கோவை:கோவை மாவட்டத்தில், 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 418 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும், பாதிப்பின் வீரியம் பெரியளவில் இல்லை.கொரோனா பாதிப்பு வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் வயது வாரியாக அறிகுறிகள், பாதிப்பின் தீவிரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜூலை மாத இறுதி நிலவரப்படி,
கோவையில், 65 வயதுக்கு மேல், 558 பேருக்கும்,
46--64 வயது வரை 1,208 பேருக்கும்,
26--45 வயது வரை 1,766 பேருக்கும்,
18--25 வயது வரை 697 பேருக்கும்,
0--17 வரை 418 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டோர், பெண்களை விட ஆண்களே அதிகம். பச்சிளம் குழந்தைகள் ஐந்து பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பூரண நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும், பாதிப்பின் வீரியம் பெரியளவில் இல்லை.

வெளிமாவட்டத்தினரால் பாதிப்பு
கடந்த, மார்ச், ஏப்., மே மாதங்களில் வெளிநாடுகள், மாநிலங்களில் இருந்து வருபவர்களே, பெரும் அச்சுறுத்தலாக இருந்தனர். இவர்களை விட அண்டை மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது. டில்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் மற்றும் குடும்பத்தினர் உட்பட 136 பேர், வெளிநாடு சென்று திரும்பியவர்கள் 22 பேர், பிற மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் 46 பேர், பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் 2,454 பேர், தொற்று ஏற்பட்டவர்களின் குடும்பத்தினர், 2008 பேருக்கு, ஜூலை இறுதி நிலவரப்படி தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கோவைக்கு விமானத்தில், 33 ஆயிரத்து 122 பேர் வருகை புரிந்ததில், 154 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE