கோவை:கோவை மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பின், 90 சதவீதம் மாநகராட்சி பகுதிக்குள் மட்டுமே ஏற்பட்டுள்ளதால், தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஜூலை 31ம் தேதி நிலவரப்படி, 4,821 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியது உறுதி செய்யப்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் ஊராட்சி பகுதிகளில், அங்கொன்றும் இங்கொன்றும்தான் பாதிப்புகள் இருந்தன. மாநகராட்சி பகுதிகளில் இருந்து, தொற்று பிற இடங்களுக்கும் பரவி வருவதாக கூறப்படுகிறது.
இதனால், நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஊராட்சித்துறை அலுவலர்கள் வழக்கமான பணிகளை காட்டிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜூலை 31ம் தேதி நடந்த அமைச்சர் தலைமையிலான ஆய்வு கூட்டத்தில் பகுதிவாரியாக பாதிப்பு எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன் படி, மொத்த பாதிப்பில், 3,988 (தற்போது சிகிச்சை பெறுவர் எண்ணிக்கை- 1281 ), மாநகராட்சி எல்லைக்குள் மட்டுமே ஏற்பட்டுள்ளது.
மொத்தமுள்ள, 100 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளில் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் மேலும் அதிகரிக்காத வகையில், தொழில் நிறுவனங்களை ஆய்வு செய்து வடமாநில தொழிலாளர் கணக்கெடுப்பு, புதிய நபர்கள் வரவு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு, மருத்துவ முகாம், விழிப்புணர்வு, கிருமிநாசினி தெளிப்பு என தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 'பாதிப்பு குறைந்து விடும்'கலெக்டர் ராஜாமணி கூறுகையில், ''கோவையில் மொத்த பாதிப்பில், 90 சதவீதம் மாநகராட்சி பகுதிக்குள் தான் உள்ளது.
தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன. மருத்துவ முகாம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி முழுமையாகவும், பிற அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டதால் நல்ல பலன் கிடைத்துள்ளது. தற்போதுள்ள நிலையை கருத்தில் கொண்டால், எதிர்வரும் பத்து நாட்களில் பதினைந்து நாட்களில், படிப்படியாக கோவையில் பாதிப்பு எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.
இது புறநகர் பட்டியல்
மேட்டுப்பாளையம் நகராட்சி மொத்த பாதிப்பு 58 (தற்போது சிகிச்சை பெறுபவர்-15), பொள்ளாச்சி நகராட்சி 37 (24), வால்பாறை நகராட்சி 7 (1), பெரியநாயக்கன்பாளையம் 89 (22), அன்னுார் 77 (20), மதுக்கரை 76 (32), சூலுார் 47 (12), காரமடை 39 (9), சர்க்கார் சாமக்குளம் 57 (27), தொண்டாமுத்துார் 51 (23), பொள்ளாச்சி வடக்கு 32 (5), ஆனைமலை 25 (1), பொள்ளாச்சி தெற்கு 22 (2), சுல்தான்பேட்டை 14 (5), கிணத்துக்கடவு 28 (16) என்ற அளவில் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE