பிறக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் அமிர்தம் போன்றது. தாய்ப்பால் குறைபாடால், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகிறது. இதனால், பெரும்பாலான குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதை உணர்ந்த, அவிநாசியை சேர்ந்த ரூபா என்ற இளம்பெண், 'அமிர்தம் தாய்ப்பால்' என்ற பெயரில், தாய்ப்பால் தானம் பெறுவதை சேவையாகவே செய்ய துவங்கினார்.

சாப்ட்வேர் இன்ஜினீயராக, கோவையில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிகிறார். இந்த சேவையில் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட தாய்மார்கள் தங்களை இணைத்து கொண்டுள்ளனர்.
இந்த உன்னத சேவையை செய்து வரும் ரூபா கூறியதாவது: பிரசவித்த தாய்மார்கள், தங்கள் குழந்தைக்குப்போக எஞ்சிய தாய்ப்பாலை சேகரித்து, அவரவர் வீடுகளில் உள்ள குளிர்பதன பெட்டியில் சேகரித்து வைக்கின்றனர். அவற்றை மாதம் ஒருமுறை சென்று சேகரித்து, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு வழங்கி வருகிறேன். அங்கு மருத்துவர்களின் பலகட்ட பரிசோதனைக்கு பின், தாய்ப்பால் தேவைப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் அளிக்கும் ஒத்துழைப்பு, ஊக்கமே இந்த சேவையை தொடர முக்கிய காரணமாக உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டு சேவையில், இதுவரை, 800 லிட்டர் தாய்ப்பால் சேகரித்து வழங்கியுள்ளேன். தாய்ப்பால் பற்றாக்குறையுள்ள குழந்தைகள் உட்பட ஆதரவற்ற, அனாதையாக விடப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கு கூட இந்த தாய்ப்பால் கொடுக்கப்படுவதன் மூலம், அவர்கள் உயிர்பிழைத்து ஆரோக்கியத்துடன் வாழ்கின்றனர்.
இது, மனதுக்கு ஆத்ம திருப்தியை தருகிறது.தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணர்வு போதியளவில் இல்லை. இதை உணர்ந்து தாய்மார்கள் தாய்ப்பால் தானத்தில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு, ரூபா கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE