அ.தி.மு.க.,வில், மாவட்டங்களை பிரித்து, புதிய மாவட்டங்கள் ஏற்படுத்துவதிலும், அவற்றுக்கான மாவட்டசெயலர்களை நியமிப்பதிலும், அமைச்சர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
அவர்களை கட்டுப்படுத்த முடியாமல், கட்சி தலைமை தவிப்பதால், ஒட்டுமொத்த கட்சியினரும், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பல மாவட்டங்களை பிரிக்க விடாமல், அமைச்சர்கள் முட்டுக்கட்டை போடுவதாகவும் கூறப்படுகிறது. அ.தி.மு.க.,வில், ஜெ., மறைவுக்கு பின், அமைச்சர்களின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோரால், அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.மாவட்டங்களில் அமைச்சர்கள் வைப்பதே சட்டமாக இருப்பதால், முன்னாள் அமைச்சர்கள்மற்றும் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.
தலைமை முடிவு
இதே நிலை நீடித்தால், சட்டசபை தேர்தலை சந்திப்பது கடினம் என்பதால், அனைத்து மாவட்டங்களையும் பிரித்து, முன்னாள் அமைச்சர்களுக்கும், அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளுக்கும் கட்சிப் பதவி வழங்க, கட்சி தலைமை முடிவு செய்தது.அதன்படி, ஜூலை, 25ம் தேதி, 29 மாவட்ட செயலர்களுக்கான அறிவிப்பு வெளியானது.திருவள்ளூர் மாவட்டத்தில், இரண்டு தொகுதி களுக்கு, ஒரு மாவட்ட செயலர் நியமிக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர்கள் மூர்த்தி, ரமணா ஆகியோருக்கு, மாவட்ட செயலர் பதவி வழங்கப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டத்தில், மூன்று தொகுதி களுக்கு, ஒரு மாவட்ட செயலர் நியமிக்கப்பட்டார். செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலராக, முன்னாள் எம்.பி., ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் சின்னையாவை சமாதானப்படுத்த, எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் பதவி வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில், அமைச்சர் பாண்டியராஜனுக்கு, மாவட்ட செயலர் பதவி வழங்க முடியாததால், அவருக்கு கொள்கை பரப்பு துணைச் செயலர் பதவி வழங்கப்பட்டது.திருவள்ளூர் மாவட்டத்தில், இரு தொகுதிக்கு, ஒரு மாவட்ட செயலர் நியமித்தது போல, பல மாவட்டங்களை பிரிக்க முடியவில்லை.விழுப்புரம் மாவட்டத்தை பிரிக்க, சட்டத்துறை அமைச்சர் சண்முகம் சம்மதிக்கவில்லை.
ஆறு தொகுதிகளை உள்ளடக்கிய, விழுப்புரம் மாவட்ட செயலராக, சண்முகம் தொடர்கிறார். மாவட்டம் பிரிக்கப்பட்டு, மாவட்ட செயலர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த, முன்னாள் எம்.பி., லட்சுமணன் ஏமாற்றம் அடைந்துள்ளார்.அதேபோல, ஐந்து தொகுதிகளை உள்ளடக்கிய, கள்ளக்குறிச்சி மாவட்டமும் பிரிக்கப்படவில்லை.அதன் மாவட்ட செயல ராக, முதல்வரின் நண்பரான, எம்.எல்.ஏ., குமரகுரு உள்ளதால், அதுவும் பிரிக்கப்படவில்லை என, கூறப்படுகிறது. கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில், ஐந்து சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதன் மாவட்ட செயலராக, அமைச்சர் வேலுமணி உள்ளார்
.இதன் காரணமாக, அங்கும் கூடுதல் மாவட்டம் உருவாக்கப்படவில்லை.திண்டுக்கல் மாவட்டம், இரண்டாக பிரிக்கப்பட்டு, அமைச்சர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர், மாவட்ட செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.திருநெல்வேலி மாவட்டத்தில், ஐந்து சட்ட சபை தொகுதிகள் இருந்தும், மாவட்டம் பிரிக்கப்படவில்லை. அங்கு மாவட்டத்தை பிரித்தால், மனோஜ்பாண்டியனுக்கு மாவட்ட செயலர் பதவி தர வேண்டும் என்பதால், அது கைவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அமைச்சர்களின் மாவட்டங்கள் பிரிக்கப்படாதது, அங்குள்ள கட்சியினரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள, மாவட்ட செயலர்கள் கண்டிப்பாக, சட்டசபை தேர்தலில் போட்டியிடுவர். மீதமுள்ள தொகுதிகளில், அவர்களின் ஆதரவாளர்களை நிறுத்துவர் என்பதால், மற்ற நிர்வாகிகள் கவலை அடைந்துள்ளனர்.
எதிர்ப்பு
மேலும்,சென்னை, நாமக்கல் உட்பட பல மாவட்டங்களை பிரிக்க, மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அங்கும் பிரிப்பு நடவடிக்கை கைவிடப்பட்டு உள்ளது. இதனால், நிர்வாகிகள் பெரும்பாலானோர் அதிருப்தியில் உள்ளனர். சென்னையில், மாவட்ட செயலர்கள் மீது, மக்களிடமும், கட்சியினரிடமும் கடும் அதிருப்தி காணப்படுகிறது. இவர்களை மாற்றி விட்டு, புதியவர்களை களத்தில் நிறுத்தினால் தான், கட்சி இழந்த செல்வாக்கை, திரும்ப பெற முடியும்.
இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அமைச்சர்கள் சிலரை மீறி, கட்சி தலைமையால் செயல்பட முடியவில்லை. முதல்வருக்கு ஆதரவாகவும், துணை முதல்வருக்கு எதிராகவும் இருப்போருக்கு மட்டுமே, சில அமைச்சர்கள் சிபாரிசு செய்வதால், கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இந்த அமைச்சர்கள் ஆதரவு இருப்பதால், பல மாவட்ட செயலர்கள், மாவட்டத்தை பிரிக்க விடாமல், தலைமைக்கு எதிராக கொடி பிடிக்கின்றனர். பிரிக்கப்பட்ட மாவட்டங்களிலும், அமைச்சர்கள் தங்கள் ஆதரவாளர்களையே, மாவட்ட செயலர்களாக நியமித்துள்ளனர்.மேலும், அவர்களுக்கு தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதால், மற்ற நிர்வாகி கள் சோர்வடைந்துள்ளனர். நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரி செய்யாவிட்டால், தேர்தலில், கட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE