேலத்தில் பணிபுரிந்த உதவி ஆய்வாளர் அல்வின் சுதான், 2012ல், அங்கு நடந்த ரகளையை அடக்க சென்றபோது கலகக்காரர்கள் அவரை கத்தியால் குத்தி கொன்றனர்.சென்னை, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர் தியாகராஜன் என்பவர், 2013ல், பல குற்றங்களில் தொடர்புடைய விமலநாதன் என்பவரை பிடிக்க சென்ற போது, அந்த குற்றவாளி கத்தியால் குத்தியதில் இறந்தார்.
கனகராஜ் என்ற தலைமை காவலர், 2014ல் ஆற்று மணலை கடத்தும் கும்பலை கைது செய்ய சென்ற போது, அவர் மீது, மணல் ஏற்றிய டிராக்டரை ஏற்றி கொன்றதை, போலீசார் மறந்திருக்க மாட்டார்கள்.தலைமை காவலராக இருந்த, முனுசாமியை, சங்கிலி பறிப்பு குற்றவாளி, 2016ல், கத்தியால் குத்தி கொன்றதை, போலீசார் மறந்திருக்க மாட்டார்கள்.பணியின் போது, தங்களின் இன்னுயிரை இழக்கும் போலீசாரின் குடும்பங்கள், அவரின் மறைவுக்கு பின், திக்கு தெரியாமல் தவிக்கும் அவல நிலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
ஆயினும், நாட்டில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும், அமைதி நிலவவும் போலீசார் மேற்கொள்ளும் பணிகள் பற்றி, மக்களோ அல்லது ஏனையோரோ கவலைப்பட்டதாக தெரியவில்லை. எனினும், இதுபோல உயிரிழக்கும் வீரர்களின் குடும்பங்களுக்கு, காவல் துறை தலைமை, பாராட்டுதலை தெரிவிக்கும் வகையில், உயிர் இழந்த காவலர் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்கிறது.சமீபத்தில், காஞ்சிபுரத்தில் நடந்த அத்தி வரதர் திருவிழாவில், தமிழக காவல் துறையினர் செய்த மகத்தான சேவை; சீனா பிரதமரின் வருகையை ஒட்டி, தமிழக போலீசார் செய்த பணிகள்; இந்த கொரோனா நேரத்தில், தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல், பணியில் கண்ணும், கருத்துமாக செயல்படும் போலீசாரை, ஊடகங்களும், பொதுமக்களும் பாராட்டுவதே இல்லை.
எனினும், யார் பாராட்டினாலும், கண்டித்தாலும், வழக்குகள் தொடர்ந்தாலும், அவற்றை பற்றி கவலைப்படாமல், 'பகவத்கீதை'யில் சொன்னபடி, 'கடமையை செய், பலனை எதிர்பாராதே' என்ற தத்துவத்தின்படி, தமிழக போலீசார் செயல்படுகின்றனர்.தடைகள் பல வந்தாலும், எதிர்ப்புகள் பல எதிர்த்து நின்றாலும், சிற்றாறு போல ஒடி கொண்டே இருக்கின்றனர், தமிழக காவல் துறையினர்!
வி.வைகுந்த்
ஐ.பி.எஸ்.,
தமிழக முன்னாள், டி.ஜி.பி.,
தொடர்புக்கு: 8754508825
இ - மெயில்: v_vaikunth@lycos.com