ஜோகன்னஸ்பர்க்: உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில், இந்தியா ரஷ்யா ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நேற்று ஒரேநாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதையடுத்து, அங்கு ஒட்டுமொத்த பாதிப்பு, 5 லட்சத்தைக் கடந்தது. இதையடுத்து, அதிக பாதிப்புகளைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தை எட்டிப் பிடித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க வைரலாஜி வல்லுநர் டெனிஸ் சோப்ரா கூறுகையில், ''கொரோனாவின் ஒட்டுமொத்த பாதிப்பைவிட, உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகத்தான் இருக்கும். ஏனென்றால், குறைவான பரிசோதனை உள்ளிட்ட காரணங்களால் பாதிப்பு அளவு குறைவாகவே இருக்கிறது. இருந்தும் தென் ஆப்பிரிக்காவில் இதுவரை, 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பாதிப்பு மேலும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதே வேகத்தில் சென்றால், 10 லட்சத்தை விரைவில் எட்டிவிடுவோம். இந்த எண்ணிக்கையெல்லாம் குறைவான மதிப்படுதான். இந்த வைரஸ் நீண்டகாலம் நம்மோடு இருக்கப்போவதால், அதை கடக்க நாமக்கு அதிக ஆண்டுகள் தேவைப்படும்,'' என்றார்.

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவுடன் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கடும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பொருளாதார பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்றதால், கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால், தற்போது தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு பாதிப்பு உறுதியாகி வருகிறது. இதனால், நோயாளிகளைச் சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனைகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், இம்மாத இறுதி அல்லது செப்., மாதத்தில்தான் தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடையும் என, மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ளனர். மேலும், உலகின் கொரோனா பாதிப்பில் 50 சதவீதம் பாதிப்பு, ஆப்பிரிக்காவின் 54 நாடுகளில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் தென் ஆப்பிரிக்காவில் வேலையின்மை அளவு 30 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பைச் சமாளிக்கத் தேவையான மருந்து, மாத்திரை, உபகரணங்களை போதுமான அளவில் மருத்துவமனைகளுக்கு அனுப்ப முடியாமல் அரசு திணறி வருகிறது. இதற்காக சர்வதேச நிதியத்திலிருந்து 430 கோடி டாலர் கடனாகப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE