சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

விரைவில் ஆசிரியர் ஆவேன்!

Added : ஆக 02, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 விரைவில் ஆசிரியர் ஆவேன்!


இரண்டு லட்சம் ஊழியர்கள் பணியாற்றும், 'காக்னிசன்ட்' கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்து, விருப்ப ஓய்வுபெற்றுள்ள ராம்குமார் ராமமூர்த்தி, 53: பிறந்தது கும்பகோணம் என்றாலும், படித்தது சென்னை தான். கம்ப்யூட்டர் கல்வி எல்லாம் கற்கவில்லை; பத்திரிகையியல் தான் படித்தேன். ஆரம்ப காலகட்டத்தில், தனியார் பள்ளிகளில், ஆசிரியராக பணியாற்றியுள்ளேன். இருபது ஆண்டுகளுக்கு முன், தகவல், தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்திருந்த காலகட்டம் அது. தகவல் தொடர்புக்காக, வேலையாட்கள் தேவைப்படுவர் என்ற எண்ணத்தில், ஜெர்னலிசம் படித்த நான், டி.சி.எஸ்., நிறுவனத்திற்கு விண்ணப்பித்தேன். வேலை கிடைத்தது; இரண்டரை ஆண்டுகள் அங்கு இருந்தேன்.பின், 1998ல், காக்னிசன்டில் சேர்ந்தேன். அப்போது, எங்கள் நிறுவனம் துவக்கி, நான்கு ஆண்டுகள் தான் ஆகி இருந்தது; 1,000 பேர் மட்டுமே பணியாற்றினர். அமெரிக்க நிறுவனம் ஒன்றின் தொழில்நுட்ப பிரிவாகத் தான், இந்த நிறுவனம் இந்தியாவில் இயங்கி வந்தது. எங்கள் நிறுவனத்தின் முன்னோடிகளில் ஒருவரான லட்சுமி நாராயணன், 'இந்த அமெரிக்க நிறுவனத்தில் பணியாற்றிய நான்கு பேர், அமெரிக்க அதிபராகியுள்ளனர். நீங்களும் நினைத்தால்,இந்த நிறுவனத்தில் எவ்வளவு உயரத்திற்கும் செல்ல முடியும்' என்றார்.அந்த வார்த்தைகள்எனக்குள் உத்வேகத்தை ஏற்படுத்தியது.ஒவ்வொரு நிலையாக உயர்ந்து, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ஆனேன். இதற்காக, 2௫ ஆண்டுகள், இந்த நிறுவனத்தில், இரவு, பகலாக பாடுபட்டேன். என் திறமையை பார்த்த பல நிறுவனங்கள், எனக்கு அழைப்பு விடுத்தன; அவற்றை புறக்கணித்து, இதிலேயே தொடர்ந்தேன்.எனக்கு சிறுவயது முதலே, ஆசிரியர் பணி மீது தான் அதிக காதல். காக்னிசன்டில் நல்ல நிலையில் இருக்கும் போதே, 50 வயதுக்கு பின் ஓய்வுபெற்று, ஆசிரியராக வேண்டும் என முடிவு செய்தேன். அதன்படி, இப்போது என் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்; விரைவில் ஆசிரியராக உள்ளேன்.எங்கள் நிறுவனம்சார்பில், தமிழக பல்கலைக் கழக துணைவேந்தர்களை சமீபத்தில் சந்தித்தேன். அப்போது, எனக்குள் இருந்த ஆசிரியர் ஆர்வம் அதிகரித்து விட்டது. எந்த கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக போகிறேன் என்பது தெரியவில்லை; பல நிறுவனங்கள் எனக்கு அழைப்பு விடுத்து உள்ளன. காக்னிசன்டில் இருந்து நான் விலகினாலும், என்னைப் போல பலர் அங்கு உள்ளனர்; நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் வராது; எனினும், அதன் இயக்குனர் குழுவில் தொடர்வேன்!
ஞானபீடம் வெல்ல வாய்ப்பில்லை!


இரண்டு முறை, 'சாகித்ய அகாடமி' விருது பெற்றுள்ள, அந்த விருது அமைப்பின் தமிழ் ஒருங்கிணைப்பாளராக இருக்கும்,'சிற்பி' பாலசுப்ரமணியம், 85: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள, ஆத்துப்பொள்ளாச்சி என்ற கிராமத்தில் பிறந்தவன் நான். கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர் என பல முகங்கள் எனக்கு உண்டு. இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருக்க காரணங்கள் இரண்டு. ஒன்று, பிறந்த நாள் முதல், இப்போது வரை, சைவ உணவுகளையே உண்டு வாழ்கிறேன். இரண்டு, நடைப்பயிற்சி. சிறு வயதில், பள்ளியில் படித்த போது, ஒவ்வொரு நாளும், 6 கி.மீ., நடந்து தான், பள்ளிக்கு சென்று வந்தேன். இன்றும் நடைப்பயிற்சி தொடர்கிறது.நான் மொழியின் காதலன். என்னால், எழுதாமலோ, படிக்காமலோ இருக்க முடியாது. அது, மூச்சு விடுவது போல, என்னுடன் உயிர்ப்புடன் உள்ளது. நான் எப்போதுமே, ஊர் சுற்றியாகத் தான் இருந்துள்ளேன். ஒவ்வொரு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில், இலக்கின்றி பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். அந்த பயணங்கள், வாழ்க்கையின் எல்லா பக்கங்களையும் எனக்கு காட்டின.இந்தியாவின் மூலை, முடுக்கெல்லாம் சுற்றியுள்ளேன். எனினும், எல்லா இடங்களிலும், தமிழனாகவே என் அடையாளத்தை காண்பித்து உள்ளேன். ஆசிரியர்களே என் மார்க்கதரிசிகளாக இருந்துள்ளனர். பள்ளிப்பருவத்தில், ஆசிரியர் சாமியாப்பிள்ளை மூலம் ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கற்றுக் கொண்டேன்.கல்லுாரி ஆசிரியர் கா.அப்துல் கபூரின் இனிய உறவால், தமிழ் மொழி மீது தீராத ஆர்வத்தை பெற்றேன். அறிஞர் கா.மீனாட்சிசுந்தரம் வாழ்க்கையால், நல்ல ஆசிரியராக இருந்தேன். பேராசிரியர் அண்ணாமலையால், கவிதை மீதான எல்லையற்ற காதலைப் பெற்றேன். இந்த நால்வரும், எனக்கு நான்கு திசைகள்.சாகித்ய அகாடமியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால், பல மொழி படைப்பாளிகளையும் அறியும் வாய்ப்பு கிடைத்தது. என் அனுபவத்தில் கன்னடம், மலையாளம், ஒடிசா, வங்க மொழிகளின் வளர்ச்சி, பிரமிப்பூட்டும் வகையில் உள்ளது. அகிலன், ஜெயகாந்தனுக்கு பிறகு, ஞானபீடம் விருது பெற்ற தமிழர்கள் யாரும் இல்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. தமிழ் படைப்பாளிகள், ஞானபீட பரிசு இறுதி பரிந்துரை குழுவில் இடம்பெற்றதில்லை. இடம்பெற்றாலும், தமிழ் மொழிக்கு பரிசு கிடைக்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு வேண்டும். மூன்றாவதாக, ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் திறம்பட வாதிட்டு, பிற மொழியாளர்களிடம் செல்வாக்கு செலுத்த வேண்டும். அந்த முயற்சி இல்லையேல், ஞானபீட விருது வெல்ல முடியாது!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rsudarsan lic - mumbai,இந்தியா
02-ஆக-202017:42:08 IST Report Abuse
rsudarsan lic மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. இது போன்ற மனித நேயமிக்க தமிழ் ஆர்வலர்கள் முயன்றால் தமிழனை பல மடங்கு உயர்த்தலாம்.
Rate this:
Cancel
Ganapathy - Bangalore,இந்தியா
02-ஆக-202008:54:01 IST Report Abuse
Ganapathy திரு ராம்குமார் ராமமூர்த்தி அவர்களின் சிந்தனை மற்றும் விருப்பம் போற்றத்தக்கது. சில வருடங்களுக்கு முன், எங்களது நிறுவனத்தில் புதிதாக ஒரு மென்பொருள் பயன்படுத்தினோம். அந்த மென்பொருளை எங்களுக்கு அறிமுகப்படுத்துவதர்காவும், அதில் உள்ள பயன்பாட்டுகளை விரிவுபடுத்துவதற்காகவும், அந்த மென்பொருவிற்பனையாளர் , டெல்டா மாவட்டத்தை சேர்ந்த கிராம பின்னணியில் உள்ள நபரை எங்களுக்கு அனுப்பி வைத்தார். நான் வேலை செய்த நிறுவனனத்தில், அகௌண்ட் பிரிவில் , பெரும்பான்மை தமிழர்களே. மேலே குறிப்பிட்ட அந்த நபர், நாங்கள் கூறும் பிரச்சனைகளுக்கு மிக எளிதாக தீர்வு கண்டோதோடு மட்டும் இல்லாமல், அந்த மென்பொருள் பயன்பாட்டை மிக எளிதாக புரியவைத்தார். அவருக்கு பேச்சு மற்றும் எழுத்து ஆங்கிலம் அவ்வளவா வரவில்லை, அனால், மென்பொருள் பற்றி லொஜிக்கல்ல நல்ல அறிவு பெற்றதினால், எங்களுடைய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு தந்தார். சுருக்க சொன்னால், அந்த நபரை போல பல ஆயிரம் மாணவர்கள் கிராமபுரத்தோடு ஒன்றி உள்ளனர், அவர்களது பிரச்சனை ஆங்கில பேச்சுவழக்கம், இதை திரு ராம் சார் தீர்த்துவைத்தல், தமிழக கிராமப்புற மாணவர்கள், பல தேசத்திற்கு சென்று , குன்றில் இட்ட விளக்கை இருக்கமுடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X