பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நிதி ஒதுக்கீடு: ஒரு போலீசுக்கு ரூ.1230 மட்டுமே! சிறப்பு ஊதியம் வழங்க வலுக்கிறது கோரிக்கை

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கோவை:கொரோனா ஊரடங்கு காலத்தில், பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் போலீசாருக்கு சிறப்பூதியம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழக காவல்துறையில் டி.ஜி.பி., அந்தஸ்தில் துவங்கி, காவலர்கள் வரையிலுமாக மொத்தம், ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 761 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. தற்போது ஒரு லட்சத்து 9,789 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 14 ஆயிரத்து 975 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சென்னை மாம்பலம் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய பாலமுரளி உட்பட 10 காவல்துறை அலுவலர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். நுாற்றுக்கணக்கான காவலர்கள், சிகிச்சை பெற்று மீண்டுள்ளனர். இவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகளை அதிகப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியை பல்வேறு துறைகளுக்கும் அனுப்பியுள்ளார், ம.தி.மு.க இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன். 'பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு என்னென்ன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன; என்.95 முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளதா' போன்ற கேள்விகளை கேட்டுள்ளார்.டி.ஜி.பி., அலுவலகத்திலிருந்து தரப்பட்ட பதிலில், 'என்.95, கிளவுஸ் எதுவும் காவல்துறையினருக்கு வழங்கப்படவில்லை. பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசம் போன்றவற்றை வழங்குவதற்காக ரூ.13 கோடியே 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.'கொரோனா காலத்தில் காவலர்களுக்கு சிறப்பு ஊதியம் எதுவும் தரப்படுவதில்லை; நாளுக்கு 250 ரூபாய் வீதம் படி வழங்கப்படுகிறது' என, பதில் கிடைத்துள்ளது. தற்போதுள்ள காவல்துறையின் எண்ணிக்கைக்கு, இந்த நிதியைக் கணக்கிட்டால், அதிகாரிகள் துவங்கி கீழ்நிலைக் காவலர் வரையிலும் ஒவ்வொருவருக்கும், 1230 ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மனுதாரர் ஈஸ்வரன் கூறுகையில், ''நான்கு மாதங்களாக கடுமையான சூழ்நிலையில் பணியாற்றி வரும் போலீசாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மிகவும் குறைவு. கூடுதல் பாதுகாப்பு உபகரணங்கள், தரமுள்ள முகக்கவசங்கள் வழங்கவும், சிறப்பு ஊதியம் வழங்கவும் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். நிதி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை வேண்டும்,'' என்றார்.கடுமையான சூழலில் பணியாற்றிவரும் போலீசார், சுகாதாரத்துறையினர், துாய்மைப் பணியாளருக்கு சிறப்பு ஊதியம் வழங்க அரசு முன் வரவேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசு இதில் விரைவாக முடிவெடுப்பது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X