சென்னை: தமிழக அரசு, பொது ஊரடங்கை நீட்டித்ததுடன், 'இ- - பாஸ்' நடைமுறை தொடரும் என்றும் அறிவித்துள்ளது. இது, பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில், மார்ச், 25 முதல், பொது ஊரடங்கு அமலில் உள்ளது. நான்கு மாதங்களாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதமாக, மக்களின் வாழ்வாதாரம் கருதி, அரசு சில தளர்வுகளை அறிவித்தாலும், சாதாரண மக்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி பகுதிகளில், அனைத்து வழிபாட்டு தலங்களும், மாநிலம் முழுதும், பெரிய கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால், கோவிலை சுற்றியுள்ள கடைகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.வணிக வளாகங்கள் திறக்கப்படாததால், அதன் உரிமையாளர் மட்டுமின்றி, அங்கு பணிபுரிந்த ஊழியர்களும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலை இழப்பு
பஸ், ரயில் போக்குவரத்து இல்லாததால், பெரும்பாலானோரால் பணிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. தனியார் பஸ்கள் இயங்காததால், அதில் பணிபுரிந்த ஊழியர்கள், வேலை இழந்துள்ளனர்.மேலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, 'இ- - பாஸ்' நடைமுறை தொடரும் என, அரசு அறிவித்துள்ளது. தற்போது, திருமணம், இறப்பு, அவசர மருத்துவ சிகிச்சை போன்றவற்றுக்கு மட்டும், இ- - பாஸ் வழங்கப்படுகிறது; மற்றவற்றுக்கு வழங்கப்படுவதில்லை. இதனால், மக்கள் தங்களின், உறவினர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. வீடு கிரகப்பிரவேசம், பெண், மாப்பிள்ளை பார்த்தல் போன்ற நிகழ்வுகளை நடத்த முடியவில்லை. வியாபார நிமித்தமாக, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியவில்லை.
இ -- பாஸ் நடைமுறை, புரோக்கர்களுக்கு உதவியாக உள்ளது. சாதாரணமாக இணையதளத்தில், இ -- பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் கிடைப்பதில்லை. புரோக்கர்களிடம், 2,000 ரூபாய் கொடுத்தால், எந்த ஊருக்கு வேண்டுமானாலும், இ -- பாஸ் பெறும் நிலை உள்ளது.அதேபோல, அரசு பதவியில் உள்ளவர்களும், உயர் அதிகாரிகள் உதவியுடன், இ- - பாஸ் பெறுகின்றனர். சாதாரண மக்களால், இ- - பாஸ் பெற முடிவதில்லை.எனவே, அவர்கள் திருட்டுத்தனமாக செல்ல முயற்சிக்கின்றனர். அது, போலீசாருக்கு லஞ்சம் பெற வழிவகுக்கிறது.இம்மாதம் முழுதும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் எவ்வித தளர்வும் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படும் என, முதல்வர் அறிவித்துஉள்ளார்.
அனுமதி வேண்டும்
இந்த மாதம், 23, 30ம் தேதிகள், முகூர்த்த நாட்கள் என்பதால், அன்றைய தினம் ஏராளமானோர், திருமணம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். முழு ஊரடங்கு காரணமாக, அவர்கள் திருமணத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நாட்களில், திருமணம் நடத்த, அரசு அனுமதி அளிக்க வேண்டும்.இ -- பாஸ் நடைமுறையை, ரத்து செய்ய வேண்டும் அல்லது எவ்வித நிபந்தனையுமின்றி, விண்ணப்பிக்கும் அனைவருக்கும், இ -- பாஸ் வழங்க, அரசு உத்தரவிட வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE