அயோத்தி: ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்காமல், புறக்கணிக்கப்படும் நிலையிலும், அது குறித்து எதுவும் பேசாமல் அவை மவுனம் காப்பதன் பின்னணி தெரியவந்துள்ளது.
அயோத்தி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. சிவசேனாவுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமரை எதற்கெடுத்தாலும் விமர்சித்து, 'டுவிட்டரில்' பதிவிடும் காங்., எம்.பி., ராகுல், அயோத்தி விழா பற்றி, இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக, உ.பி., மாநில எதிர்க்கட்சி தலைவர்கள் மாயாவதி, அகிலேஷும் கூட மவுனம் காத்து வருகின்றனர். 'அடிக்கல் நாட்டு விழா குறித்து யாரும், எதுவும் பேசக் கூடாது' என, நிர்வாகிகளுக்கும் இந்த கட்சிகளின் தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'டிவி' சேனல்களில் நடத்தப்படும் விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் எனவும், தங்கள் நிர்வாகிகளை, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன. பா.ஜ., விரிக்கும் வலையில் சிக்க கூடாது' என, எதிர்க்கட்சிகள் கருதுவதே இதற்கு காரணம். பா.ஜ.,வை பொருத்தவரை, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை பெரும் சாதனையாக கருதுகிறது. 2022ல் நடக்க உள்ள, உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில், இதை வைத்து பிரசாரம் செய்ய, பா.ஜ., இப்போதே திட்டமிட்டுள்ளது.

அதனால், ராமர் கோவில் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து, பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஹிந்துக்கள் திரள, நாமே வாய்ப்பு ஏற்படுத்தி தந்துவிடக் கூடாது என, எதிர்கட்சிகள் கருதுகின்றன. அதனால் தான், அயோத்தியில் கோவில் கட்டுவதை நாங்கள் விரும்புகிறோம் என்பதை தெரிவிக்கும் வகையில், அடிக்கல் விழா முடிந்த பின், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ், அயோத்திக்கு சென்று வழிபாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.
அதேபோல், கொரோனா ஊரடங்கு முடிந்ததும், காங்., பொதுச் செயலர் பிரியங்காவும் அயோத்திக்கு செல்வார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE